

அரசியல் கட்சிகள் என்பவை அடிப்படையில் மக்களின் பிரதிநிதிகள். அப்படிப்பட்டவை எப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விவரங்களைக் கேட்டால், மக்களுக்குத் தகவல்களைத் தரத் தயங்கலாம்? உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறது. தேசியக் கட்சிகளிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகளையும் தனது விசாரணை வரம்புக்குள் கொண்டுவர ‘மத்திய தகவல் ஆணையம்’ முற்பட்டபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அவ்வாறு கேட்க முடியாதபடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவரப் பரிசீலித்தது. எல்லாக் கட்சிகளின் ஆதரவும் இதற்குப் பின்னணியில் இருந்ததைச் சொல்ல வேண்டியதில்லை.
மத்திய தகவல் ஆணையம் இதுதொடர்பாக ஆணை பிறப்பித்தது. அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கவில்லை; கட்டுப்படவும் இல்லை. தன்னுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்காத அரசியல் கட்சிகள் மீது தன்னால் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்ட மத்திய தகவல் ஆணையம், தகவல்களைத் தருமாறு அரசியல் கட்சிகளுக்குத் தான் பிறப்பித்த ஆணை இறுதியானது, அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடியது என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் வலியுறுத்தியது. இந்த வழக்கில் இன்னொரு பிரதிவாதியான மத்திய தேர்தல் ஆணையத்தாலும் அரசியல் கட்சிகளின் நிதிநிர்வாக நடைமுறைகளைக் கேள்வி கேட்க முடியவில்லை. அதற்கான திறனும் அதிகாரமும் அதற்கு வழங்கப்படவில்லை. ரூ. 20,000-க்கு மேல் பெறும் நன்கொடைகளைப் பற்றிய விவரங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், அவ்வாறு கிடைக்கும் நன்கொடைகளைக்கூடக் குறைத்துக் காட்டிவிடுகின்றன கட்சிகள்.
அரசியல் கட்சிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் தரும் நன்கொடை, விருப்பப்படி அளிக்கப்படுபவை அல்ல என்றாலும் வற்புறுத்தியோ அச்சுறுத்தியோ பெறப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லாத் தொழில் நிறுவனங்களாலும் அளிக்கப்படுகின்றன. ஒப்புக்கு ஒரு தொகை குறிப்பிடப்பட்டு, காசோலை அல்லது கேட்போலை மூலம் நியாயமாக வழங்கப்பட்டதைப் போலக் கணக்கு காட்டப்படுகிறது.
பெரும்பாலும் கருப்புப் பணமாகத்தான் தரப்படுகின்றன. இவ்வாறு நன்கொடை தரும் தொழில் நிறுவனங்கள் ஆளும் கட்சிகளை அணுகித் தங்களுடைய தொழில் அல்லது வியாபாரத்துக்குச் சலுகைகளைப் பெற்றுவிடுகின்றன. அது வரிச் சலுகையாகவோ, தொழில் நடத்துவது தொடர்பான விதிகளில் விலக்காகவோ, தளர்வாகவோ அமைந்துவிடுகிறது. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தரும் நன்கொடை பகிரங்கப்படுத்தப்பட்டால்தான் கட்சிகளின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளுக்கான உண்மையான காரணங்களை மக்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்தத் தகவல்களைப் பெற்றுத்தர மத்திய தகவல் ஆணையத்தால் முடியவில்லை. இனி, உச்ச நீதிமன்றம்தான் பெற்றுத் தர வேண்டும்.
தகவல் அறியும் உரிமை என்பதும் அரசியல் சட்டம் வகுத்தளித்த பேச்சுரிமை, கருத்துரிமை என்ற அடிப்படை உரிமைகளைப் போன்றதுதான். அடிப்படைச் சுதந்திரத்தை மக்களால் எந்த நாளும் விட்டுத்தர முடியாது. அரசியல் கட்சிகள் தங்களுடைய வரவு- செலவுகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவற்றின் அடிப்படைக் கடமை. அதிலிருந்து அவை தப்பக் கூடாது!