

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவுசெய்திருக்கும் பாஜக அரசு முதன்முதலாக மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அமலாக்கப் பிரிவு இயக்ககத்தால் ‘தேடப்பட்டு வரும் குற்றவாளி’யாக அறிவிக்கப்பட்ட லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செய்த ‘உதவி’தான் இந்தச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மூலம் கோடிக் கணக்கான ரூபாய்களைக் குவித்த லலித் மோடி மீது அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. அவை தொடர்பான விசாரணைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளாத லலித் மோடி, ஜாமீன் பெற்றவுடன் லண்டனுக்குச் சென்றவர்தான். அதன் பின்னர், இந்தியா வருவதையே தவிர்த்துவிட்டார்.
போர்ச்சுகல் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியின் அறுவைச் சிகிச்சைக்குச் சம்மதம் தெரிவிக்கும் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக, லலித் மோடி அந்நாட்டுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பிரிட்டன் எம்.பி. கீத் வாஸிடமும், பிரிட்டன் தூதரிடமும் பேசியிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். கீத் வாஸ் மூலமாகத்தான் இத்தனை விஷயங்களும் வெளியாகியிருக்கின்றன. இவ்விவகாரம் வெடித்த பின்னர், மனிதாபிமான அடிப்படையிலேயே அவருக்கு உதவியதாக சுஷ்மா விளக்கமளித்திருக்கிறார். அவர் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று மத்திய அரசும் பாஜகவும் தெரிவித்திருக்கின்றன. அதேசமயம், போர்ச்சுகல் நாட்டின் சட்டப்படி, இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளின்போது கணவரின் கையொப்பம் அவசியமில்லை என்பதை எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. ‘மனிதாபிமான உதவி’என்பது குற்றவாளிகளுக்கு மட்டும்தானா, சாதாரணர்களுக்குக் கிடையாதா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
லலித் மோடிக்கும் சுஷ்மா குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவு உண்டு. தனது உறவினர் பையனுக்கு பிரிட்டனின் சஸ்ஸெக்ஸில் கல்லூரியில் இடம் வாங்கித் தருமாறு லலித் மோடியிடம் கேட்டிருக்கிறார் சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கோசல். சுஷ்மாவின் மகள் பன்சூரி ஸ்வராஜ், லலித் குமார் மோடிக்காக ஐபிஎல் வழக்கில் வாதாடியிருக்கிறார்.
இந்திய அரசால் தேடப்பட்டுவரும் ஒருவருக்கு உதவுவது சுஷ்மா வகிக்கும் பதவிக்கு முரணான செயல். கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவருவோம் என்று கூறிய பிரதமர் மோடி, குறைந்தபட்சம் லலித் குமார் மோடியின் பணத்தை மீட்பதிலாவது தீவிரம் காட்டியிருக்கலாம். அவருடைய பாஸ் போர்ட்டை (கடவுச் சீட்டை) ரத்துசெய்தாலாவது இந்தியாவுக்குத் திரும்புகிறாரா பார்க்கலாம் என்ற அடிப்படையில், மத்திய அரசு 2010-ல் அவருடைய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. லலித் குமார் மோடிக்காக ஆஜராகி, பாஸ்போர்ட்டை ரத்து செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சுஷ்மாவின் மகள் பன்சூரி ஸ்வராஜ் வாதாடினார். அந்த முடிவு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்விஷயத்தில், மோடி அரசு இன்னமும் மேல் முறையீடு செய்யவில்லை.
இப்படியான எல்லாக் கதைகளும் பின்னணியில் கை கோக்கும் சூழலில்தான் எதிர்க் கட்சிகள் பிடிபிடியென்று மோடி அரசைப் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. பாஜக, “இது காங்கிரஸின் சதி” என்றோ, “ஒரு பெண் அமைச்சரைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல்; காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சி” என்றோ சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. நடந்திருக்கும் தவறு தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடி தவறுக்குப் பிராயச்சித்தம் தேடுவதே ஒரே வழி!