

இன்றைய பாகிஸ்தானில் ஒருவர் சுதந்திரமாகவும் வெளிப் படையாகவும் உண்மைகளைப் பேசுவதென்பது, அவரது மரணத்தை அவரே வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போன்றது என்ற பொருளில் அந்நாட்டு நாளிதழ் ஒன்று எழுதியிருக்கிறது. சமீபத்தில் சபீன் மஹ்மூது என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவமும் இதையே உறுதிப்படுத்துகிறது.
மனித உரிமை ஆர்வலரும் கராச்சி நகரில் உள்ள காபி விடுதி உரிமையாளருமான சபீன் மஹ்மூது கடந்த 24-ம் தேதி தனது தாயுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, போக்குவரத்து சிக்னலில் நிறுத்திச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அவருடைய தாய் படுகாயமடைந்திருக்கிறார்.
இதே கராச்சியில் ஜியோ டி.வி-யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹமீத் மிர் ஓராண்டுக்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டார். பலூசிஸ் தானில் சட்டத்துக்குப் புறம்பாகப் பலரை அரசு சுட்டுக் கொல்வதைத் தட்டிக்கேட்டதால் அவருக்கு அந்தக் கதி ஏற்பட்டது. ராணுவத்திலேயே மதவாதம் புகுத்தப்படுகிறது என்று எழுதியதற்காக பத்திரிகையாளர் சலீம் ஷாசத் 2011-ல் கொல்லப்பட்டார். இது போன்று இன்னும் ஏராளம். இதன் தொடர்ச்சிதான் சபீன் மஹ்மூத் கொலை.
சபீன் மஹ்மூத் கொல்லப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக வந்த கொலைமிரட்டல் கடிதத்தில் ‘பாகிஸ்தானில் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால், எங்களைப் பற்றிப் பேசாதே, பலூசிஸ்தானில் நடப்பதுகுறித்துப் பேசி தேச நலனைக் குலைக்காதே’ என்றெல்லாம் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதற்கெல்லாம் அஞ்சாத சபீன், திட்டமிட்டபடி தன்னுடைய காபி விடுதியில் விருந்தினர்களை வரவழைத்து, பலூசிஸ்தானில் நடக்கும் அராஜகங்களை விவரித்தார். இது அவருடைய உயிரையே பறித்துவிட்டது.
சபீன் மஹ்மூத் பத்திரிகையாளர் அல்ல என்றாலும், பாகிஸ் தானில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகத்தையும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேச சமூகம் அறியுமாறு தொடர்ந்து செயல்பட்டு வந்தார். தன்னுடைய சொந்த இடத்தில் கூட்டங்களை நடத்தி, மதவாத சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசினார். பலூசிஸ்தானின் விடுதலைக்குப் பாடுபடும் போராளிகள் ஒடுக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்துவந்தார். இணையவழிச் செயல்பாட்டிலும் அவர் பிரபலமாக இருந்தார் என்பதால், அவரைத் தங்களுடைய பெரிய எதிரியாக மதவாத சக்திகள் நினைத்துப் பழிவாங்கிவிட்டன. நிராயுதபாணியான ஒரு பெண்ணும் வயதான அவருடைய தாயாரும் நகரின் போக்குவரத்து சிக்னலில் வாகனம் நின்றபோது எளிதாகச் சுடப்பட்டனர் என்பது கராச்சி எப்படி இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.
உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இரண்டாவது நாடு பாகிஸ்தான் என்று யுனெஸ்கோ அமைப்பு முத்திரை குத்தியிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை விசாரிப்பதிலும் குற்றவாளிகளைக் கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதிலும் அரசு தவறிவருவதைப் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக் கான குழு வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
பயங்கரவாதம், மதவாதத்துக்கு எதிராகத் தேசியச் செயல்திட்டத்தை பாகிஸ்தான் அரசு முடுக்கிவிட்டிருக்கும் வேளையில், சபீன் கொல்லப் பட்டிருப்பது வேதனையைத் தருகிறது. இந்தக் கொலையைக் கண்டித்துள்ள அரசு, தகுந்த விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. இதற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு என்ன மாதிரியான விசாரணை நடந்திருக்கிறது என்று கேட்டால் அதற்கு அரசிடம் பதில் இருக்காது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் அரசு செல்ல வேண்டிய தொலைவு மிகவும் அதிகம்!