திருநங்கைகளுக்காகக் கரம் சேருங்கள்!

திருநங்கைகளுக்காகக் கரம் சேருங்கள்!
Updated on
2 min read

திருநங்கைகள் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு மேலும் ஒரு விதை ஊன்றப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட ‘திருநங்கைகள் உரிமைப் பாதுகாப்பு மசோதா’ குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சந்தேகமில்லாமல் இது வரலாற்று நிகழ்வு. ஏனென்றால், சொந்தக் குடும்பத்தினர் முதல் பொதுவெளி வரை சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் புறக்கணிப்பையும் வெறுப்பையும் எதிர்கொண்டு வலியைச் சுமக்கும் திருநங்கைகள், அரசியல் அரங்கிலும் எல்லோருடைய கவனிப்புக்கும் அப்பாற்பட்டவர்களாகவே ஒதுக்கப் பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அவர்கள் மேம்பாட்டுக்காக ஒலிக்கும் எந்தக் குரலும், பல நூற்றாண்டு காலமாகக் குரல்வளை நெரிக்கப்பட்டு, குரலற்றவர்களாக இருக்கும் அவர்கள் விடுதலைக்கான மகத்தான குரலே. அரிதினும் அரிதாகவே இங்கு அப்படிப்பட்ட குரல்கள் ஒலிக்கின்றன. இப்போது அந்தக் குரல் ஒலித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது என்றால், அந்தக் குரல் தமிழகத்துக்குச் சொந்த மானது என்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது.

திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்திருக்கும் இந்த மசோதா, ‘கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, அரசு நிதியுதவி, சமூக அரவணைப்பு, திருநங்கைகள் உரிமையைப் பாதுகாக்கத் தனி நீதிமன்றங்கள்’ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்துகிறது. முக்கியமாக, தேசிய திருநங்கைகள் நல ஆணையம் அமைக்க வலியுறுத்துகிறது. இந்தியாவில் இதுவரை தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மட்டுமே திருநங்கைகள் நல ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும் சூழலில், தேசிய அளவில் அமைக்கப்படும் நல ஆணையம் ஏனைய மாநிலங்களிலும் நல ஆணையம் அமைக்க வழிவகுக்கும். கூடவே, சட்டபூர்வமாக நிறைய உரிமைகளை / சலுகைகளை அவர்கள் கோர உதவும் அமைப்பாகவும் அமையக் கூடும். மாநிலங்களவை இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது.

இந்திய வரலாற்றில் இதுவரை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறி சட்டமாகியிருக்கும் தனிநபர் மசோதாக்களின் எண்ணிக்கை வெறும் 14. கடைசியாக தனிநபர் மசோதா நிறைவேற்றப் பட்டது 1970-ல். அதற்குப் பிறகு - அதாவது 45 ஆண்டுகளுக்குப் பிறகு - ஒரு தனிநபர் மசோதா இப்போது மாநிலங்களவையில் நிறைவேறியிருக் கிறது. எனினும், இது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாகும். வரும் வெள்ளிக்கிழமை மக்களவையில் இந்த மசோதா தாக்கலாகிறது. மக்களவையில் இந்த மசோதாவின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கும் என்று தோன்றவில்லை. மாநிலங்களவையிலேயே அதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன. மாநிலங்களவை விவாதத்தில் தொடர்ச்சியாக, “இந்த மசோதாவை சிவா திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட். மேலும், “இந்த மசோதாவில் உள்ள ‘நடைமுறை சாத்தியமற்ற அம்சங்கள்’ நீக்கப்படும் என்றும் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அரசே கொண்டுவரும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மசோதாவை எதிர்க்கவும் தடுக்கவும் மேலும் பல கற்கள் உருவாக்கப்படலாம்.

எல்லாவற்றையும் மீறி இந்த மசோதாவை ஓரணியில் நின்று சட்டமாக நிறைவேற்ற வேண்டிய கடமை நம் மக்களவை உறுப்பினர்களுக்கு உண்டு. இந்த மசோதா திருநங்கைகளின் சமூக நிலை மேம்பட இன்னொரு வழியைத் திறக்கும் என்பதற்காக மட்டும் அல்ல; இந்தியா தன்னுடைய வரலாற்று அநீதிகளில் ஒன்றுக்குப் பிராயச்சித்தம் தேடும் முயற்சிகளில் ஒன்று இது என்பதற்காகவும் அவர்கள் ஆதரிக்க வேண்டும்.

அசாத்தியங்களைச் சாத்தியமாக்குவதே சமூக நீதிக்கான அடிப்படைக் காரியம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in