

காஷ்மீரில் மஸரத் ஆலம் பட் தலைமையேற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் பாகிஸ்தான் கொடியை ஏந்திச் சென்றதால், மஸரத் ஆலம் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீரில் பதவியேற்றிருக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் ‘வருடிக் கொடுக்கும்’ அணுகுமுறை காரணமாக 6 வாரங்களுக்கு முன்புதான் மஸரத் விடுதலை செய்யப்பட்டார். இப்போது மறுபடியும் கைது! இந்தக் கைதுக்குப் பிந்தைய ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
மஸரத் ஆலம் மிகவும் பிரச்சினைக்குரிய நபர்; வன்முறையையும் கலவரங்களையும் தூண்டக்கூடியவர். 2010-ல் நடந்த கல்லெறி சம்பவத்துக்குத் தூண்டுதலாக இருந்தவர் இவர்தான். அந்தச் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். கடந்த புதன்கிழமை அன்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில், மஸரத்தின் தலைமையில் சென்ற இளைஞர்களின் கூட்டம் பாகிஸ்தான் கொடியை ஏந்திக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். ஏற்கெனவே, பிரிவினைவாதத்தாலும் பாகிஸ்தான் ஊடுருவலாலும் இந்திய ராணுவத்தின் அத்துமீறலாலும் பற்றியெரிந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினையில் மேலும் தூபம் போட்டிருக்கிறது இந்தச் சம்பவம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வீட்டுச் சிறையில் வைக்கப் பட்ட மஸரத் பிறகு சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் மஸரத்தை எப்படிக் கையாள்வது என்பதில் ஆரம்பத்திலிருந்தே முரண்பட்டுக் கொண்டிருந்தன. மஸரத்தை விடுதலை செய்வதற்கு முன்பு தன் ஆட்சிக் கூட்டாளியான பாஜகவிடம் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆலோசிக்கவே இல்லை. அது மட்டுமா, மஸரத் ஆலத்திடம் எந்த உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அவரை விடுதலை செய்ததை என்னவென்று சொல்வது?
மஸரத் ஆலத்தை விடுதலை செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருந்ததென்றால், சட்டம் - ஒழுங்கு காரண மாக அவரைக் கைதுசெய்யும்படி மக்கள் ஜனநாயகக் கட்சி தற்போது தள்ளப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஒருங்கிணைக்கவும் வாய்ப்பைத் தந்ததைத் தவிர, மஸரத்தின் விடுதலையும் கைதும் வேறு எதையும் சாதிக்கவில்லை. எது எப்படியிருந்தாலும் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை என்பதே நிதர்சனம்.
அரசியல்ரீதியாகப் பார்த்தால், இந்த விவகாரத்தில் சிக்கிக்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. வன்முறையால் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் அந்த மாநிலத்தில், பாகிஸ்தான் கொடியை ஏந்துதல், இந்திய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்புதல் போன்றவையெல்லாம் சிறு குற்றங்களாகப் பார்க்கப்படலாம். ஆனால், காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை மஸரத் ஆலம் ஏந்துவதன் பின்னணியில் உள்ள இந்திய விரோத நடவடிக்கைகளை காஷ்மீர் அரசு உதாசீனப்படுத்திவிட முடியாது. இதுபோன்ற அடையாள எதிர்ப்புகளைத் தடுக்கவில்லையென்றால், பிரிவினைவாத சக்திகள் மேலும் மேலும் வலுப்படவே செய்யும்.
காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதிலோ, இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள் அடியோடு நிறுத்தப் பட வேண்டும் என்பதிலோ சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் காஷ்மீர் சுயாட்சி என்பது இந்திய இறையாண்மைக்கு உட்பட்டே பரிசீலிக்கப்பட வேண்டியது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இதில் பிரிவினைவாத சக்திகளுக்கு இடம்கொடுப்பது காஷ்மீரைப் படுகுழியில்தான் கொண்டுபோய்த் தள்ளும். மஸரத் கைது நடவடிக்கை, பிரிவினைவாதிகளுக்குத் தெளிவான எச்சரிக்கையைக் கொடுத்திருக்கும் என்றே நம்புவோம்.