

மீண்டும் விவாத மேடையின் மையத்துக்கு வருகிறது நிலம் கையகப்படுத்தல் விவகாரம். நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நிலையில், வளர்ச்சிப் பணிகளுக்காகத் தேவைப்படும் நிலங்களை அளிப்பதற்கு மாநில அரசுகளே உரிய சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என்ற முடிவை நோக்கி மத்திய அரசு நகர்ந்திருக்கிறது. நிலம் கையகப்படுத்தல் முன்வடிவுக்கு எதிராக எழுந்த நாடு தழுவிய எதிர்ப்பு, புதிய மசோதா நிறைவேறுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை எனும் நெருக்கடி, அடுத்தடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஆகியவற்றின் பின்னணியில் அரசு எடுத்திருக்கும் முடிவு இது. எனினும், இதன் பின்னணியிலுள்ள சாதுரியமான அரசின் யோசனைகள் புரியாமல் இல்லை.
நிலம் என்பது மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டுக்கும் பொதுவான அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நிறைவேற்றினாலும் அதனுடைய நேரடி ஆட்சிக்கு உட்பட்ட ஒன்றியப் பிரதேசங்களைத் தவிர, ஏனைய நிலங்கள் அனைத்தும் மாநிலங்களின் வசம்தான் இருக்கின்றன. ஆக, மத்திய அரசு எந்தப் பெரும் தொழிற்திட்டத்தைக் கொண்டுவந்தாலும், மாநில அரசுகளின் உதவியின்றி அது நிறைவேற வழியில்லை. மேலும், மத்திய அரசு கொண்டுவரும் நிலம் கையகப்படுத்தும் சட்ட முன்வடிவைக் கொள்கை அளவிலும் அரசியல் பின்னணியிலும் எதிர்த்தாலும், பல மாநில அரசுகள் தமக்கெனத் தேவை வரும்போது, எந்த நிலத்திலும் கை வைக்கத்தயங்காதவை. எல்லாவற்றுக்கும் மேல், பாஜக கையில் எட்டு மாநில அரசுகள் இருக்கின்றன. பெருந்தொழில் நிறுவனங்கள் கோரும் பெரும்பாலான இடங்களை இங்கு காட்ட முடியும். இத்தகைய சூழலில்தான் பந்தை மாநிலங்களை நோக்கித் திருப்புகிறது மத்திய அரசு.
அரசியல்ரீதியாக இனி கொஞ்சம் கொஞ்சமாக நிலம் விவகாரத்திலிருந்து மீண்டுவிட பாஜக அரசுக்கு இம்முடிவு உதவலாம். ஆனால், அக்கறையுள்ள ஆளும் கட்சியாக அது செய்ய வேண்டிய காரியங்கள் நிலம் சார்ந்து நிறைய இருக்கின்றன.
உலக நாடுகளின் அனுபவங்களைப் பார்க்கும்போது, இந்தியத் தொழில் துறையினர் தங்களுக்குக் கிடைக்கும் நிலங்களை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை இந்த அரசு புரிந்துகொள்ளலாம். இந்தியாவிலேயே உள்ள உதாரணம், ஜப்பானிய நிறுவனங்கள். இந்தியாவில் விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்று கருதப்படும் 220 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் வெறும் 10%-க்கும் குறைவான நிலங்களையே பயன்படுத்துகின்றன. ஆனால், ஏனைய நிறுவனங்களின் உற்பத்தியைப் போல மூன்று மடங்கு, அதாவது 300% உற்பத்தியை அவை அளிக்கின்றன. இதன் பின்னணி என்ன? திட்டமிடல். இந்தியாவைப் போல நினைத்தவுடன் நிலங்களை ஜப்பானில் வாரிக்கொள்ள முடியாது.
இந்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஒதுக்கிய பெரும் பகுதி நிலம் பெருநிறுவனங்களால் எந்தப் பயன்பாடும் இல்லாமல் இருக்கின்றன அல்லது கூடுதலாக வளைத்துப்போடப்பட்டிருக்கின்றன. நாட்டின் எதிர்காலத்தையும் தங்கள் சமூக எதிர்காலத்தையும் கருதி இந்த நிலங்களை வழங்கிவிட்டு இன்று கண்னீரோடு அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் துயரம் நீக்கப்பட வேண்டும். அரசு இந்த நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். இதுவரை விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள் தொடர்ந்து இதற்காகவும் குரல் கொடுக்க வேண்டும். மேலும், இனி மாநில அரசுகளின் மீதும் ஒரு கண் வைக்க வேண்டும்!