

சென்னை ஐஐடியில் இயங்கிவந்த அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு (ஏபிஎஸ்சி) விதிக்கப்பட்ட தடையை ஐஐடி நிர்வாகம் நீக்கியிருப்பதைக் கருத்துரிமைக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம், ஐஐடி வளாகம் அரசியல் களமாக்கப்படும் சூழலைத் தவிர்த்திருப்பதுடன், கல்வியின் மீதான கவனம் சிதறடிக்கப்படுவதையும் ஐஐடி நிர்வாகத்தின் இந்த முடிவு தடுத்திருக்கிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்ட ஒரு அனாமதேயப் புகாரின் அடிப்படையில் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது. அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏப்ரல் 14-ல் நடத்திய கூட்டம், மாணவர் அமைப்புகளுக்கான விதிமுறைகளுக்கு முரணானது என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் மாணவர் அமைப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஐஐடி வலைதளத்தில் வெளியிடப்பட்டன. உண்மையில், இந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையின் பின்னணியிலுள்ள அரசியல் நுட்பமானது.
இந்துத்வ அமைப்புகளுக்குக் கெட்ட கனவான இரு தலைவர்களை ஒரே புள்ளியில் வைத்துத் தொடங்கப்பட்ட அமைப்பு இது. சமீப காலமாக டாக்டர் அம்பேத்கரைத் தங்களுக்குச் சொந்தமானவராகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கும் சங்கப் பரிவாரங்கள், எப்போதுமே பெரியாரை ஜீரணிக்க முடியாத எதிரிகளின் பட்டியலிலேயே வைத்திருக்கின்றன. தமிழகத்தில் பெரியாருக்கு எதிரான அரசியலில் அம்பேத்கரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது அவர்களுடைய நுட்பமான உத்திகளில் ஒன்று. இந்த அமைப்பு அம்பேத்கர், பெரியார் இருவரையும் ஒரே புள்ளியில் இணைத்ததுடன் கூடவே பகத் சிங் போன்ற இடதுசாரி சித்தாந்தவாதிகளையும் வரித்துக்கொண்டிருந்தது. சங்கப் பரிவாரங்கள் அந்த அமைப்பை முடக்கிப்போட வேண்டும் என்று கோர… இதற்கு மேல் என்ன வேண்டும்? இந்தப் பின்னணிகளையெல்லாம் வைத்துப் பார்த்தால் நடந்தது வெறும் கல்வி நிறுவனம் சார்ந்த ஒரு பிரச்சினை அல்ல என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஒரு வகையில், இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வை நோக்கி நகர்ந்திருக்கிறது ஐஐடி நிர்வாகம்.
ஐஐடி நிர்வாகத்துக்கும் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது, சுதந்திரமான மாணவர் அமைப்புகளுக்கு ஒரேவிதமான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது தொடர்பாக அந்த அமைப்பினர் விடுத்த கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக ஐஐடி நிர்வாகம் கூறியிருக்கிறது.
வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்வது தொடர்பாக பரிசீலிப்பதாகவும் கூறியிருக்கிறது. மற்ற கோரிக்கைகளை மாணவர் விவகார ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரம், போராட்டங்கள், கோரிக்கைகள் இவற்றையெல்லாம் ஐஐடி நிர்வாகம் தன்னுடைய கவுரவப் பிரச்சினையாக மாற்றிக்கொள்ளாமல், நேர்ந்துவிட்ட ஒரு தவறைத் திருத்திக்கொள்ள முற்பட்டிருப்பது ஆரோக்கியமான விஷயம். அதேபோல, மாணவர் அமைப்பும் மோதல் மனோபாவத்திலிருந்து விடுபடுதல் அவசியம். கல்வியும் ஜனநாயகமும் இருவேறு துருவங்கள் அல்ல. இந்தப் புரிதலுடன் இரு தரப்புமே பரஸ்பரம் இயல்புநிலைக்குத் திரும்புவதும் தத்தமது பணிகளில் முழுக் கவனத்தையும் தொடர்வதுமே கல்வி நிறுவனத்தின் மேன்மையைக் காக்கும். இந்த விவகாரத்தை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!