கோபுலு: விடைபெற்ற பொற்காலம்!

கோபுலு: விடைபெற்ற பொற்காலம்!
Updated on
2 min read

தமிழகத்தின் தன்னிகரற்ற ஓவியர்களில் ஒருவரான கோபுலு மறைந்துவிட்டார். அவருடன் ஒரு பொற்காலமும் விடைபெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

18-06-1924-ல் தஞ்சாவூரில் பிறந்த கோபாலனை ‘கோபுலு’ ஆக்கியது, அவர் தன் முன்னோடிகளில் ஒருவராகக் கருதிய ஓவியர் மாலி. 1941-ல், ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்த ஓவியர் மாலி தீபாவளி மலருக்கு தியாகையரின் ஓவியம் வேண்டும் என்பதற்காக 16 வயதே நிரம்பிய கோபுலுவை திருவையாறுக்கு அனுப்பினார். தியாகப் பிரம்மத்தின் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி கோபுலு வரைந்த ஓவியம் ‘தியாகராஜ சுவாமிகள் பூஜை செய்த பட்டாபிஷேகம்’. இந்த ஓவியத்தை எல்லோரிடமும் எப்படிப் பெருமையாகக் குறிப்பிடுவாரோ, அதே அளவுக்கு நெகிழ்ச்சியோடு தன்னுடைய ஆரம்ப நாட்களில், நண்பர்களுடன் இணைந்து நடத்திய ‘தென்றல்’ கையெழுத்துப் பத்திரிகை ஓவியங்களையும் குறிப்பிடுவார் கோபுலு. சிறுவயது முதலாக இப்படி ஓவியங்கள் மீது அவருக்கு இருந்த காதலும் பிடிமானமும்தான் கடைசி வரை அவரை இயக்கின. கடந்த 2002-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, அவருடைய உடலின் வலது பக்கம் முழுவதும் செயல்படாமல் போனது. ஆனாலும், அவர் ஓவியம் வரைவதை நிறுத்திவிடவில்லை. இடது கையால் ஓவியம் வரைய ஆரம்பித்தார். வரைந்துகொண்டே இருந்தார்.

கோபுலுவின் காலகட்டம் பொற்காலமாகக் கருதப்படுவதில் கோபுலுவின் பங்கும் பிரதானமானது. புகைப்படக் கலை ஏற்கெனவே வலுவாகக் காலூன்றியிருந்த நேரத்தில் பத்திரிகை ஓவியங்களின் இடத்தை அசைக்க முடியாததாக ஆக்கியது கோபுலு போன்ற ஒருசில மேதைகள்தான். எத்தனையெத்தனை விதமான ஓவியங்கள். கோட்டோவியங்கள். வண்ணச் சித்திரங்கள், கதைகளுக்கான ஓவியங்கள், பயண ஓவியங்கள், பக்தி ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள்… எல்லையற்று விரியும் ஓவியக் கடல் கோபுலு!

கோபுலுவின் ஒரு வரலாற்று ஓவியத்தைக் கொஞ்சம் விவரமாகப் பார்க்கத் தெரிந்தவர்கள் அறிவார்கள், அதில் எத்தனையெத்தனை நுட்பமான சங்கதிகளை அவர் உள்ளடக்கியிருக்கிறார் என்பதை. சாதாரண நகைச்சுவைத் துணுக்குகளுக்கான சித்திரங்களிலும்கூட ஏராளமான நுட்பமான கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்குவதுதான் அவருடைய சிறப்பம்சம். அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன தருணங்கள், மனிதர்களின் சின்னத்தனங்கள், மேன்மைகள், மனித இயல்பின் விசித்திரம் ஆகியவை கோபுலுவின் கருப்பொருள்களில் முக்கியமானவை. இந்த பாணியில் கோபுலு அளவுக்கு உயரத்தை எட்டியவர்கள் தமிழ்நாட்டில் வேறு எவரும் இல்லை என்று சொல்ல முடியும். புத்தகத்தைப் பார்த்து ‘தேகாப்பியாசம்’ (உடல்பயிற்சி) செய்ய முயன்று கைகால்கள் சிக்கிக்கொண்டு தவிக்கும் மனிதர், ‘ஏரியா’ விட்டு ‘ஏரியா’ வந்து, அந்த ‘ஏரியா’ நாய்களிடம் மாட்டிக்கொள்ளும் அந்நிய நாயின் முகத்தில் நிலவும் அச்சம், விரிந்து பரந்திருக்கும் வெட்டவெளியில் கார் ஓட்டக் கற்றுக்கொள்பவர் தூரத்து ஒற்றைப் பனையில் போய் சரியாக மோதிக்கொள்ளும் அபத்தம், கடந்துசெல்லும்போது தங்கள் கைத்தடியின் வளைந்த பகுதிகள் சிக்கிக்கொள்ள கீழே விழும் முதியவர்கள், தன்னிடம் நாளிதழ் இருந்தாலும் பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் நாளிதழில் பார்வையை நுழைக்கும் இரு மனிதர்களின் விசித்திரம் என்று கோபுலுவின் நகைச்சுவை அடைந்த உச்சங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஒரு காலகட்டத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களும்கூட அவரது கேலிச்சித்திரங்கள். கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை அவர் வரைந்தார். ஓவியங்களுக்காகவே பத்திரிகை வாங்கும் ஒரு கூட்டத்தைத் தமிழகத்தில் உருவாக்கியவர் அவர்.

சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ஒரு கலைஞன். ஆனால், தமிழக அளவில்கூட அவருக்குப் பெரிய அளவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதுதான் துயரம். நம் சமூகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று இது. ஆனால், கோபுலுவுக்கு என்றைக்குமே இதுபற்றியெல்லாம் பெரிய புகார்கள் இருந்ததில்லை. மாபெரும் கலைஞர்கள் எப்போதும் அவர்களுக்கென ஓர் உலகத்தை சிருஷ்டித்துவிடுபவர்கள். அவர்கள் அங்கு வாழ்பவர்கள். அங்கு அவர்களுக்கு குறைகளும் இருப்பதில்லை; அழிவும் இருப்பதில்லை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in