

அரசியல் களத்தில் அத்தனை பேரின் பார்வையும் இப்போது பிஹாரை நோக்கித் திரும்பியிருக்கிறது.
பொதுத்தேர்தல் வெற்றிக்குப் பின் ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் என்று அடுத்தடுத்து எல்லாத் தேர்தல்களிலும் வென்றுவந்த பாஜக கூட்டணி, டெல்லி தேர்தல் தோல்விக்குப் பிறகு பின்னடைவைச் சந்தித்தது. முக்கியமாக, தோல்விகளால் துவண்டிருந்த எதிர்க் கட்சிகளுக்கு இது பெரும் உத்வேகத்தைத் தந்தது. பாஜக அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா அவர்கள் அரசியல் கரம் கோக்க சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. நாட்டின் வேளாண் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா இந்திய வேளாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்ற எதிர்க் கட்சிகளின் குரல் கிராமங்களிலும் விவசாயிகளிடத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்தது. கூடவே, “இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது, பெருமுதலாளிகளுக்கு ஆதரவானது” எனும் எதிர்க் கட்சிகளின் பிரச்சாரமும் கவனம் பெற்றது. எதிர்க் கட்சிகள் ஒன்றுக்கொன்று கரம் கோக்க ஆரம்பித்தன.
ஒருபுறம் காங்கிரஸ் தன் எதிர்ப்பு அரசியலால் வலுப்பெற ஆரம்பிக்க, இன்னொருபுறம், ‘ஜனதா பரிவார்’ கட்சிகள் ஒன்று சேரும் முடிவை நோக்கி நகர்ந்தன. உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, கர்நாடகத்தில் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஹாரில் லாலு பிரசாதின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை இணையும் முடிவை எடுத்தன. இந்த இணைப்பு இன்னமும் முழுமை பெறுவதற்குள்ளேயே பிஹார் தேர்தல் களத்தில் ‘ஜனதா பரிவார்’ கால் பதித்திருக்கிறது. பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் கை கோக்க வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது. இப்போதைக்கு காங்கிரஸ் அதனோடு கை கோப்பது உறுதியாகிவிட்ட சூழலில், இடதுசாரிகளின் ஆதரவையும் அது எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆக, ஒருபுறம் மோடிக்கு எதிராக தேசிய அளவிலான கூட்டணிக்கு முன்னோட்டமாக பிஹார் தேர்தல் களம் எதிர்க் கட்சிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. மறுபுறம் மோடி அரசின் ஓராண்டு ஆட்சிக்கான மக்களின் எதிர்வினையாகத் தேர்தல் முடிவுகள் கருதப்படும் என்பதால், பாஜகவுக்கும் இது கவுரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.
எனினும், மோடியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்வ அதிகாரமிக்க பாஜகவையும் எதிர்க் கூட்டணியையும் ஒன்றுபோல மதிப்பிட்டுவிட முடியாது. முதலில், ஜனதா பரிவாரத்துக்குள்ளேயே இன்னும் முழு ஒற்றுமை ஏற்படவில்லை. யாருக்கு எத்தனை இடங்கள் என்பது உட்பட, ஏகப்பட்ட பூசல்கள் லாலுவுக்கும் நிதீஷ் குமாருக்கும் இடையே. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் முன்முயற்சியிலேயே பாஜகவை எதிர்க்கும் எல்லா மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இப்போதும்கூட, “பாஜகவைத் தோற்கடிப்பதற்காக விஷத்தைக்கூடக் குடிக்கத் தயார்” என்று லாலு அறிவித்திருப்பது, பாஜக மீதான அவருடைய விரோதத்தைவிட நிதீஷ் மீதான கசப்பையே அதிகம் காட்டுகிறது. இன்னும் தொகுதிப் பங்கீடுகள், உள்குத்து அரசியல் என்று செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
ஆனால், எப்படிப் பார்த்தாலும் எதிர்க் கட்சிகளுக்கு இது சரியான பரிசோதனைக் களம் - உள்ளுக்குள்ளும் வெளியிலும்!