

பூதாகரமாகியிருக்கிறது இணைய நடுநிலை (நெட் நியூட்ராலிடி) விவகாரம். கடந்த ஆண்டின் இறுதியில், ஏர்டெல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடமிருந்து ‘ஸ்கைப்’ பயன்பாட்டுக்காகக் கட்டணம் பெறுவது என்று முடிவெடுத்தபோது, இந்தியாவில் முதன் முதலில் இணைய நடுநிலையைப் பற்றி பெரிய அளவில் பேச ஆரம்பித்தோம். ‘எல்லாம் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும், பாரபட்சம் கூடாது’ எனும் குரல்கள் முழக்கமாக மாறியபோது ஏர்டெல் தன் முடிவைத் திரும்பப் பெற்றது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) இது தொடர்பாக தெளிவான வரையறைகளை வகுக்கும் வரை ‘ஸ்கைப்’ பயன்பாட்டுக்குக் கட்டணம் வசூலிப்பதில்லை என்று ஏர்டெல் அறிவித்தது. அடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் ‘இன்டெர்நெட்.ஆர்க்’ எனும் திட்டத்தை அறிவித்தபோது பெரிய சப்தம் இல்லை. இந்த மவுனத்தின் பின்னுள்ள அரசியலை ‘தி இந்து’ அப்போதே கேள்விக்குள்ளாக்கியது (‘பெருநிறுவனங்கள் தீர்மானிப்பதல்ல இணையச் சுதந்திரம்!’ 18/2/15).
இந்த ‘இன்டெர்நெட்.ஆர்க்’ திட்டமானது, குறிப்பிட்ட சில இணைய தளங்களை மட்டும் இணைத்து இலவசச் சேவை அளிக்கும் திட்டம். இந்தத் திட்டத்தின்படி இணைய வசதி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என்றாலும், எந்தெந்தத் தளங்கள் வாடிக்கை யாளருக்குக் கிடைக்கும் என்பதை நிறுவனங்களே தீர்மானிக்கும். இந்தியர்களுக்கான இணைய சேவை அவரவர் தேர்வுப்படியானதாக இருக்க வேண்டுமே தவிர, அதை அளிக்கும் நிறுவனங்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்பதை நாம் வலியுறுத்தியிருந்தோம். இப்போது மீண்டும் விவாதமாகியிருக்கிறது இணைய நடுநிலை விவகாரம், ஏர்டெல் நிறுவனத்தின் ‘ஏர்டெல் ஜீரோ’ திட்டத்தின் மூலம். ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சில வலைதளங்களை இலவசமாக அளிக்கும் திட்டம் இது. கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, முன்னணி இணைய விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட்டும் தொடர்ந்து மேலும் பல நிறுவனங் களும் இத்திட்டத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது சூழலை இன்னும் சூடாக்கியிருக்கிறது.
இத்தகைய சூழலில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட, 20 கேள்விகள் அடங்கிய 118 பக்க கருத்துக் கேட்பு அறிக்கைக்கு நல்ல எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை ‘இணைய நடுநிலை குலைக்கப்படக் கூடாது’ என்று கூறி மின்னஞ்சல் அனுப்பியிருக் கிறார்கள். அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஊடகங்கள் என்று பலரும் இணைய நடுநிலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
பெருநிறுவனங்களைப் பொறுத்த அளவில் இந்தியா என்பது பெரும் சந்தை. இந்தச் சந்தையை வைத்து எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பதே அவர்களுடைய மூலநோக்கமாக இருக்கும். இதைத் தவறென்று சொல்ல முடியாது; ஏனென்றால், சந்தைப் பொருளாதாரத்தின் ரத்த அணுக்களிலேயே புதைந்திருப்பது லாப வேட்கை. ஆனால், நிறுவனங்களைக் கையாள்கையில், எங்கே பிடியை நெகிழ்த்துவது, எங்கே இறுக்கிப்பிடிப்பது என்பதில் ஒரு அரசாங்கத்துக்குத் தெளிவு இருப்பது அவசியம். இணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் / வசதி மட்டும் அல்ல. ஒரு புத்தகம்போல நம் அறிவைச் செழுமையாக்கும், ஒரு பள்ளிக்கூடம் / நூலகம்போல, அறிவைப் பரவலாக்கும் உன்னதமான அமைப்பு அது. சுதந்திரத்துடன், ஜனநாயகத்துடன் தொடர்புடைய முக்கியமான கருவி அது. இணையச் சமநிலை விஷயத்தில் இரு வேறு விவாதங்களுக்குத் தேவை இருக்கிறதா, என்ன? தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் விரைவாக!