Published : 25 Jun 2015 08:38 AM
Last Updated : 25 Jun 2015 08:38 AM

ஐஐம் நிறுவன மசோதா அவசியமானதா?

எந்த ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பான செயல் பாட்டுக்கும் ஆதாரமானது அதன் சுதந்திரத் தன்மை. கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தக் கூற்று 100% பொருந்தும். ஆனால், ஸ்மிருதி இரானி தலைமையிலான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவர முயற்சி செய்யும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவன மசோதா, அடிப்படையான இந்த விஷயத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும் என்ற குரல்கள் எழுந்திருக்கின்றன. சந்தைப் பொருளாதார மாதிரியை இந்தியா பின்பற்றத் தொடங்குவதற்கு வெகு காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட ஐஐஎம் கொல்கத்தா, ஐஐஎம் அகமதாபாத், ஐஐஎம் பெங்களூரு ஆகியவை, சோஷலிஸ செயல்திட்டத்தின் அடிப்படையில் திட்டக் குழுவின் பரிந்துரைகளுடன் உருவானவை. சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட இந்திய நிறுவனங்கள் எனும் பெயரை இவை பெற்றிருக்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம், அவற்றுக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி அங்கீகாரம்தான்.

தற்போது பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக, ஐஐஎம் கல்வி நிறுவன வரைவு மசோதா வெளியிடப்பட்டிருக்கிறது. இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டில் உள்ள 13 ஐஐஎம் நிறுவனங்களின் செயல்பாடுகள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். அதன் பின்னர், இந்நிறுவனங்களின் கல்விக் கட்டணம், பேராசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட எந்த விஷயமானாலும் அரசின் அனுமதியைப் பெறாமல் செயல் வடிவம் பெறாது. பெரும்பாலான ஐஐஎம் நிறுவனங்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.

ஐமு கூட்டணி ஆட்சியில் மனித வள மேம்பாட்டு அமைச்சராகப் பதவி வகித்த கபில் சிபல் தொடங்கிவைத்த சிக்கல் இது. ஐஐஎம்-மைத் தனியார்மயமாக்க நியமித்த குழு அப்போதே சர்ச்சைக்குள்ளானது. முந்தைய அரசின் செயல்பாடுகளை விமர்சித்துவரும் பாஜக அரசு இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறது. இம்மசோதாவின் வரம்புக்குள் பிற தனியார் மேலாண்மை நிறுவனங்களும் வருமானால், ஐஐஎம் நிறுவனங்களின் சுதந்திரம் நீர்த்துப்போகும் அபாயமுள்ளது. அதேசமயம், இம்மசோதாவில் சில நல்ல அம்சங்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஐஐஎம்-ல் டிப்ளமோ பெற்ற முன்னாள் மாணவர்கள் பலர், தங்கள் டிப்ளமோவைப் பட்டமாக மாற்றித் தரும்படி விடுத்த கோரிக்கை பல காலமாக நிலுவையில் உள்ளது. இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று இம்மசோதா உறுதியளிக்கிறது. ஆனால், எதிர்ப்புக்குரிய அம்சங்கள்தான் இம்மசோதாவில் நிறைய இருக்கின்றன.

அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்பட்சத்தில் இந்நிறுவனங்களை ஆகச் சிறந்த கல்வி அமைப்புகளாக அப்படியே தொடர முடியுமா என்பதுதான் தற்போதைய முக்கியக் கேள்வி. ஐஐஎம் நிறுவனங் களின் செயல்பாடுகளைத் தொலைவில் இருந்து அரசு கண்காணிப் பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இந்நிறுவனங்களைக் கொண்டுவருவதை ஏற்றுகொள்ளவே முடியாது என்று அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவன இயக்குநர் ஆசிஷ் நந்தா சுட்டிக்காட்டியிருக்கிறார். உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் இந்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள ஒரு நிறுவனம்கூட இதுவரை இடம்பிடித்ததில்லை. இருக்கும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுதான் அரசின் முக்கியக் கடமை; அவற்றின் சுதந்திரத்தில் தலையிடுவது அல்ல. மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய முக்கிய விஷயம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x