

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கிலிருந்து சில அனுமானங்களைப் பெற்றுள்ள பாஜக அரசு, வங்க தேசத்திலிருந்து இந்தியா வந்து குடியேறியுள்ள இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான கொள்கையைத் தயார்செய்து கொண்டிருக்கிறது. அதே சமயம், வங்கதேசத்திலிருந்து வந்து சட்ட விரோதமாக இங்கே குடியேறுகிறவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதையும் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறது.
2014 மக்களவை பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இருந்த நரேந்திர மோடி, “பிற நாடுகளில், இந்து என்பதற்காகவே அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது; அவர்கள் எங்கே போவார்கள்? நாம்தான் அவர்களுக்குப் புகலிடம் அளித்து காப்பாற்ற வேண்டும்” என்றெல்லாம் பேசினார். அதே காலகட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பேசும்போது, “இங்கே கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பறித்துக்கொள்வோர் வெளியேற வேண்டும்; இந்த நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுதான் எங்களுடைய முன்னுரிமை. இதுதான் எங்களுடைய முதல் பொறுப்பு” என்று பேசினார்.
வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களை வரவேற்றுக் குடியமர்த்துவது, மற்றவர்களை வெளியேற்றுவது போன்ற வாக்குறுதிகளை பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, அசாம் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வழங்கினார். இந்தப் பேச்சுகளுக்கெல்லாம் ஒரு பரந்துபட்ட சித்தாந்தம் அடிப்படையாக இருக்கிறது. உலகின் எந்தப் பகுதியில் இந்துக்கள் தாக்கப்பட்டாலும், அலைக்கழிக்கப்பட்டாலும் அவர்களுக்கான தாய்வீடு இந்தியா வாகத்தான் இருக்க முடியும் என்பதுதான் அந்த சித்தாந்தம். இஸ்ரேல் கடைப்பிடிக்கும் கொள்கையைப் போன்றதுதான் இது. உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும் யூதர்கள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேலுக்குத் திரும்புவதும் நிம்மதியாக வாழ்வதும் அவர்களுடைய உரிமை என்பதற்கு இணையானது இது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்தமுறை பதவி வகித்தபோது, இந்தியக் குடியுரிமைச் சட்டம் 2003-ல் திருத்தப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து வந்து ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை அளிப்பதை அந்தச் சட்டதிருத்தம் எளிமையாக்கியது. இப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நிலப் பகுதிகளை வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்வதற்கான மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டிருக்கிறது. மத அடிப்படையில் அந்நாட்டு மக்களைப் பிரித்துப் பார்ப்பதும் வெவ்வேறு வகையில் அவர்களை நடத்துவதும் இரு நாடுகளுக்கும் இடையில் உறவை சுமுகமாக்குவதற்குப் பதிலாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.
இப்படிச் செயல்படுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுகிறவர்களை என்ன செய்வது என்று தேசியக் கொள்கை வகுத்து அதன்படி நடக்க வேண்டும். அல்லது 1951-ல் நடந்த அகதிகள் மறுவாழ்வு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் ஒப்புக்கொண்ட வகையில் இந்தியாவும் நடக்க வேண்டும். தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பினால் உயிருக்கு ஆபத்து நேரும், வாழ முடியாது என்று அகதிகள் கூறினால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கி அரவணைக்க வேண்டும். அதை விடுத்து அகதிகள் விஷயத்திலும் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய நினைப்பது இந்தியாவுக்கு அவப்பெயரையே தேடித்தரும்.