ஜனநாயகம் தூக்கியும் பிடிக்கும் தூக்கியும் அடிக்கும்!

ஜனநாயகம் தூக்கியும் பிடிக்கும் தூக்கியும் அடிக்கும்!
Updated on
2 min read

முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த இத்தனை மாதங்களில் அர்விந்த் கேஜ்ரிவால் என்னதான் கற்றுக்கொண்டிருக்கிறார் என்று கேட்கத் தோன்றுகிறது, அவர் அடிக்கும் கூத்துகளை யெல்லாம் பார்க்கும்போது. டெல்லி அரசு இயந்திரத்தைக் கிட்டத்தட்ட ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது ஆஆக அரசு.

டெல்லி மட்டும் அல்ல; புதுவை, சண்டிகர் என எல்லா ஒன்றியப் பிரதேச நிர்வாகங்களையும் காலத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதும் அதற்கேற்ப சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவதும் காலத் தேவை. டெல்லி நிர்வாகத்தை முழுமையாக மாநில நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுபற்றி நீண்ட காலமாகவே பிரதான கட்சிகள் எல்லாமும் பேசிவருகின்றன. மாநிலங்களை மத்திய அரசுக்குச் சமமான கூட்டாளியாகக் கருதுவதாகக் கூறும் பிரதமர் மோடி, இதுபற்றி யெல்லாம் யோசிக்க வேண்டும். ஆனால், இவையெல்லாம் எப்படி ஒன்றியப் பிரதேச அரசுகளால் விவாதத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமோ, அப்படி எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து பெற்றது என்றாலும், முழுமையான மாநிலம் அல்ல டெல்லி. அதன் நிர்வாகம் மத்திய அரசாலும் தேர்ந்தெடுக் கப்பட்ட டெல்லி மாநில அரசாலும் சமகாலத்தில் நிர்வாகம் செய்யப்படுகிறது. அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநருடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே அரசியல் சட்டம் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டப் பிரிவு 239 பிற மாநில ஆளுநர்களைவிடத் துணை நிலை ஆளுநர்களுக்கு விருப்ப அதிகாரத்தை அதிகம் தந்திருக்கிறது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை மாநில நிர்வாகம் தொடர்பாக முடிவுகளை எடுத்து, அவற்றைத் துணை நிலை ஆளுநருக்குத் தெரிவித்து, நிர்வாகம் நடைபெற அவருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. இரு தரப்பும் அனுசரித்துப்போகாத விஷயங்களில் இறுதி முடிவெடுக்கும் விருப்ப அதிகாரமும் துணை நிலை ஆளுநருக்கே தரப்பட்டிருக்கிறது. இது எதுவும் கேஜ்ரிவாலுக்குத் தெரியாததல்ல. ஆனால், தெரிந்தே கலாட்டா அரசியலில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.

டெல்லி மாநில அரசுக்கு 15 முதல் 20 நாட்கள் வரையிலான காலத்துக்குத் தாற்காலிகமாக தலைமைச் செயலரை நியமிப்பதில் தொடங்கிய பிரச்சினை இது. இந்தப் பதவிக்கு சகுந்தலா கேம்லினைத் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் நியமித்தார். இதை ஏற்க மறுத்ததோடு, “சகுந்தலா தனியார் மின் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடியவர்” என்று சகுந்தலா மீதும் பகிரங்கக் குற்றஞ் சாட்டியிருக்கிறார் கேஜ்ரிவால். இந்த விஷயத்தில் தன்னுடைய முடிவே இறுதியானது என்று நஜீப் ஜங் கூறிவிட்ட நிலையில், இருவரும் தங்கள் தரப்பைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

ஒரு முதல்வரே அதிகாரிகளைப் பற்றித் தனிப்பட்டரீதியிலான, தரக் குறைவான விமர்சனங்களை முன்வைப்பது, தான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்று காய் நகர்த்துவது, தான் நினைத்தது நடக்காதபோது கூப்பாடு போடுவது என்பதெல்லாம் ஒரு நிர்வாகிக்கு அழகல்ல. கேஜ்ரிவால் கட்சியில் நிறுவிக்கொண்டதைப் போலவே அரசமைப்பிலும் சர்வாதிகாரத்தை நிறுவிக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது. ஜனநாயகம் ஒருவரை எப்படித் தூக்கிப்பிடிக்கிறதோ, அதே வேகத்தில் தூக்கிவீசவும் வல்லது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்வது கேஜ்ரிவாலுக்கு நல்லது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in