

2002 செப்டம்பர் 28-ம் தேதி அதிகாலையில் குடிபோதையில் காரைத் தாறுமாறாக ஓட்டி, நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தார்கள். சல்மான் கானுடன் காரில் இருந்தவர்களில் அவரது பாதுகாப்புக்குக் காவல்துறையால் அனுப்பப்பட்ட காவலர் ரவீந்திர பாட்டீலும் ஒருவர். அவரது சாட்சியம்தான் சல்மான் கானுக்குத் தண்டனை கிடைப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை வரவேற்பதற்கு ரவீந்திர பாட்டீல் உயிரோடு இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது.
சல்மான் கான் வழக்கின் காரணமாக ரவீந்திர பாட்டீல் தொடர் நெருக்கடிகளையும் நெருக்குதல்களையும் சந்தித்திருக்கிறார். அந்த வழக்கில் பலரும் பிறழ் சாட்சிகளாக மாறியும்கூட, அச்சமின்றி இறுதிவரை உறுதியாக இருந்தார் பாட்டீல். புதிரான விதத்தில் அவரது வாழ்க்கை தடம் புரண்டது. வேலையும் பறிபோய், காசநோய் தொற்றிக்கொள்ள, குடும்பத்தினரால் துரத்தப்பட்டு வீதிகளில் திரிந்த பாட்டீல் 2007-ல் மரணமடைந்தார். செல்வாக்கானவர்கள் முன்னால் நீதியும் எளிய மனிதர்களின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் சிதைந்துபோகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக ஆகிவிட்டது ரவீந்திர பாட்டீலின் கதை.
எவ்வளவு நாடகங்கள் நடக்க வேண்டுமோ அவ்வளவு நாடகங்களும் நடந்தேறியிருக்கின்றன இந்த வழக்கில். முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியது, சாட்சியங்களின் ஆவணங்கள் காணாமல் போனது போன்றவை மட்டுமல்ல, காரை ஓட்டியது தான்தான் என்று சல்மான் கானின் ஓட்டுநர் புதுக் கதையைக் கொளுத்திப் போட்டார், அதுவும் வழக்கின் இறுதிக் கட்டத்தில். எதுவும் எடுபடவில்லை. இறுதியில் நீதியே வென்றிருக்கிறது.
2002 சம்பவத்துக்குப் பிறகு சல்மான் கான் மாறிவிட்டார் என்றும், தொடர்ந்து சமூக சேவை செய்துவருகிறார் என்றும், திரைப்படத் துறையில் அவர் மீது ரூ.200 கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் சல்மான் கான் ஆதரவாளர்கள் முறையிடுகிறார்கள். சல்மான் கானின் பயன் மதிப்பு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். மனித உயிர்களுக்கு அது ஒருபோதும் சமமாகாது. அதைத்தான் மிக மிக தாமதமாகக் கிடைத்த இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
சல்மான் கான் மீதுள்ள ‘போதை’யில் அவருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியவர்கள் தொடும் எல்லைகள் இங்கே கவனிக்கத்தக்கது. குற்றத்தை, நடைபாதையில் தூங்கியவர்கள் மீது சுமத்தும் அளவுக்கு சல்மான் கான் ஆதரவாளர்கள் போய்விட்டார்கள். சாலையோரம் தூங்குவது ஏழைகளின் குற்றம் என்றால் அவர்கள் ஏழைகளாக இருப்பது யாருடைய குற்றம்? ஏழைகளை உருவாக்கும் சமூகத்தின் குற்றமல்லவா அது?
சங்கடமான சில கேள்விகள் நம் முன் எப்போதும் தொக்கி நிற்கின்றன. ஒரு வழக்கு விசாரணை நடக்கும் வேகம் சாமானியர்கள் விஷயத்திலும் செல்வாக்குள்ளவர்கள் விஷயத்திலும் ஏன் இவ்வளவு வேறுபடுகிறது? சாமானியர்களுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக்குமான இடைவெளியை சரிசெய்யக் கூடிய இடம் அல்லவா நீதிமன்றங்கள்? ஆனால், நீதி குறித்த கருத்தாக்கத்துக்கும் நடை முறைக்கும் உண்மையில் எவ்வளவு வேறுபாடு? என்றைக்கு நாம் இதையெல்லாம் சரிசெய்யப்போகிறோம்?