

புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா ஒருமுறை கூறினார்: “சத்யஜித் ரேயின் திரைப்படங்களைப் பார்க்காதது என்பது சூரியனையும் நிலாவையும் பார்க்காமல் இவ்வுலகில் வாழ்வதற்குச் சமம்.”
உலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரே கலையுலகம் என்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய படைப்புகள் பலவற்றைத் தந்திருக்கிறார். அகிரா குரசோவா, ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ, மார்ட்டின் ஸ்கார்ஸஸி, அப்பாஸ் கியரோஸ்தமி என்று உலக இயக்குநர்கள் பலர் மீதும், மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், ரிதுபர்ணோ கோஷ், மகேந்திரன் என்று இந்திய இயக்குநர்கள் பலர் மீதும் தாக்கம் செலுத்தியவை ரேயின் படைப்புகள்.
கலை, இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள குடும்பத்தில் 1921-ம் ஆண்டு பிறந்தவர் சத்யஜித் ரே. வங்க மொழியில் குழந்தைகளுக்கான முதல் பத்திரிகையை ஆரம்பித்தவர் அவரது தாத்தாதான். இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் அந்தப் பத்திரிகையில்தான் சத்யஜித் ரே குழந்தைகளுக்கான பல கதைகளைப் பின்னாட்களில் எழுதினார். பொருளியலில் பட்டம் பெற்ற ரே, பிறகு தாகூரின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் ஓவியம் பயின்றார். 1943-ல் ஒரு விளம்பர நிறுவனத்தில் ரே இணைந்தார். அந்த நிறுவனத்துக்காக லண்டனுக்கு 1950-ல் பயணம் செய்தபோது, அங்கே அவர் பார்த்த விக்டோரியோ டி சிகாவின் ‘த பைசைக்கிள் தீஃப்’ திரைப்படம்தான் அவர் இயக்குநராக உருவாக முக்கியக் காரணம்.
இந்தியா திரும்பியதும் விபூதிபூஷனின் ‘பதேர் பாஞ்சாலி’ நாவலைத் தழுவி தான் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதையைப் படமாக எடுக்க முயன்றார். தன் சொந்தப் பணம், மனைவியின் நகையை அடகுவைத்துக் கிடைத்த பணம், பிறகு மாநில அரசின் நிதியுதவி என்று ‘பதேர் பாஞ்சாலி’யை எடுத்து முடித்தார். இந்தத் திரைப்படத்தின் வெளியீடோடு இந்திய சினிமாவின் பொற்காலம் ஆரம்பிக்கிறது. ‘சிறந்த மனித ஆவணம்’ என்று கருதப்பட்டு 1956-ல் ‘கான்’ சர்வதேச விருது வழங்கப்பட்ட இந்தத் திரைப்படம், உலகின் தலைசிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக முக்கியமாக, இந்திய சினிமாவை உலகம் பொருட்படுத்தத் தொடங்கியது ‘பதேர் பாஞ்சாலி’க்குப் பிறகுதான்.
திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட 36 படங்களைத் தன் வாழ்நாளில் இயக்கிய சத்யஜித் ரே உருவாக்கித்தந்த கலைப் பாரம்பரியம், இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றாகக் கூறத் தக்கது. இந்திய வறுமையைத் தன் திரைப்படத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற குற்றச்சாட்டு சத்யஜித் ரே மீது வழக்கமாகக் கூறப்படுவதுண்டு. அது உண்மையல்ல. வறுமை, அதன் துயரம் இதற்கெல்லாம் மத்தியிலும் வாழ்வதற்கான காரணமும் வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கான காரணமும் இருக்கவே செய்கிறது என்பதை உணர்த்தும் கதாபாத்திரங்களையும் தருணங்களையும்தான் அவர் தன் திரைப்படங்களில் உருவாக்கினார்.
ஒரு வகையில் திரைப்பட உலகின் தாகூர் என்று ரேயைச் சொல்லலாம். இசை, பாடல்கள், ஓவியம், ஒலி தொழில்நுட்பம், விளம்பரக் கலை போன்ற பலதுறை நிபுணத்துவம் அவரது திரைப்பட உருவாக்கத்தில் முக்கியப் பங்குவகித்தது. மேலும், குழந்தைகளுக்காக அவர் எழுதிய ஃபெலூடா வரிசைக் கதைகளும் மிகவும் புகழ்பெற்றவை.
மனிதர்களின் வாழ்க்கையில் கலை மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்க்கைக்கு மனிதப் பண்பு ஊட்டக்கூடியது கலைதான். மக்களின் மகத்தான கலை ஊடகமான சினிமா இன்றைக்கு இந்தியாவில் முழுக்கமுழுக்க வியாபாரமயமாகிவிட்ட சூழலில் ரேயைத் திரும்ப உள் வாங்கிக்கொள்வது இன்றைய காலத்தின் தேவை.