

இந்திய ரூபாயைச் சர்வதேசச் சந்தையில் அந்தந்த நாடுகளின் செலாவணிகளுக்கு ஈடாக நேரடியாக மாற்றிக்கொள்ளக்கூடிய காலம் ஒன்று வர வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கான காலம் கனிந்துவிட்டதாக இப்போதே அரசு நினைத்துக்கொள்ள ஆரம்பித்திருப்பது அபாயகரமானது. காரணம், இந்தியப் பொருளாதாரம் இன்னும் முழு மீட்சியை அடையவில்லை. ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பதால், நடப்புக்கணக்குப் பற்றாக்குறை தொடர்கிறது. வேலைவாய்ப்பும் உற்பத்தியும் பெருக வில்லை. விவசாயத் துறையும் நல்ல நிலையில் இல்லை. சேவைத்துறை பல்வேறு சோதனைகளைச் சந்தித்துவருகிறது. விலைவாசி குறைவாக இருந்தாலும் முழுதாகக் கட்டுக்குள் வந்துவிட்டது என்று சொல்வதற் கில்லை. இந்திய வங்கித் துறையும் வாராக் கடன்களின் தொகை அதிகரிப்பால் விழிபிதுங்கிக்கொண்டிருக்கின்றன.
தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் இந்த நேரடி செலாவணிப் பரிமாற்றம் பெரிய வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது ரிசர்வ் வங்கியின் அனுமதியின் பேரில், அவரவர் தனித்தனியாக விண்ணப்பித்துத் தங்கள் தேவைக்கேற்ப அந்நியச் செலாவணியைப் பெற்றுவருகின்றனர். அதாவது, செலாவணிப் பரிமாற்றம் என்பது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலில், அதன் கண்காணிப்பில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலைமாறி ‘முதல் கணக்கு’ அல்லது ‘மூலதனக் கணக்கில்’ரூபாயைப் பிற நாட்டுச் செலாவணிகளுக்கு ஈடாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர் அளவாக இருப்பதுடன் தொடர்ச்சியாகவும் (தொய்வு இல்லாமல்) இருக்க வேண்டும். பணவீக்க வீதமும் (விலைவாசி), வங்கி வட்டி வீதமும் குறைவாக இருக்க வேண்டும். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாக இருக்க வேண்டும். இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் குறுகிய காலத்துக்கு மட்டும் வருவதும் போவதுமாக இருக்கக்கூடாது. ஆனால், இந்தியாவில் இருப்பதோ இவற்றுக்கு நேர்மாறான நிலை.
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி விடுமோ என்று இந்தியா வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்திவிட்டால், ஏராளமான முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அங்கே சென்றுவிடுவார்கள். அதனால், இங்கே பலத்த சரிவும் நிலையற்ற தன்மையும் ஏற்பட்டுவிடும். 1998-ல் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடி நமக்கு உணர்த்தியதே இது சாத்திய மில்லை என்பதைத்தான். வளமான நடப்புக்கணக்கு உபரி கையிருப்பு, மிகக் குறைந்த அளவிலான வெளிநாட்டுக் கடன் சுமை, வலுவான வங்கிக் கட்டமைப்பு ஆகிய மூன்றும் இருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் சிறிதும் சலனம் அடையாத வகையில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே, ஏதாவது ஒரு நிகழ்வால் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்தால் அதன் விளைவுகள் பெரிதாக இருக்கும்.
சமீப காலமாகத்தான் இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் கடன் வாங்கவும் விதிகளைத் தளர்த்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, மூலதன அல்லது முதல் கணக்கை ரூபாய் கணக்கில் மாற்ற வேண்டும் என்ற துடிப்பை நிறுத்திக்கொண்டு, பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதே இப்போது நாம் செய்ய வேண்டிய வேலை!