Published : 18 Jun 2015 08:54 AM
Last Updated : 18 Jun 2015 08:54 AM

கைகாட்டி மரத்துக்கான காத்திருப்பு!

ரயில்வே துறையில் சீர்திருத்தம் தொடர்பாகப் பரவலான விவாதங்களை விவேக் தேவராய் குழுவின் அறிக்கை கிளப்பிவிட்டிருக்கிறது. ரயில்வே நிர்வாகத்தில் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை இக்குழு பட்டியலிட்டிருக்கிறது. நிர்வாகத்தின் வரவு - செலவு கணக்குகளை எழுதும் பணி அரசுத் துறையில் உள்ளதைப் போல அல்லாமல், தனியார் நிறுவனங்களின் பாணியில் இருக்க வேண்டும்; அதிகாரங்களை ரயில்வே வாரியத்திடம் குவிக்காமல் பிராந்திய பொது மேலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்; ரயில்வே துறையில் தனியாரும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும்; ரயில்வே துறைக்கு தலைமை தாங்கி நடத்த சுயாதிகாரமுள்ள நெறியாளரை நியமிக்க வேண்டும் என்பவை அதன் முக்கியமான பரிந்துரைகள். 5 ஆண்டுகளுக்குள் இவற்றைச் செயல்படுத்த காலவரம்புடன் கூடிய செயல்திட்டத்தையும் இக்குழு முன்வைத்திருக்கிறது.

ரயில்களின் இயக்கத்திலேயே தனியாருக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான பரிந்துரை. ரயில்வே துறை என்னென்ன தயாரிக்கிறதோ அவற்றைத் தனியாரும் தயாரிக்க அனுமதிப்பதன் மூலம் போட்டியை ஏற்படுத்தி, உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்ய முடியும் என்கிறது இந்த அறிக்கை. இதற்கு முன்னர், சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில்வே துறையில் அரசு தனியார் பங்கேற்பு சோதனை முறையில் முயற்சித்துப் பார்க்கப்பட்டது. அம்முயற்சி வெற்றி பெறவில்லை என்பதால் இம்முறை ரயில்வே துறைக்கு இணையாகத் தனியாரும் உற்பத்தியில் போட்டியில் இறங்கலாம் என்பது இக்குழுவின் வாதம்.

ரயில்வே துறையின் கட்டமைப்பை மாற்றுவது பிரம்மாண்டமான வேலை. தனியார்மயம் என்ற சொல்லைக் கையாளாமல் ரயில்வே துறையை தாராளமயமாக்க வேண்டும் என்று எச்சரிக்கையுடன் கூறுகிறது இந்த அறிக்கை. ஆனால், இந்த அறிக்கையின் பல அம்சங்கள் எதிர்ப்புகளை உருவாக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனியார் பங்கேற்பை ரயில்வே தொழிற்சங்கங்கள் நிச்சயம் எதிர்க்கும். ரயில்வே வாரியமேகூட தன்னுடைய அதிகாரமும் செல்வாக்கும் பறிக்கப்படுவதை விரும்பாது.

ரயில்வே துறைக்கு போதிய என்ஜின்கள், பயணியர் பெட்டிகள், சரக்குப் பெட்டிகள் இல்லை. புதிய ஊர்களுக்கு வழித்தடங்களை நீட்டிக்க முடியவில்லை. இருக்கும் தடங்களில் அதிக பெட்டிகளுடன் கூடுதல் ரயில்களையும் பணியில் ஈடுபடுத்த முடியவில்லை. தண்டவாளங்கள், சக்கரங்கள், அச்சுகள் தயாரிப்பு திருப்திகரமாகவும் போதிய அளவுக்கும் இல்லை. பணியாளர் பற்றாக்குறையும் பெருகிவருகிறது. ரயில்வேக்குக் கிடைக்கும் நிதிப் போதாமையால் பொது நிதியிலிருந்து ஆண்டுதோறும் பணம் ஒதுக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படிப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

ரயில்வே துறை தனியார்மயமாகாது என்று ரயில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பல முறை அறிவித்தும்கூட தொழிலாளர் சங்கங்கள் திருப்தியடைந்ததைப் போலத் தெரியவில்லை. அவர்களின் பயத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதன் மூலம்தான் சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும்.

உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரயில்வே மிகவும் பின்தங்கியிருப்பதைத் தொழிற்சங்கத் தலைவர்கள் உள்பட அனைவரும் அறிவார்கள். இப்போது மாற்ற முனைந்தால்தான் ரயில்வே துறையை நவீனப்படுத்த முடியும். தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினைகளைப் பலமடங்கு பெருக்கி செலவையும் பிரம்மாண்டமாக்கிவிடும். ஆனால், இந்த மாற்றமானது ரயில்வே நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் இருக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x