

சமையல் எரிவாயுவுக்கான மானியத் தொகை வேண்டாம் என்று வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரை 2.8 லட்சம் வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவுக்கான மானியத்தைத் துறந்ததால், அரசுக்கு ரூ.100 கோடி மானியச் செலவு குறைந்திருக்கிறதாம். வசதி படைத்தோர் எல்லோரும் முன்வந்து சமையல் எரிவாயுவுக்கான மானியத் தொகையை விட்டுக்கொடுத்தால், அரசுக்கு மேலும் மானியச் சுமை குறையும்; அந்தத் தொகையைக் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அரசு பயன்படுத்தலாம் என்பது பிரதமர் விடுத்திருக்கும் செய்தி.
நாட்டில் இருக்கும் பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 8%. ஆனால், கிட்டத்தட்ட 40% குழந்தைகளை அவை ஈர்க்கின்றன. அரசுப் பள்ளிகள் நாளுக்கு நாள் நோஞ்சான்களாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் புதிதாக ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் தன்னுடைய ரூ. 17.77 லட்சம் கோடி செலவு நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் ரூ. 69,075 கோடி (கடந்த முறையைக் காட்டிலும் ஒதுக்கீடு குறைவு). எல்லாத் துறைகளிலுமே தன்னுடைய பொறுப்புகளைக் கை கழுவிவிட்டு, நழுவும் திசையிலேயே இந்த அரசு பயணிக்கிறது என்பதைப் பாமர மக்களும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஏதோ சமையல் எரிவாயுவுக்கான மானியத் தொகையை மிச்சப்படுத்தித்தான் நாம் கல்விக்கான கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பது போன்ற மாயையை உருவாக்கும் பிரதமரின் பேச்சை என்னவென்று சொல்வது?
பெருநிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச்சலுகையாகவும் நடப்பு நிதியாண்டில் அளிக்கப்பட்டுள்ள தொகை மட்டும் ரூ.62,398 கோடி. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் ஏற்றுமதி நிறுவனங்களின் லாபத்துக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கின் மதிப்பு ரூ.18,393 கோடி. ஆனால், ஏன் குடிமக்களுக்குக் கொடுக்கப்படும் மானியம் மட்டும் இந்த ஆட்சியாளர்களின் கண்களை இப்படி உறுத்துகிறது?
வசதி படைத்தவர்கள் என்று பிரதமர் குறிப்பிடுவது யாரை, அதானிகளையா? அவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். பிரதமர் எதிர்பார்க்கும் அளவுக்கு ஒரு பெருந்தொகை மானியத்தில் மிச்சப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரு பெருங்கூட்டமே விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால், பிரதமர் யாரைக் குறிப்பிடுகிறார்? வருமான வரி செலுத்தும் எல்லோரையுமா? ஒருவேளை அப்படியாக இருந்தால், மிகவும் ஆபத்தான போக்கு இது. வருமான வரி செலுத்து பவர்கள் எல்லாம் இந்நாட்டில் வசதியானவர்களும் இல்லை; வரி செலுத்தாத எல்லோருமே ஏழைகளும் இல்லை.
அரசுப் பள்ளிகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் எல்லாத் தரப்பினருக்குமே இடம் உண்டு என்றாலும், எல்லோரும் அங்கு செல்வ தில்லை. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் பெரும் பாலானோருக்கு அரிசி கிடைக்கும் என்றாலும், எல்லோரும் ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவது இல்லை. எவருக்கெல்லாம் வெளிச் சந்தையில் வாங்க சக்தியில்லையோ, அவர்களே அரசின் இடம் தேடி வருகிறார்கள். எரிவாயு மானியத்துக்கும் இது பொருந்தும். தேவை இருப்பவர்களே காஸ் முகவாண்மை நிறுவனங்களில் வரிசையில் நிற்கிறார்கள்.
தன்னுடைய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்வது மக்கள்நல அரசொன்றின் அடிப்படைக் கடமை. உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தன்னுடைய குடிமக்களுக்காகச் செய்வது சொற்பம். அப்படிப் பட்ட சொற்ப உதவிகளிலும் கைவைப்பது சிக்கனமும் அல்ல; சிறந்த நிர்வாகமும் அல்ல!
யானைகளை நழுவ விட்டு எறும்புகளைப் பிடிக்க வேண்டாமே!