ஊருக்குப் போதிக்காதீர்!

ஊருக்குப் போதிக்காதீர்!
Updated on
2 min read

அடையாள அரசியல் நடவடிக்கைகள் ஒருபோதும் உண்மையான மாற்றங்களை உருவாக்குவதில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக மீண்டும் மீண்டும் சொல்கிறது அமெரிக்கா. கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவை இரு முறை அதிபராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன்னுடைய கறைகளிலிருந்து அமெரிக்காவால் விடுபட முடியவில்லை. அமெரிக்க வெள்ளையர்களிடம் உறைந்திருக்கும் வெறுப்பு, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சூறையாடக் காத்திருக்கிறது.

தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டன் தேவாலயத்துக்கு வந்திருந்த கருப்பின மக்களைப் பார்த்து இளைஞர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டு 9 உயிர்களைப் பறித்திருக்கிற சம்பவம் துயரத்தில் ஆழ்த்துகிறது. இரு இனத்தவருக்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக இதைச் செய்ததாகச் சொல்கிறார் டைலான் ஸ்டார்ம் ரூஃப் என்ற அந்த 21 வயது இளைஞர். அமெரிக்காவில் ‘ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள்’ என்று அழைக்கப்படும் கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் ஓய்வதே இல்லை. இந்தத் தாக்குதலில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் உட்பட, பல்வேறு தரப்பினரும் சேர்ந்தே குறிவைக்கப்பட்டிருக்கின்றனர். “எங்களுடைய நாட்டை நீங்கள் கைப்பற்றுவதா?” என்று கருப்பினத்தவர்களைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்டிருக்கிறார் டைலான் ஸ்டார்ம் ரூஃப். அதாவது, கருப்பினத்தவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வந்தவர்கள், அமெரிக்கா என்பது வெள்ளைக்காரர்களுக்கே சொந்தம் என்பது அவருடைய கேள்வியின் பொருள். சிறுபான்மையினருக்கு எதிரான வெறி வரலாற்றின் தொடர்ச்சியாக மட்டுமல்ல; பெரும்பான்மை இனத்தவரின் மேலாதிக்கத்துக்கான ஆபத்தாகவும் உணரப்பட்டே தொடர்கிறது என்பதன் ஆழமான பொருள் இது.

ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே டைலான் ஸ்டார்ம் ரூஃபைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்றாலும், இத்தகைய குற்றங்களுக்கான முதன்மைக் குற்றவாளிகள் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவத்தை உலகெங்கும் போதிக்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள். அமெரிக்காவின் முதுபெரும் அரசியல் கட்சியான குடியரசுக் கட்சியில் ‘தேநீர் விருந்துக் குழு’ என்ற தனிக்குழு இருக்கிறது. இது ஒபாமா அதிபரான உடனே ஏற்பட்டது. இக்குழுவினர் குடியரசுக் கட்சியின் வலதுசாரித் தலைவர்கள். இவர்களுடைய முக்கியமான கோஷம் என்ன தெரியுமா? ‘நம்முடைய நாட்டை (கருப்பரான ஒபாமாவிடமிருந்து) மீட்போம்’ என்பது. ஜனநாயகக் கட்சி ஆள்வதுகுறித்து அவர்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், கருப்பர் ஒருவர் ஆள்வதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நாட்டின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றின் மூத்த தலைவர்களிடமே இவ்வளவு வெளிப்படையான மேலாதிக்க வெறி வெட்கமின்றி வெளிப்படுகிறது என்றால், அந்நாட்டின் இளைஞர்களைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

இப்படிப்பட்ட வெறித்தனம் உறைந்திருக்கும் ஊரில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பை அரசு எப்படிக் கையாள வேண்டும்? காவல் துறையைச் சர்வதேச அளவில் வலுவானதாகக் கட்டியமைத்திருக்கும் அமெரிக்கா, மறுபுறம் துப்பாக்கிக் கலாச்சாரத்தையும் வளர்த்தெடுத்திருக்கிறது. நினைத்தவுடன் துப்பாக்கியை வாங்கிவிட முடிகிற அமெரிக்காவின் துப்பாக்கி உரிமச் சட்டம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்பொருள் அங்காடிகள், வழிபாட்டுத் தலங்கள் என்று பல இடங்களிலும் அப்பாவிகளைச் சிலர் மனம்போனபடி சுட்டுக் கொல்லும்போதெல்லாம் இதுகுறித்துப் பேசிவிட்டு ஓய்ந்துவிடுகிறது அமெரிக்கச் சமுதாயம். துப்பாக்கி தயாரிக்கும் தொழில் நிறுவனங்களின் அரசியல் செல்வாக்கு காரணமாக, அந்தச் சட்டத்தைத் திருத்த அரசால் முடியவில்லை. ஆனால், உலகுக்கு அறிவுரை கூறுவதென்றால் முந்திக்கொண்டு நிற்கின்றனர் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in