Published : 23 Jun 2015 08:30 AM
Last Updated : 23 Jun 2015 08:30 AM

உறவுகளுக்கான அடிப்படையில் கடமைக்கு முக்கிய இடமுண்டு!

சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை, அவர்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடி போன்றவைகுறித்து ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை அச்சத்தையும் கவலையையும் அளிக்கிறது.

‘உலகளாவிய அகதிகள் நெருக்கடி: அலட்சியப்படுத்தும் சதி’ என்கிற தலைப்பிலான அந்த அறிக்கை சர்வதேச சமூகத்தின் உடனடி கவனத்தைக் கோருகிறது. அகதிகளின் துயரங்களை உலகின் பெரும்பாலான நாடுகள் வேடிக்கை பார்ப்பதை ‘வெட்கப்பட வேண்டிய தோல்வி’என்று அது குறிப்பிடுவதன் பின்னணியில் ஆழமான அர்த்தம் உண்டு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சுமார் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் தம் இருப்பிடம் விட்டு வெளியேறும் அவலம் ஒவ்வொரு நாளும் மேலும் வலி தரக் கூடியதாக மாறிக்கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியக் கண்டத்திலும் ஆப்பிரிக்காவிலும் அடுத்தடுத்து பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து ஆட்சிகள் நிலைகுலைந்துகொண்டிருப்பது நிலைமையை மோசமாக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று. சிரியா நிலைமை இதற்கு ஒரு உதாரணம். உள்நாட்டுச் சண்டை காரணமாக அதன் மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் இன்று அகதிகளாகிவிட்டனர். 40 லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். எல்லா நாடுகளும் இதை வேடிக்கை பார்க்கின்றன. முக்கியமாக, மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள பணக்கார நாடுகள் அகதிகள் பிரச்சினையில் சிறிதும் அக்கறையில்லாமல் நடந்துகொள்கின்றன. அகதிகளாக வருவோரைக் கப்பல்களிலிருந்து மீட்பதைக் குறைத்துக்கொள்வது என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவுசெய்துவிட்டதால், பசியாலும் நோய்களாலும் கடல் கொந்தளிப்பாலும் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வெளிநாடுகளிலிருந்து வருவோரை அரவணைத்து அழைத்துக்கொள்ளும் பாரம்பரியம் மிக்க அமெரிக்காவே கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் சிரியா அகதிகளுக்குப் புகலிடம் அளித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அகதிகள் மறுவாழ்வு ஆணையரின் திட்டங்களுக்கு இன்னமும் போதிய நிதி கிடைக்கவில்லை.

இந்த இடத்தில் நாம் இரு கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது. 1. இன்றைய சிரியாவின் பிரச்சினைக்கு சிரியா மட்டுமேதான் காரணமா? 2. மேலும், சிரியாவின் பிரச்சினை சிரியாவோடு மட்டுமே முடிந்துவிடுகிறதா? சிரியாவின் இன்றைய பிரச்சினையின் பின்னணியில் சர்வதேச அரசியல் எப்படியெல்லாம் பின்னியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். சிரியாவின் அண்டை நாடுகளான துருக்கியும் லெபனானும் ஜோர்டானும் இந்த அகதிகள் பாரத்தால் எவ்வளவு துடிக்கின்றன என்பதும் நமக்குத் தெரியும். ஆக, எது ஒன்றுமே எவர் ஒருவரின் பிரச்சினையாக மட்டுமே இருப்பதல்ல. அதுவும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்தால், எவர் ஒருவரின் துயரத்தையும் எவர் ஒருவரும் வேடிக்கை பார்த்தல் தர்மமாகாது.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும் கொடூரமான சூழலிலிருந்து தப்பிக்கவும்தான் மக்கள் தங்களுடைய இருப்பிடம்விட்டு அகதிகளாக வெளியேறுகின்றனர். அப்படிப்பட்டவர்களைப் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் குடியமர்த்துவது உலகச் சமுதாயத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றல்லவா?

இப்போதைய கணக்கின்படி அகதிகளில் 86% வளரும் நாடுகளில்தான் இருக்கின்றனர். அவர்களுக்குப் புகலிடம் அளித்து உணவு, உடை, மருந்துகள் தரும் அளவுக்குப் பல நாடுகளில் போதிய அளவுக்கு வசதிகள் இல்லை. தங்களால் ஏற்க முடியாது என்று நினைக்கும் சுமையைப் பகிர்ந்துகொள்ளவாவது பணக்கார நாடுகள் முன்வர வேண்டும். வெறும் புவிசார் அரசியல் நோக்கங்கள் மட்டுமே சர்வதேச உறவுகளுக்கான அடிப்படை ஆகிவிடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x