

நாகாலாந்து, மணிப்பூர் மாநில எல்லைகளுக்கு அப்பால், மியான்மர் எல்லைப் பகுதியில் இரு முகாம்களில் தங்கியிருந்த சுமார் 150 தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் நம்முடைய படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் 20 பேரின் உயிரிழப்புக்கும் இந்திய அரசு கொடுத்திருக்கும் பதிலடி இது. அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, பயங்கரவாதிகளை ஒழிக்க எல்லை தாண்டிய நம்முடைய முதல் தாக்குதல்.
பிரதமரின் அனுமதியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோவல், தரைப்படைத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் இருவரும் இந்தத் தாக்குதலை ஒருங்கிணைத்திருக்கின்றனர். பயங்கரவாதிகளின் முகாம்களும் நடமாட்டமும் ஆள் இல்லாத விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு, சுமார் 50 வீரர்களைக் கொண்ட கமாண்டோக்களின் படை மூலமாக செவ்வாய் அதிகாலை 3 மணி அளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மணிப்பூர், நாகாலாந்து எல்லை அருகில் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தத் தாக்குதலை மியான்மர் எல்லையைக் கடந்து நிகழ்த்தியதாக மத்திய செய்தித்துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரதோட் தெரிவித்திருக்கிறார். கூடவே, “மியான்மர் எல்லைக்குள்ளேயே நுழைந்து பயங்கரவாதிகளை ஒழித்திருப்பது, இந்தியா மீது பயங்கரவாதிகளை ஏவிவிடும் நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும், பாகிஸ்தான் உடனடியாக இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறது. “பாகிஸ்தான் ஒன்றும் மியான்மரல்ல, எங்கள் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்” என்று கூறியிருக்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான். இதைத் தொடர்ந்து, டெல்லியில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற நம்முடைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், “மியான்மரில் நாம் நடத்திய தாக்குதல் இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சூழலையே மாற்றிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே, இந்தத் தாக்குதல் தங்களுடைய எல்லைக்குள் நடத்தப்படவில்லை என்று மியான்மர் அரசு மறுத்துள்ளது.
இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை ஒடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. ஆனால், அதற்கு எப்படியான வழிமுறைகளைக் கையாள்வது நீண்ட காலத்துக்குப் பலன் அளிக்கும் என்கிற தொலைநோக்குப் பார்வை அரசுக்கு வேண்டும்.
2003-ல் பூடானிலிருந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்ட தீவிரவாதிகளை, இந்திய ராணுவத்தின் உதவியோடு பூடான்தான் ஒடுக்கியது என்பது இந்த இடத்தில் நாம் நினைவுகூரத்தக்கது. இந்திய எல்லைக்கு வெளியே இருக்கும் பயங்கரவாதிகளைத் தாக்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு, பிற நாடுகளின் எல்லைகளையும் இறையாண்மையையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. எல்லாச் சூழல்களிலும் தாக்குதல் நடத்தியவர்களைத் துரத்திச் சென்று தாக்கும் இஸ்ரேல் பாணியானது இந்தியாவுக்குப் பொருந்தக் கூடியது அல்ல. அண்டை நாடுகளில் உள்ள எதிரிகளை அழிக்கிறோம் என்று சொல்லி, ஒரு நாட்டையே எதிரியாக்கிக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. எல்லாவற் றுக்கும் மேல் ஒருவேளை தவறியோ, தவிர்க்க முடியாமலோ தாக்குதல் களின்போது எல்லையைத் தாண்ட நேர்ந்தாலும் அதை இப்படித் தண்டோரா போட்டு விளம்பரப்படுத்துவது ராஜதந்திரம் அல்ல. மோடி அரசு நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்!