

சிந்தனையாளர் வால்டேர் மறுபடியும் பிறப்பெடுத்து வந்து மனித குலத்தின் எதிர்காலம்பற்றி ஒரு கடிதம் எழுதுவதுபோல், ஈ.எம். ஃபாஸ்டர் ஓர் உரைச் சித்திரத்தை 1958-ல் எழுதினார். அந்தக் கடிதத்தை யாருக்கு அனுப்புவதென்று வால்டேருக்குத் தெரியவில்லை. ஏனென்றால், உலகில் உள்ள சக்ரவர்த்திகளும் சக்ரவர்த்தினிகளும் சர்வாதிகாரிகளும் கல்வியறிவில் மோசமானவர்களாகவும் பண்பாடற்றவர்களாகவும்தான் இருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் தன் கடிதத்தை வரவேற்கக்கூடிய ஒரே ஒரு நபராக வால்டேரின் கண்களுக்கு ஜவாஹர்லால் நேருதான் தென்படுகிறார். உடனடியாக, கடிதம் எழுதுவதற்காக வால்டேர் உற்சாகத்துடன் பேனாவை எடுக்கிறார். இப்படியாக அந்த உரைச்சித்திரம் போகிறது.
உண்மையில், ஓர் உலகத் தலைவராகவே நேரு விளங்கினார். பிற நாடுகளுடன் நன்னம்பிக்கை அடிப்படையிலான நட்புறவுதான் கொள்ள வேண்டும் என்று ஆசிய ஜோதியை ஏற்றிவைத்தவர் அவர்.
காந்தி போன்று உலக மக்கள் பலராலும் கொண்டாடப்பட்டவர் நெல்சன் மண்டேலா. காந்தியால் கவரப்பெற்றவர் அவர் என்ற போதிலும் “தனது நாயகன் நேருதான்” என்று அவர் பெருமையுடன் சொன்னார். நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுடனான வர்த்தக உறவை முதன்முதலில் துண்டித்துக்
கொண்ட நாடு இந்தியா. அதுமட்டுமல்லாமல், 1955-ல் சர்வதேச மாநாடு ஒன்றில் நேரு பேசியபோது ‘ஆப்பிரிக்காவின் துயரத்தைவிடக் கொடூரமான ஒன்றைக் கடந்த சில நூற்றாண்டுகளாக வேறெந்த நாடும் அனுபவித்ததில்லை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தவிர, போராடுவதில் நேரு காட்டிய துணிச்சல் போன்றவையும் சேர்ந்து அவரை மண்டேலாவின் நாயகராக ஆக்கியிருக்கிறது.
அதேபோல், சோவியத் ரஷ்யாவை ஜனநாயகத்தின் பாதையில் செலுத்தியதில் முக்கியப் பங்குவகித்த கொர்ப்பசேவின் ஆளுமை உருவாக்கத்திலும் நேரு முக்கியப் பங்குவகித்தார்.
நேரு தன் நாட்டு மக்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதையும் அண்டை நாட்டினரிடமும் பிற நாட்டினரிடமும் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் கொண்டு பிற நாட்டினரிடம் உருவான மனப் பதிவுகள்தான் இவையெல்லாம்.
ஜனநாயகத்தின் மீதும் பன்மைக் கலாச்சாரத்தின் மீதும் பிற நாடுகளுடன் கொள்ள வேண்டிய நல்லுறவு மீதும் நேருவுக்கு அளப்பரிய பற்று இருந்தது. இன்று, இதே காரணங்களுக்காக நேருவின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்பதுதான் துரதிர்ஷ்டம். ஒருவகையில் இதுபோன்ற விமர்சனங்கள் காந்தி மீதும் இன்னபிற தலைவர்கள் மீதும் வைக்கப்படுபவைதான். இந்தியா என்பது எத்தனையோ இனங்களையும் மொழிகளையும் உள்ளடக்கிய சிக்கலான ஒரு நாடு. எல்லோரையும் நூறு சதவீதம் திருப்திப்படுத்துவது என்பதோ எல்லா சிக்கல்களையும் முற்றிலும் களைவது என்பதோ சாத்தியமே இல்லாத காரியம். இதில் ஏற்பட்ட தோல்விகளுக்காகத்தான் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுப்பப் படுகின்றன. தோல்வியைவிட அவர்கள் இதில் அடைந்திருக்கும் வெற்றி மகத்தானது; ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரியாது. அந்த வெற்றிக்குப் பெயர்தான் இந்திய ஜனநாயகம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு மறைந்து சரியாக 50 ஆண்டுகள் கழித்து தேசம் ஒரு திருப்புமுனை கட்டத்தில் நிற்கிறது. இந்தத் தருணத்தில் நாட்டின் புதிய பிரதமராக மோடி பதவியேற்கிறார். மோடிக்கு அத்தனை உவப் பானவர்களில் ஒருவரல்ல நேரு என்றாலும், இந்திய மக்களையும் அண்டை நாடுகளையும் சர்வதேச நாடுகளையும் அரவணைத்துச் செல்வதில் நேரு காட்டிய திசைகளை மோடி நிராகரித்துவிடக் கூடாது என்பது மிகவும் முக்கியமானது. முதல் பொதுத்தேர்தலின் போது நேரு ஆற்றிய உரையில் இடம்பெறும் இந்த வாசகங்கள் இந்தத் தருணத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும்:
“நான் அடிக்கடி சொல்லிவரும் ஒரு விஷயத்தைக் குறித்து மேலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டில் இருக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும், பொருளாதாரரீதியிலும் கல்விரீதியிலும் பின்தங்கி, நாட்டு மக்கள்தொகையில் பெரும் பகுதியினராக இருப்பவர்களுக்கும் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. நமது உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறோம். நமது கடமைகளையும் பொறுப்புகளையும் நினைவில் கொள்வது அதைவிடவும் முக்கியம்.”