Published : 16 Apr 2015 08:58 AM
Last Updated : 16 Apr 2015 08:58 AM

வெறுப்பை வெறுப்பே வீழ்த்தும்!

ஜனநாயகத்தின் நெறிமுறைகளை மேலும்மேலும் மீறிக்கொண்டே இருக்கிறது சிவசேனா. அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத், முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதியதை வேறெப்படிச் சொல்வது. தொடர்ச்சியாகச் சிறுபான்மையினரின் உரிமைகளும் நலன்களும் தாக்குதலுக்கு இலக்காகிக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு கொள்ளியை வைக்கிறார் ரவுத்.

இப்படியெல்லாம் நடந்துகொள்வது சிவசேனாவுக்கு மட்டுமே உரிய பண்பன்று. சிவசேனாவின் நகலான ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையும் இதைப் போன்ற பிரிவினை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள்தான். போதாதென்று, பாஜகவின் மகாராஷ்டிரப் பிரிவும் மகாராஷ்டிரத்தின் மொழி, கலாச்சாரக் காவலர்களுக்கான போட்டியில் முஷ்டியை முறுக்கி நிற்கிறது. பிரதான நேரத்தில் மராட்டி மொழித் திரைப்படங்களைத் திரையிட வேண்டும் என்ற ஆணையும், செம்மொழி அல்லாத மராத்தி மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வாங்கித்தருவதற்கான உள்வேலைகளும் அதன் வெளிப்பாடுதான். காங்கிரஸுக்கு மட்டுமல்ல, சிவசேனாவுக்கும் மாற்றாக உருவாக வேண்டும் என்ற அந்தக் கட்சியின் எண்ணம்தான் மேற்கண்ட செயல்பாடுகளுக்குக் காரணம்.

தனது அரசியல் எதிரிகளால் மட்டுமல்ல, கொள்கைக் கூட்டாளி களாலும் மிகவும் பதற்றமான ஒரு நிலையை சிவசேனா எட்டியிருக்கிறது. பால்தாக்கரேவின் மரணத்துக்குப் பிறகு கட்சி உருக்குலைந்து விடும் என்றே பலரும் கணித்தனர். அந்தக் கட்சியிலிருந்து பலரும் பிரிந்துபோய், சிவசேனாவைவிடத் தீவிரமாக இயங்கும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையில் இணைந்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், உத்தவ் தாக்கரே அந்த எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, வெறுப்பு அரசியல் மூலம் தனது கட்சியைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்திய சம்பவங்கள் அந்தக் கட்சியின் நீண்ட காலச் செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் என்றாலும் தற்போதைய செயல்பாடுகளுக்குக் கூடுதல் அர்த்தமும் இருக்கிறது. கட்சியை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்த நோக்கத்துக்கான கருவிகள்தான் மகாராஷ்டிரக் கலாச்சாரம், மொழி, இனம், மற்றும் முஸ்லிம் வெறுப்பு எல்லாமே.

முஸ்லிம்களின் ஓட்டுரிமையைப் பறித்துவிட வேண்டும் என்பது அரசியலில் நேரடிப் பங்கு வகிக்காத தீவிர இந்துத்துவ அமைப்புகள்கூட சொல்லத் தயங்குவது. இதுபோன்ற செயல்பாடுகளில் பாஜககூட பல சமயங்களில் வெளிப்படையாக ஈடுபடாது என்பதே சிவசேனா கட்சி மற்றும் அதன் கிளைநதியான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை ஆகியவற்றின் தீவிரத் தன்மையை நமக்குப் புலப்படுத்தும். இந்த வெறுப்பு அரசியல், இந்தியாவின் சாபக்கேடாகிவருகிறது. சம்பந்தப்பட்ட இன, மொழி மக்களிடையே இந்த வெறுப்பு அரசியலுக்கு அங்கீகாரமும் கிடைத்துவிடுவதுதான் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறது.

ஒரு விஷயம் இவர்களுக்குப் புரிவதில்லை. இந்தியாவின் பெருமை என்பது அதன் சகிப்பின்மையில் அல்ல, சகிப்புத்தன்மை யில்தான் நிறைந்திருக்கிறது. ‘பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக் கொள்ளுதல்’ என்ற பொருள் இருப்பதால் சகிப்புத்தன்மை என்றுகூட சொல்லக் கூடாது. ‘ஒத்திசைவு’ என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒத்திசைவான வாழ்க்கையால்தான் இந்தியா உலகுக்கே முன்னுதாரணமாக இருக்க முடியும். அதை ஒழித்துக்கட்டுவதன் மூலம் அல்ல. இந்தியச் சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் அமைதியான சகவாழ்வு வாழ்கிறார்கள் என்பதே இந்தியாவுக்குப் பெருமை.

வெறுப்பைத் தங்கள் அரசியல் ஆயுதமாகக் கொள்பவர்கள் அந்த வெறுப்பாலேயே வீழ்ந்துபோவார்கள் என்பதே வரலாற்று நீதி. மகாராஷ்டிர அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளும் உணர வேண்டிய உண்மை இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x