Published : 25 May 2015 09:26 AM
Last Updated : 25 May 2015 09:26 AM

ஃபேஸ்புக்: நண்பரா, எதிரியா?

ஃபேஸ்புக் - இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இதனால், ஃபேஸ்புக்கின் 140 கோடிப் பயனாளிகளும், அந்தக் கட்டுரைகளும் செய்திகளும் சம்பந்தப்பட்ட ஊடகங்களில் வெளியான உடனே ஃபேஸ்புக்கிலும் படிக்க முடியும்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’, ‘பஸ்ஃபீடு’ ‘என்பிசி’, ‘தி அட்லாண்டிக்’, ‘தி கார்டியன்’, ‘பிபிசி’, ‘ஸ்பீகல் ஆன்லைன்’, ‘பில்டு’ ஆகியவைதான் அந்த ஊடகங்கள். இதழாளர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இதனால், அதிக விளம்பர வருவாய் அந்த ஊடகங்களுக்குக் கிடைக்கும். தவிர, இந்த ஊடகங்களைச் சந்தைப்படுத்துவதன் மூலம் ஃபேஸ்புக்குக்குக் கிடைக்கும் வருவாயில் 70 சதவீதத்தை ஃபேஸ்புக்கே வைத்துக்கொள்ளும்.

தரமான, நடுநிலையான, நம்பிக்கையூட்டும் செய்திகளைத் தரும் அச்சு ஊடகங்களுக்கு இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதே சமயம், இணையயுகத்தின் வருகைக்குப் பிறகு தடுமாறிக்கொண்டிருக்கும் மேற்கத்திய ஊடகத்துறைக்கு ஃபேஸ்புக்கின் துணை மிகவும் ஆசுவாசமளிப்பது. வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு. செய்தி ஊடகங்களின் நிலைகுறித்து 2015-ல் ‘பியூ ஆராய்ச்சி மையம்’ வெளியிட்ட அறிக்கை, ‘அச்சு ஊடகத்தின் விளம்பர வருவாய் 2014-ல் பெருமளவு சரிந்திருக்கும் அதே வேளையில், இணையம் வழியாகக் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருக்கிறது’ என்று சொல்கிறது.

ஆனாலும், அச்சுப் பதிப்புகள் சந்தித்திருக்கும் விளம்பர வருவாய் இழப்பை இணைய வழி விளம்பரங்கள் ஈடுகட்டவே இல்லை. அமெரிக்காவில் அச்சு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 100 கோடி டாலர்கள் அளவுக்குச் சரிந்திருக்கிறது, இணைய விளம்பரங்களின் வருவாயோ 10 கோடி டாலர்கள் அளவுக்குத்தான் அதிகரித்திருக்கிறது.

பிரபல பதிப்பாளர்களெல்லாம் ஃபேஸ்புக்கின் ‘இன்ஸ்டண்ட் ஆர்ட்டிக்கிள்ஸ்’ தளத்தில் கால்பதித்துவிட்டார்கள். இன்னும் பலரோ கால்பதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சில பதிப்பாளர்கள் ‘ஃபேஸ்புக்’கைத் தவிர்க்கப்போவதாகச் சொல்லியிருப்பதைப் புத்திசாலித்தனமான முடிவாகக் கருத இடமில்லை.

‘பியூ ஆராய்ச்சி மையம்’ எடுத்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதற்கு முந்தைய வாரம் அரசாங்கத்தையும் அரசியலையும் பற்றிய செய்திகளை ‘ஃபேஸ்புக்’ வழியாகச் சென்று படித்திருப்பதாகத் தெரியவந்தது. மேலும், இணையம் மூலம் செய்யப்படும் விளம்பரங்களில் ‘ஃபேஸ்புக்’கின் ஆதிக்கம் மிகவும் அதிகம். இந்த ஊடகங்களின் இணையதளங்களுக்குக் கிடைக்கும் விளம்பர வருவாயைவிட இது பல மடங்கு அதிகம்.

ஊடகங்கள் இந்த வகையில் ‘ஃபேஸ்புக்’குடன் உறவு வைத்துக்கொள்வது மிகவும் சிரமமான காரியம் அல்ல. செய்திப் பகிர்மானம் செய்யும் பொறுப்பைப் பல்லாண்டுகளுக்கு முன்பே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஒப்படைத்தது இதே ஊடக நிறுவனங்கள்தான் என்பதால், இப்போதைய நிலைக்குப் பொறுப்பும் இவர்களே.

பத்திரிகைத் துறை இப்போது செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று உள்ளது. காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களையும் ஊடகங்களையும் மாற்றிக்கொண்டாலும் தங்களுக்கே உரிய தனித்துவத்தையோ நெறிமுறைகளையோ விட்டுவிட்டு, அந்தத் தொழில்நுட்பங்களிடமும் புதிய ஊடகங்களிடமும் முற்றிலும் அடிபணிந்துவிடக் கூடாது. உள்ளடக்கத்தில் தரத்தையும் புதுமையையும் பின்பற்றும்வரை யாரிடமும் அடிபணியத் தேவையில்லை என்பதுதான் பத்திரிகை உலகின் தாரக மந்திரமாக இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x