Published : 22 Jun 2015 08:39 AM
Last Updated : 22 Jun 2015 08:39 AM

பொருளாதாரத்தை முடுக்க ஒரு நடவடிக்கை!

பருவ மழை நம்மைக் கைவிட்டு வாட்டப்போகிறது என்பதை இந்திய வானிலை ஆய்வு நிலையத்தின் சமீபத்திய அறிக்கையும் தெளிவுபடுத்திவிட்டது. இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு, வழக்கமான அளவில் 88% அளவுக்குத்தான் இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வறட்சியும் பஞ்சமும் இந்தியாவுக்குப் புதிதல்ல. போலவே பெருமழையும் வெள்ளச்சேதமும். ஆனால், இவை இரண்டையும் ஒன்றோடு ஒன்று பொருத்திப்பார்த்து தீர்வைத் தேடும் தொலைநோக்கு நம்முடைய ஆட்சியாளர்களிடம் இல்லை. மழைநீர் சேகரிப்பு கண் கண்ட மருந்தாக இருந்தாலும், அரசாங்கத்திடமும் ஆர்வம் இல்லை; மக்களிடத்திலும் அக்கறை இல்லை என்பதைத் தொடர்ந்து நாம் பார்க்கிறோம்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வுகளை யோசிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குத் தற்காலிகத் தீர்வுகளை யோசிப்பதும் முக்கியம். நடப்பாண்டு வறட்சி கிராமப்புற வறுமையைத் தலைவிரித்து ஆடச்செய்யாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களுக்குப் பதில் தேடி, ‘மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்திடம் அடைக்கலம் ஆகியிருக்கிறது அரசு. முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் என்பதாலேயே இந்த அரசால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட திட்டம் இது. எனினும், மோடி அரசின் இப்போதைய முடிவு வரவேற்கத் தக்கது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்ட வேலை உறுதித் திட்டம் உண்மையாகவே ஒரு புரட்சிகரமான திட்டம். கிராமப்புற மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை மட்டும் அல்லாமல், அவர்களுடைய கண்ணியமான வருவாய்க்கும் குறைந்தபட்ச உறுதியைக் கொடுத்த திட்டம் இது. கிராமப்புற ஏழ்மையைக் கணிசமாகத் துடைக்க முற்பட்ட திட்டம். ஆனால், நம் நாட்டில் ஊராட்சிகள் வரை புரையோடியிருக்கும் ஊழல், இத்திட்டத்தை வெகுசீக்கிரம் தனதாக்கிக்கொண்டது. விளைவு, விவசாயிகளைத் தூக்கி நிறுத்த வந்த திட்டம், அவர்களை மேலும் முடக்கிப்போடும் கருவியானது. ஒப்புக்கு வேலைசெய்துவிட்டு, கையெழுத்துப் போட்டுக் காசு வாங்கும் கலாச்சாரம் வெளிப்படையாகப் பரவியது. ஒருகட்டத்தில், இந்தத் திட்டத்தாலேயே விவசாயத்துக்கு ஆள் கிடைப்பதில்லை எனும் சூழலும் உருவானது. திட்டத்திலுள்ள குறைகளைக் களைந்து, நகர்ப்புறங்களிலும் அதை நீட்டிக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கியபோதுதான் ஆட்சி மாற்றம் நடந்து திட்டம் முடங்கியது.

இப்போது வறட்சிக் காலத்தில் வறுமையை எதிர்கொள்ள இத்திட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் சூழலில், மோடி அரசு செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, வேலை உறுதித் திட்டத்தைச் சீரமைத்து, மேலும் மேம்படுத்தி, நாடு முழுவதற்கும் விரிவுபடுத்துவது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது. எப்போதுமே கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது செலவாக மாறுவதில்லை; மாறாக, சமூக நல முதலீடாகவே மாறுகிறது. இத்திட்டத்தில் அரசு செலவழிக்கும் பணம் ஏழைகளுக்குக் கிடைத்து, அது மீண்டும் சமூகப் பயன்பாட்டுக்கே திரும்பும். மக்களிடையே மன நிம்மதி ஏற்படும். சமூகத்தில் நுகர்வு அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துடன் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிக்கும். சுருக்கமாகச் சொல்லப்போனால், பொருளாதாரத்தை முடுக்கிவிடும் ஒரு நடவடிக்கையாக அது அமையும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x