ராகுலின் மறுவருகை!

ராகுலின் மறுவருகை!
Updated on
2 min read

ஒரு கட்சியின் முக்கியத் தலைவர் ஓய்வுக்காகச் சென்று ஊர் திரும்புவதையே திருவிழாபோல ஒரு விசேஷமாகப் பார்க்கும் கொடுமையெல்லாம் இந்தியாவில்தான் சாத்தியம். அதேசமயம், ஒரு மனிதர் தனிப்பட்ட முறையில் ஓய்வுக்காகப் பயணம் செல்வதை அரசியலாக்கி இவ்வளவு குதறிப் பார்ப்பதும் இங்குதான் சாத்தியம். எப்படியோ, இரு மாத இடைவெளிக்குப் பின் அரசியல் அரங்குக்குத் திரும்பியிருக்கும் ராகுல் களத்தில் முழுத் தீவிரத்துடன் இறங்கியிருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய ஒன்று. தவிர, அதீதப் பெரும்பான்மை தரும் அசுர பலத்துடன் அவசரச் சட்டங்களின் அரசாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் பாஜக அரசின் முன் எதிர்க் கட்சிகள் வலுவாக நிற்பது ஜனநாயகத்துக்கும் நல்லது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ் சுணக்கத்துடனேயே காணப்பட்டதற்கு ராகுலும் ஒரு முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாதது. டெல்லி தேர்தல் முடிவுகள் காங்கிரஸையும் ராகுலையும் மேலும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கின. இந்நிலையில், டெல்லியில் நடந்த ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா’வுக்கு எதிராக நடந்த மாபெரும் பேரணி ராகுலின் மறுவருகையையொட்டித் திட்டமிடப்பட்டதுபோல் அமைந்தது அவருக்கு அனுகூலம்.

இந்தப் பேரணி ராகுலுக்கு மறுதொடக்கம் கொடுத்தது மட்டு மல்லாமல் ஒரு எதிர்க் கட்சியாகத் திறம்பட பங்காற்ற காங்கிரஸுக்கும் உந்துவிசையை அளித்திருப்பதுபோல் தோன்றுகிறது.

கிராமப்புற இந்தியாவோடும் கோடிக் கணக்கான விவசாயிகள் வாழ்வோடும் விளையாடக் கூடிய ‘நிலம் கையகப்படுத்தல் சட்ட’ விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்திருப்பது நல்ல ஆரம்பம். அதேசமயம், வெறும் பாவனை அரசியலுக்காக இந்த விவகாரத்தைக் கையாளாமல் தீவிரமாகவே கொண்டுசெல்வது காங்கிரஸின் துணிச்சலான முடிவு என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தச் சட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவது என்று நிற்பது மோடி அரசு மட்டும் அல்ல; அரசின் பின்னே நாட்டின் முக்கியமான பெருநிறுவனங்கள் அனைத்தும் நிற்கின்றன. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கவனிக்கின்றன. ஒரு அரசியல் கட்சி இன்றைக்கெல்லாம் பெருநிறுவனங்களைப் பகைத்துக்கொண்டு முடிவெடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதுதான் இந்தியாவின் இன்றைய கசப்பான நிலவரம். நிச்சயம் காங்கிரஸின் தொடர் எதிர்ப்பு மோடி அரசை சங்கடப்படுத்துகிறது. விவசாயச் சங்கங்களுடன் கைகோத்து இந்தப் பிரச்சினையைத் தெருவுக்குக் கொண்டுவருவதன் மூலம் மோடி அரசு ‘நிலம் கையகப்படுத்தல் சட்ட’த்தில் உள்ள பிரச்சினைக்குரிய சில பிரிவுகளையாவது விலக்கிக்கொள்ளும்படியான நிர்ப்பந்தத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கிறது.

எது எப்படியோ, காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற வேண்டும் என்றால் ஒரு வழிதான் இருக்கிறது: மீண்டும் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களை நோக்கி காங்கிரஸ் கட்சி செல்வதே அது. ராகுலின் நாடாளுமன்ற உரையைப் பார்க்கும்போது, கட்சி செல்ல வேண்டிய பாதையைப் பற்றி அவருக்கு ஒரு புரிதல் இருப்பதை உணர முடிகிறது. பொறுப்பும் விழிப்புணர்வும் கொண்ட எதிர்த் தரப்பு என்பது இல்லையென்றால் ஓர் அரசு, தான் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விடும். ஜனநாயகத்துக்கு அது நல்லதல்ல. காங்கிரஸ் உத்வேகம் பெறுவது அந்தக் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஜனநாயகத்துக்கும் நன்மையாக அமையட்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in