Published : 24 Jul 2015 10:20 AM
Last Updated : 24 Jul 2015 10:20 AM

எந்த அளவுக்கு முக்கியமானவர் தலைமை நீதிபதி?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்பவர், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்குள் தலைமையானவரா, இந்தியாவின் நீதித் துறைக்கே தலைவரா என்று விளக்கம் தெரிவிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி குரியன் ஜோசப், கடந்த வாரம் விளக்கம் கேட்டிருக்கிறார். ‘இந்த இரண்டில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது. இது தெரியாமல் ஏன் நீதிபதி ஜோசப் குழம்பியிருக்கிறார்?’ என்றுகூடச் சிலருக்குத் தோன்றலாம். நீதிபதியின் கேள்வி அர்த்தபுஷ்டியானது.

உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை ‘தேசிய நீதித் துறை நியமன ஆணையத்துக்கு’ (என்.ஜே.ஏ.சி.) வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இந்த முடிவு சரியா என்ற வழக்கு இப்போது நடக்கிறது. இந்த ஆணையத்தில் ஆறு உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் அவர்களில் ஒருவர். இந்த ஆணையம் மூலம்தான் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டுமா, பழைய முறையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகளைக் கொண்ட நீதித் துறை தேர்வுக்குழு மூலமே நியமிப்பது சரியா என்ற விவாதம் நடந்துவருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதுதான் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அரசியல் சட்டத்தின் 124-வது பிரிவு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமிப்பது தொடர்பானது. அதில், ‘இந்தியாவின் தலைமை நீதிபதி’ என்றே அவர் குறிக்கப்படுகிறார். அரசியல் சட்டத்தின் 3-வது அட்டவணையில் உள்ள ‘பதவிப் பிரமாண முறைகளும், அறிவித்தல் களும்’ என்ற தலைப்பில், ‘இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி’ என்றே குறிக்கப்படுகிறார். நீதி நிர்வாக நடைமுறைகளில், தலைமை நீதிபதியானவர் உச்ச நீதிமன்றத்தின் இதர நீதிபதிகளுக்குள்ள அந்தஸ்தையே பெறுகிறார். நீதித் துறை தொடர்பான நியமனங் களின்போதும் அரசுக்கு எழும் சந்தேகங்களுக்குத் தீர்வுகாணும் நிலையிலும் ஒட்டுமொத்த நீதித் துறையின் ‘தந்தை ஸ்தானத்தில்’ செயல்படுகிறார். அதிகாரவர்க்கம் அல்லது சட்டமியற்றும் நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றம்போல நீதித் துறைக்குக் கூட்டாட்சித் தன்மை அம்சம் கிடையாது. நீதித் துறை என்பது ஒரே அதிகாரக் கட்டமைப்புதான், உச்ச நீதிமன்றம் அதன் உச்சத்தில் இருப்பது. உச்ச நீதிமன்றம் அறுதியிட்டுக் கூறும் சட்டம்தான் நாடு முழுவதற்கும் செல்லும் என்று அரசியல் சட்டத்தின் 141-வது பிரிவு கூறுவதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம்.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இரு மூத்த நிதிபதிகளும் முதலில் இடம்பெற்றனர். இந்த மூவர் குழு 1998-ல் ஐவர் குழுவானது. தேசிய நீதித் துறை நியமன ஆணையத்தில் இப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இரு மூத்த நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர். கூடவே, மத்திய சட்ட அமைச்சரும், இரு பிரபலஸ்தர்களும் இடம்பெறுமாறு ஆணையம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்தக் குழுவில் வெறும் உறுப்பினராக நீடிக்கிறாரா, நியமனத்தில் அரசுக்கு ஆலோசனை கூறும் தலைமை ஆலோசகர் என்ற அந்தஸ்தை இழக்கிறாரா என்பதே இப்போதைய கேள்வி. அதாவது, நீதித் துறையில் உயர் பதவிகளுக்கான நியமன அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருக்கிறதா அல்லது நிர்வாகத் துறையுடன் அதை அவர் பகிர்ந்துகொள்ள வேண்டுமா? இதற்கான பதில் எப்படி இருந்தாலும், நீதித் துறையின் சுயேச்சைத்தன்மையும் தலைமை நீதிபதியின் அதிகாரமும் நிர்வாகத் துறையால் பாதிக்கப்படக்கூடாததாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த நாட்டு மக்களின் இறுதி நம்பிக்கை பீடம் உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி அதன் தலைவர் மட்டும் அல்ல; அந்த நம்பிக்கையின் காவலரும்கூட!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x