

மீண்டும் அரசியல் அரங்கின் மையத்துக்கு வந்திருக்கிறார் ஜெயலலிதா. அவருடைய அரசியல் வாழ்க்கைக்கே பெரும் சவாலாகக் கருதப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை வென்றிருக்கிறார். தமிழ்நாட்டின் முதல்வராக அவர் முதல் முறை பதவி வகித்த 1991-96 காலத்தில், வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்ததாக ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவர் நிரபராதி என்று தீர்ப்பளித்திருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.
ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில், இந்தத் தீர்ப்பு அவருக்கு மிகப் பெரிய அரசியல் வெற்றி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஊழல், முறைகேடு என்று குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு முறை முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்த ஓர் அரசியல் தலைவர், இரண்டு முறையும் உயர் நீதிமன்றங்களால் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவரை நடந்திராத ஒன்று. அதிலும் இப்போதைய வழக்கு 18 ஆண்டு விசாரணை வரலாற்றைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்ட போது, அவருடைய அரசியல் வாழ்க்கை இதோடு முடிந்தது என்றே கருதினார்கள், அவருடைய அரசியல் எதிரிகள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக, கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தைத் தன் கைக்குள்ளேயே வைத்திருந்தது. மக்களவைத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், தமிழக எதிர்க் கட்சிகள் அதிமுகவின் ஓட்டத்தை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சூழலில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. முதல்வர் பதவியிலிருந்து விலகியதோடு, அரசியல் களத்திலிருந்தும் ஒதுங்கினார் ஜெயலலிதா. தமிழக எதிர்க் கட்சிகள் இதை ஒரு பெரும் வாய்ப்பாகவே பார்த்தன. மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றமும் ஜெயலலிதாவின் குற்றத்தை உறுதிசெய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்தான் சூழலைத் தலைகீழே புரட்டிப்போட்டு மீண்டும் மேடையின் மையத்துக்கு வந்திருக்கிறார் ஜெயலலிதா.
இந்தத் தீர்ப்பு சில கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பாமல் இல்லை. தீர்ப்பின் அடிப்படையும் அது முன்வைக்கும் வாதங்களும் விவாதக் களத்தில் சட்ட நிபுணர்களாலும் விமர்சகர்களாலும் ஆராயப்படுகின்றன. மேல்முறையீட்டுக்கான வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. சட்டரீதியிலான தடையை கர்நாடக நீதிமன்றம் நீக்கி இருக்கும் நிலையில், மீண்டும் களம் நோக்கி நகர்கிறார் ஜெயலலிதா. ஏராளமான சவால்கள் அவர் முன் காத்திருக்கின்றன. குறிப்பாக, அவர் பதவியில் இல்லாத காலகட்டத்தில் தமிழக நிர்வாகத்தில் பெரும் உறைநிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் வளர்ச்சி ஓட்டத்தில் முன்வரிசையில் இருக்கும் தமிழகம், இப்போது பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், சுணங்கியிருக்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து, அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் இப்போது மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.