

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, தேடப்பட்டு வரும் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனருக்கு அடைக்கலம் கொடுத்ததாக, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, மகனை, நாமக்கல் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). காதல் விவகாரம் தொடர்பாக அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்தது.
அதுதொடர்பாக திருச்செங்கோடு நகர காவல்துறையினர் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தலைமறைவாக உள்ள சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ், அருண் உள்ளிட்டோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் யுவராஜுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூரை சேர்ந்த தங்கராஜ், அவரது மகன் தங்கச்செழியன் ஆகிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதையடுத்து இருவரும் நாமக்கல் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், நீதிபதி ராஜேஷ்கண்ணா உத்தரவின்படி இருவரும் திருச்செங்கோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே நீதிமன்றத்தில் சரண் அடைந்த சிவக்குமாரை காவல் துறையினர் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.