பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திட்டம்

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திட்டம்
Updated on
2 min read

கடன் அட்டை மற்றும் பண அட்டை மூலம் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வோருக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்திருக்கிறது. கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான வர்த்தகப் பரிமாற்றங்களில் ரொக்கத்தைப் பயன்படுத்தாமல், மின்னணு பணப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்க மத்திய அரசு உத்தேசித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த முடிவு புதிதல்ல, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலேயே கூறப்பட்டதுதான். ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10,000-க்கு மேல் ரொக்கம் எடுக்கப்படும்போது 0.1% கட்டணம் வசூலிக்கும் முறையை 2005-ல் அறிமுகப்படுத்தினார். ஆனால், குழப்பமான இந்த நடைமுறையால் மக்கள் அதிருப்தி அடைந்ததைத் தொடர்ந்து, 2009-ல் அத்திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போதைய அரசின் திட்டம் பல சாத்தியக் கூறுகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பெட்ரோல், எரிவாயு, மற்றும் ரயில் பயணச்சீட்டுகள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்குக் கடன் அட்டை அல்லது பண அட்டையைப் பயன்படுத்தும்போது பரிவர்த்தனைக் கட்டணம் ரத்து செய்யப்படும். அத்துடன், தங்கள் செலவுகளில் குறிப்பிட்ட அளவை இப்படிப்பட்ட கடன் / பண அட்டை மூலம் மேற்கொள்ளும் நபர்களுக்கு வருமான வரியில் சலுகை காட்டப்படவும் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

இது வரவு - செலவுகளை அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தும். மொத்தப் பற்று - வரவில் 50%-க்கும் மேல் இப்படி கடன் / பண அட்டை மூலம் மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு வரிச் சலுகை அளிக்கவும் அரசு உத்தேசித் திருக்கிறது. அத்துடன் பரிமாற்றத்தில் இருக்கும் பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டப்பட்ட வரியிலும் சிறிது குறைக்கப்பட உத்தேசிக்கப் பட்டிருக்கிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தின்படி, வங்கிகள் மூலமும் மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோர் மீதும் கட்டணம் விதிக்கப்படுகிறது. அதேசமயம், அரசின் கவனத்துக்கே வராமல் ரொக்கமாகக் கொடுத்து பரிமாற்றங்களை முடித்துக் கொள்வோருக்கு எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. புதிய திட்டம்குறித்து மக்களிடமும் வர்த்தகத் துறையினரிடமும் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அரசு வரவேற்றுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

காகிதத்தில் அச்சிடப்படும் ரொக்கம் அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. நல்ல நோட்டுடன் கள்ள நோட்டும் புழக்கத்தில் வருவது பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, இந்தத் திட்டம் உதவும். ரொக்கம் எங்கே, யாரிடமிருந்து எப்படிப் போகிறது என்று கண்காணிப்பதே கடினமாக இருக்கும் நிலையில், ஒரு தொழிலில் அல்லது வியாபாரத்தில் எவ்வளவு பணம் புரள்கிறது என்று அரசு மதிப்பிட, மின்னணு பணப் பரிவர்த்தனை முறை நிச்சயம் உதவும்.

இந்தியாவில்தான் ரொக்கப் பரிமாற்றம் அதிகமாக இருக்கிறது. ரொக்கத்துக்கும் மொத்த உற்பத்தி மதிப்புக்குமான விகிதம் 13%-ஆக இருக்கிறது. உலக அளவில் பிற நாடுகளில் இந்த சராசரி 2.5% முதல் 8% வரையில்தான் இருக்கிறது. இந்தியாவில் வெள்ளைப் பணம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறதோ அதற்குச் சம அளவில் கருப்புப் பணமும் புழக்கத்தில் இருக்கிறது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இந்தப் புதிய திட்டம் தீர்வு காணும் எனும் நம்பிக்கை ஏற்படுகிறது. எனவே, அரசின் இந்த முயற்சி எல்லா வகையிலும் வரவேற்கத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in