

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஹமீது நஸீர் பட்டின் பார்வையைப் பறித்திருக்கிறது, அந்த மாநிலக் காவல் துறையினர் நடத்திய தாக்குதல். காவல் துறையினர் பயன்படுத்திய லேசுரகத் தோட்டாக்கள் தாக்கியதில் அந்த மாணவனின் வலது கண் கடுமையாகச் சேதமடைந்திருக்கிறது. ‘ஆபத்தற்ற தாக்குதல்’ என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்தும் தாக்குதலின் ஒரு பகுதி இது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 2010-ல் ஆயுதம் ஏந்தாத போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, போராட்டங்களின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் ‘மரணம் ஏற்படுத்தாத ஆயுதங்க’ளைப் பாதுகாப்புப் படையினருக்கும் காவல் துறையினருக்கும் வழங்கியது ஐ.மு.கூ. அரசு. இந்த ஆயுதங்கள் போராட்டக்காரர்களைக் கலைக்க உதவுமே தவிர, உயிரிழப்பை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டது.
மிளகு கையெறிகுண்டுகள், லேசுரகத் தோட்டாக்களை உமிழும் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை இதற்காக மத்திய அரசு வாங்கியது. எனினும், காஷ்மீர் போன்ற இடங்களில் இதுபோன்ற ஆபத்தற்ற ஆயுதங்களை அறிமுகப்படுத்துவது என்பது எவ்வளவு அபத்தமானது என்பது விரைவில் தெரியவந்தது. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர், போராட்டங்களின்போது மிக அருகில் இருந்து போராட்டக்காரர்களின் தலை மற்றும் மார்பைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினர். அனந்த்நாக் பகுதியில் 2010 ஆகஸ்ட் மாதத்தில் மார்பிலும் அடிவயிற்றிலும் லேசுரகத் தோட்டாக்களின் சிதறல்கள் பாய்ந்ததில் இர்ஷாத் அஹமது பர்ரே எனும் 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தபோது, ‘மரணத்தை ஏற்படுத்தாத ஆயுதங்கள்’ எனும் பதமே எத்தனை போலியானது என்பது தெரியவந்தது.
2010 முதல் 2013 வரை இந்த ஆயுதங்கள் ஏற்படுத்திய பாதிப்பின் மூலம் கண்களில் மோசமான காயங்களுடன் காஷ்மீரின் முக்கியமான இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 என்று, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவருகிறது. 2010-ல் மட்டும் 12 பேருக்கு முற்றிலுமாகப் பார்வை பறிபோனது.
தெற்கு காஷ்மீரின் ஷோபியன் பகுதியில் ஆயுதம் ஏந்தாத போராட்டக்காரர்கள் பலரும் இந்த ஆயுதங்களால் பார்வையிழக்க நேரிட்டதைக் கண்டித்து, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் கடந்த ஆண்டு சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தற்போது பாஜக கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட முஃப்தி முகமது சயீதும் அவரது மகள் மெஹ்பூபாவும் மாணவன் ஹமீது நஸீர் பட்டுக்கு நேர்ந்த கதி பற்றி மவுனம் சாதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இச்சம்பவம் குறித்து நகரிலிருந்து வெளியாகும் செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த காவல் துறை ஐ.ஜி. ஜவாயிது கிலானி, “இதுபோன்ற சமயங்களில் போராட்டக்காரர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? கல்லெறிபவர்களை வேறு எப்படித்தான் கட்டுப்படுத்துவது?” என்று வெகு அலட்சியமாகக் கேட்டிருக்கிறார்.
ஆபத்தானவையோ ஆபத்தற்றவையோ, ஆயுதங்களுக்குப் பார்வை கிடையாது. ஆனால், பார்வையையும் கருணையையும் அழித்துவிடும் திறன் மட்டுமே உண்டு என்பதைத்தான் இந்தச் சம்பவமும், அதிகாரத் தரப்பின் அலட்சியமும் சொல்கின்றனவோ?!