

மக்களவையில் அமளி அல்லது சர்ச்சை ஏற்பட்டால் அதை அடக்கி, அவையை நடத்த வேண்டிய அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடந்த வாரம் அடுத்தடுத்து இரு நாட்களில் அளித்த ஒரே மாதிரியான தீர்ப்பால், அவரே சர்ச்சைக்குக் காரணமாகிவிட்டார்.
பிரதமர் மோடியைக் குறிவைத்துச் சொல்லப்பட்ட வார்த்தைகளை அவைக் குறிப்பில் ஏற்றக் கூடாது என்று உத்தரவிட்டு, எதிர்க் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். விவசாயிகளின் கடன் சுமை, தற்கொலை, டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஒரு விவசாயி தூக்கில் தொங்கி இறந்தது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் பகவந்த் மான் பேசினார். ‘மன்-கி-பாத்’ என்ற வானொலி உரையில் நாட்டு மக்களுடன் பிரதமர் பேசுவதைவிட, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதும் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நீக்குவதும் முக்கியமானது என்று மான் குறிப்பிட்டார். ‘மன்-கி-பாத்’ என்று குறிப்பிட்டு உறுப்பினர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று சுமித்ரா உடனே உத்தரவிட்டார். “பிரதமரை அவை உறுப்பினர்கள் விமர்சிக்கவே கூடாதா, ஏன் அந்த வார்த்தையை நீக்கச் சொன்னீர்கள்?” என்று எல்லா எதிர்க் கட்சி உறுப்பினர்களும் ஆட்சேபம் தெரிவித்ததும், “பிரதமரை விமர்சிக்கக் கூடாது என்று கூறவில்லை, எல்லாவற்றிலும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் பேசக் கூடாது என்பதற்காகத்தான் அப்படி உத்தரவிட்டேன்” என்று கூறித் தன்னுடைய முந்தைய உத்தரவைத் திரும்பப் பரிசீலிப்பதாகக் கூறி, பிறகு நீக்கப்பட்ட வார்த்தைகளை அவைக் குறிப்பில் சேர்க்க அனுமதித்தார். சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் குறித்து நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.சி. வேணுகோபால் கூறியதையும் அவ்வாறே அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.
மோடி அரசு பதவிக்கு வந்த கடந்த 11 மாதங்களாகவே மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே விவாதங் களின்போது பதற்றம் தொடர்கிறது. அவைத் தலைவர் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவே கருதுகிறார்கள் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்.
இந்த நாட்டின் முதல் பிரதமரான நேருவைவிடவா ஒருவர் பெரும் பான்மையுடன் ஆட்சியில் அமரப்போகிறார்? அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரைவிடவா ஒரு தலைவர் நேசிக்கப்படப்போகிறார்? நேரு எவ்வளவு விமர்சிக்கப்பட்டார்? நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர் களால் விமர்சிக்கப்படும் முதல் பிரதமரும் மோடி இல்லை, கடைசி பிரதமரும் அவரில்லை. மிகுந்த செல்வாக்கும் வலுவும் உள்ள தலைவ ரான மோடிக்கு, மகாஜன் தரும் இந்தப் பாதுகாப்பு அவசியமற்றது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவைத் தலைவர்களுடைய வேலை என்பது நீதிபதியுடைய வேலையைப் போல நடுநிலையானது. அவைத் தலைவரான பிறகு, கட்சியின் மீதுள்ள பாசத்தையும் கட்சித் தலைவர் மீதுள்ள விசுவாசத்தையும் தூர ஒதுக்கி வைத்துவிட வேண்டும். நாடாளு மன்றத்தின் பாரம்பரியத்தையும் கண்ணியத்தையும் அவை உறுப்பினர் களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். அவை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அவைத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது, அனைவரையும் கட்டுப்படுத்துவது. அவர் எல்லோருக்கும் பொதுவானவராகவும் நடுநிலையுடனும் இருக்க வேண்டும். மக்களவைத் தலைவர் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
மேலும், அவர் நியாயமாக நடந்துகொள்கிறார் என்பது பலரும் பார்க்கும்போது புலப்படவும் வேண்டும்.