ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்: பல சிக்கல்கள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்: பல சிக்கல்கள்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக உறுதியளித்த ‘ஒரே பதவி… ஒரே ஓய்வூதியம்’திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி முன்னாள் ராணுவ வீரர்களிடமிருந்து சற்று உரக்கவே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, 1965-ல் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ராணுவம் பெற்ற வெற்றியைக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், அவ்விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முன்னாள் ராணுவத்தினரில் ஒரு பிரிவினர் கூறியிருக்கிறார்கள். மற்ற அரசு நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

தேர்தல் சமயத்திலும் அதற்குப் பின்னரும் பல முறை இந்தத் திட்டம்குறித்து பாஜக அளித்த வாக்குறுதிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர்தான் இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்கள் பாஜக-வுக்குத் தெரியவந்திருக்கின்றன. இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்களை மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக, வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இதே போன்ற கோரிக்கைகள் மத்திய காவல் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினரிடமிருந்து வருமோ எனும் அச்சமும் அரசுக்கு இருக்கிறது.

பிற பணிகளில் இருப்பவர்கள் 55 அல்லது 58 அல்லது 60 வயதில்தான் ஓய்வுபெறுகிறார்கள். ஆனால், ராணுவ வீரர்கள் 35 வயதிலேயே ஓய்வுபெற வேண்டிய நிலை. எனவே, இந்தத் திட்டம் அவசியமானதுதான். அத்துடன், இத்திட்டத்தைப் பிற துறையினருக்கும் விரிவுபடுத்துவது, அதன் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடும். எனவே, இந்தத் திட்டம் ஆயுதப் படைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற நிலையை உருவாக்குவது அரசின் எண்ணம். இந்தத் திட்டத்துக்கான உடனடித் தேவைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வது மற்றும் எதிர்கால விரிவாக்கத்துக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவது இன்னொரு முக்கியப் பிரச்சினை.

திட்டம் தாமதமாவதால் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கோபமடைவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். எனினும், இதை நிறைவேற்றுவதில் இருக்கும் சிக்கல்களை அவர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் இந்தத் திட்டத்தில், கடந்த ஓராண்டாகத்தான் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அதே சமயம், இத்திட்டம் நிறைவேற்றப் படுவதற்கான அவகாசத்தை வழங்குவதுதான் நியாயம்.

அதேபோல், தீரம் மிக்க இந்த வீரர்கள் நம் நாட்டுக்காகப் போரிட்டவர்கள்; இத்திட்டத்தின் பயனைப் பெறுவது அவர்களின் நியாயமான உரிமை என்பதை அரசும் உணர வேண்டும். அரசு தனது நலனுடன் தேச நலனையும் கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் தீர்வை எட்டும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டால்தான், அரசின் செயல்பாடுகள் குறித்த நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in