

நாட்டிலுள்ள அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டு வருவதில் அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து ஆர்வத்தோடு இருக்கின்றன. கூடவே, பண அடிப்படையிலான பரிவர்த்தனையைக் குறைத்து, பண அட்டை அடிப்படையிலான பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும் யோசிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைவருக்கும் தொடர்ச்சியாக நிதிச் சேவைகள் கிடைக்கப் பிற நாடுகளில் என்னென்ன வழிகளில், எந்தெந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய ரிசர்வ் வங்கி ஒரு குழுவை நியமித்திருக்கிறது. நல்ல விஷயம். பிற நாடுகளில் வெற்றிகரமாக அமல்படுத்தப்படும் வழிமுறைகளிலிருந்து நாமும் பயன் பெற முடியும் என்பதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக, சீனத்தின் கிராமப்புறப் பகுதிகளில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட பயன்பாட்டு அட்டைகள் தரப்படுகின்றன. பிரேசிலில் கிராமப்புற வங்கி முகவர்கள், கடன் அட்டைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள உதவுகின்றனர். கென்யாவில் செல்பேசிகளும் வங்கிப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதெல்லாம் சரிதான். ஆனால், இந்தியா தன்னிடம் உள்ள குறைகளைக் களைவது எப்படி என்று முதலில் யோசிக்க வேண்டும்.
ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிக் கணக்கு தொடங்குவது தொடர்பாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய அரசு பேசிவருகிறது. தற்போதைய பிரதமர் மோடி, “வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புகூட இல்லாமல் கணக்கு வைத்துக்கொள்ளலாம்” என்ற அறிவிப்புடன் கொண்டுவந்த ‘ஜன் தன் திட்டம்’ஒரு சாதனைத் திட்டம். கிட்டத்தட்ட 17 கோடிப் பேர் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், பலன் என்ன? இவற்றிலும் சரிபாதிக் கணக்குகளில் பணம் ஏதும் இல்லை. ஏன், மக்களிடம் பணம் இல்லையா, பணமே இல்லாமல் தான் நாட்களை நகர்த்துகிறார்களா? அடிப்படையில் என்ன காரணம் என்றால், வங்கிச் சேவையை மக்களிடம் ஒரு கலாச்சாரமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரக்ஞை இன்னும் நம் அரசிடமும் வங்கித் துறையிடமும் வரவில்லை. தவிர, தனியார் வங்கிகளின் வருகைக்குப் பிறகு, வங்கிச் சேவையானது முழுக்க முழுக்க வங்கித் தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஒரு சின்ன உதாரணம், தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரங்களின் (ஏடிஎம்கள்) பயன்பாடு. வங்கிச் சேவையை எளிமையாக்கி, மக்களிடம் வங்கிகளுடனான உறவை நெருக்கமாக்கியதிலும், கணிசமான மக்களின் வரவு-செலவை அதிகாரபூர்வக் கணக்காக்கியதிலும் தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரங்களின் வருகை முக்கியமானது. ஆனால், ஒரு மாதத்துக்கு இத்தனை முறைதான் பயன்படுத்த வேண்டும், அந்த வரையறையைத் தாண்டுபவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்து மக்களைத் துரத்திக் கொண்டிருக்கின்றன நம்முடைய வங்கிகள். எல்லாவற்றையும் லாப அடிப்படையில் மட்டுமே ஒரு தொழிலில் அணுக முடியுமா, என்ன?
இந்தியாவில் உள்ள 6.5 லட்சம் கிராமங்களில், 2 லட்சம் கிராமங்களுக்கு மட்டுமே வங்கித் துறை சேவை கிடைக்கிறது. சாமானியர்களை நோக்கிச் செல்வதிலும் வங்கிகளுக்குத் தயக்கம் இருக்கிறது. இன்னமும் சாமானிய மக்களுக்கு அந்நியமாகவே வங்கி நடைமுறைகள் இருக்கின்றன. செல்பேசி ரீசார்ஜ் தொழில்நுட்பம் இந்த நாட்டில் எவ்வளவு எளிமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது! இதைப் பற்றியெல்லாம் அரசும் ரிசர்வ் வங்கியும் முதலில் நம்முடைய வங்கியாளர்களிடம் பேச வேண்டும். எந்த வெளிநாட்டு அனுபவமும் உள்நாட்டு யதார்த்தத்தோடு ஒன்று கலக்க வேண்டும் அல்லவா?