

அரசியல் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வதும் கலந்தாலோசிப்பதும் நல்ல அரசியலுக்கான அடிப்படைப் பண்புகளில் ஒன்று. தேர்தலோடு எந்த ஒரு கட்சியும் தம் மனமாச்சரியங்களை விட்டுவிட்டு, நாட்டின் முன்னேற்றத்துக்காக நெருங்கிப் பணியாற்றுவதே ஜனநாயகம் வலுப்பட உதவும்.
தலைநகர அரசியலைப் பொறுத்த அளவில், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மாற்றுக் கட்சியினருடன் கலந்து ஆலோசிப்பதை முன்னெடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, அந்நாளைய பிரதமர் வாஜ்பாய் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுடனும் சுமுக உறவு வைத்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களின் நீண்ட கால அனுபவம் தங்களுக்குத் தேவை என்று வெளிப்படையாகவே பேசினார். இப்போதைய அரசில்கூட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தனக்கு முன்னால் இப்பதவியை வகித்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் பொருளாதாரம் தொடர்பாக ஆலோசனைகளைக் கேட்கிறார். இவையெல்லாம் ஆரோக்கியமான நடைமுறைகள். மோடியும் இப்படியான பாதையில் செல்பவராக இருந்தால் அது நாட்டுக்கு நல்லது. ஆனால், ஏனோ தெரியவில்லை மன்மோகன்,மோடி சந்திப்பு தொடர்பான விவரங்களை இரு தலைவர்களுமே வெளியிடவில்லை.
இந்தச் சந்திப்பு தொடர்பான ஒரு புகைப்படத்தை மட்டும் ட்விட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி, ஓரிரு வரிகளோடு முடித்துக்கொண்டார். இருவருமே பேசியது என்ன என்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாததால் பல்வேறு யூகங்கள் வெளியாகின. ஏனென்றால், அலைக்கற்றை ஏல விவகாரத்தில் தன்னுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், ‘சொன்னதைச் செய்’ என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மிரட்டினார் என்று டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிலக்கரிச் சுரங்க ஏலம் தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் ஏற்கெனவே சில தகவல்கள் கேட்கப்பட்ட நிலையில், இன்னொரு குற்றச்சாட்டும் கூறப்பட்டு தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது. தவிர, அன்றைக்குக் காலையில்தான் மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில், நடைபெற்ற சந்திப்பு ஏராளமான யூகங்களைக் கிளப்புவது தவிர்க்க முடியாதது. ஒருபுறம் பாஜக தரப்பு, “இந்தச் சந்திப்பு அரசியல்ரீதியிலான சந்திப்பு” என்பதுபோலக் கிளப்பிவிட, மறுபுறம் காங்கிரஸ் தரப்பு “பொருளாதாரம் படிக்க எங்கள் பேராசிரியரைக் கூப்பிட்டிருக்கிறார் மோடி” என்று பதிலடி கொடுக்க, ஊடகங்கள் தம் பங்குக்கு ஆளுக்கொன்றாக எழுத… மக்கள் குழப்பத்தில் தள்ளப்பட்டனர்.
பொதுவாக, பிரதமர் அலுவலகம்தான் இத்தகைய செய்திகளை வெளியிடுவது வழக்கம். அதுதான் மரபும்கூட. மேலும், செய்தி மக்கள் தொடர்புக் கலையில் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆர்வமும் நிபுணத்துவமும் யாரும் அறியாததல்ல. இப்படிப்பட்ட சூழலில், மன்மோகன் சிங் வருகையின் நோக்கத்தை பிரதமர் மோடிதான் வெளியிட்டிருக்க வேண்டும். கூடவே, இந்தச் சந்திப்பு எதன் நிமித்தமானது என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும். ஒருவேளை இருவரின் கலந்தாலோசனை தேசப் பாதுகாப்பு போன்ற ‘அதி ரகசியமான விஷயமாக’ இருக்கக் கூடும் என்றால், அதையும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம். இதுபோன்ற தேவையற்ற யூகங்கள் / வதந்திகளைத் தவிர்த்திருக்கலாம். மறைக்கத் தேவையற்றதில் வெளிப்படைத்தன்மை காணாமல்போகும்போதுதான் வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் சிறகுகள் முளைக்கின்றன.