அனைவருக்குமான நிதித் திட்டங்கள் செல்ல வேண்டிய பாதை!

அனைவருக்குமான நிதித் திட்டங்கள் செல்ல வேண்டிய பாதை!
Updated on
1 min read

நீண்ட காலமாகப் பல அரசுகளும் முயன்று தோற்ற ஒரு விஷயத்தில் மோடி அரசு வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. அனைத்துத் தரப்பு மக்களையும் நிதியாள்கைக்குள் கொண்டுவரும் மத்திய அரசின் ‘ஜன் தன் யோஜனா’, ‘ஜீவன் பீமா யோஜனா’, ‘சுரக்ஷா பீமா யோஜனா’, ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டங்கள் நல்ல ஆரம்பத்தைப் பெற்றிருக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சாமானியர்களுக்கு நிதி வசதியும் பாதுகாப்பும் கிடைக்க ‘ராஜீவ் காந்தி பங்கு சேமிப்பு முறை’, ‘பங்கு பரிமாற்ற வர்த்தக நிதி’ போன்ற திட்டங்களைக் கொண்டுவந்தது. அவற்றில் சேருமாறு வேண்டுகோளும் விடுத்தது. ஆனால், மக்களை அவை ஈர்க்கவில்லை. இதற்கான காரணங்கள் பல. விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல், அளிக்க வேண்டிய தகவல்கள் மற்றும் திட்டங்களால் அடையக்கூடிய பலன்கள்குறித்த நிச்சயமற்ற நிலை… இப்படி நிறைய. மாறாக, இப்போதைய திட்டங்கள் மிக எளிதான விண்ணப்ப நடைமுறை, நிச்சயமான நிதிப்பயன் குறித்த தெளிவு, செலுத்த வேண்டிய மிகக் குறைந்தபட்ச சந்தா ஆகியவற்றுடன் வெளியாகியிருப்பதால், இத்திட்டங்களில் சேர்வதில் மக்களின் ஆர்வத்தை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. இது நல்ல விஷயம்.

எல்லோரும் அரசு வங்கியில் கணக்கைத் தொடங்கலாம், அதில் ரொக்க இருப்பே இல்லாவிட்டாலும் பரவாயில்லை; தவிர, இனி அரசின் எல்லா நிதிப் பயன்களும் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என்பன உள்ளிட்ட காரணங்களே பலர் வங்கிக் கணக்கைத் தொடங்க ஊக்குவிப்பாக அமைந்தது. 12.5 கோடி மக்களைக் குறுகிய காலத்தில் வங்கியில் சேர்க்க முடிந்தது ஒரு சாதனைதான். ஜன் தன் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு இலவசமாகவே காப்பீட்டு வசதி உத்தரவாதமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் சேருவோர் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய சந்தா தொகை வெறும் ரூ. 330. உயிரிழப்பு நேர்ந்தால் குடும்பத்தார் பெறக் கூடிய தொகை ரூ. 2 லட்சம். சுரக்ஷா பீமா திட்டத்தில் ஆண்டுக்கு வெறும் ரூ.12 செலுத்தினால், கிடைக்கும் விபத்து மரண உரிமத் தொகை ரூ. 2 லட்சம். இந்தத் திட்டங்களால் வங்கிகள் / காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் ஈட்டும் என்பது ஒருபுறமிருக்க கோடிக் கணக்கான எளிய மக்களுக்கு ஒரு நல்ல ஆதாரத்தை இவை உருவாக்குகின்றன.

இந்த இடத்தில் அரசு செய்ய வேண்டிய முக்கியமான இரு பணிகள் இருக்கின்றன. 1. இத்திட்டத்தை மேன்மேலும் பல கோடி மக்களுக்குக் கொண்டுசெல்லத் தொடர் இயக்கங்களை முன்னெடுப்பது. 2. திட்டங்களில் சேர்த்ததையே ஒரு சாதனையாகக் கருதி அதோடு விட்டுவிடாமல், இத்திட்டங்களில் சேர்ந்திருப்பவர்களைத் தொடர்ந்து திட்டங்களில் தொடரவைக்கும் நடவடிக்கைகளை எடுப்பது. காலங்காலமாக அமைப்புசார்ந்த நிதியமைப்புகளோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தவர்களை அமைப்புக்குள் கொண்டுவருவது என்பது ஒரு பெருங்காரியம். அதைச் சாதிக்க வேண்டும் என்றால், அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in