நேபாளத் துயரம்!

நேபாளத் துயரம்!
Updated on
2 min read

ஆற்ற முடியாத துயரம்! நேபாளத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் தான். கடந்த சனிக்கிழமை காலையில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலநடுக்கம் நேபாளத்தை ஒட்டி அமைந்திருக்கும் பிஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய இந்திய மாநிலங் களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிலநடுக்கத்தால் இந்த மாநிலங்களில் இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இமயமலைக்கு அடியில் செல்லும் கண்டத்தட்டுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 7.9 ஆகப் பதிவாகியிருந்தது. கிட்டத்தட்ட 20 அணுகுண்டுகள் ஒன்றாக வெடித்ததற்கு இணையான சக்தி இந்த நிலநடுக்கத்தால் வெளிப் பட்டிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலநடுக் கத்தைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பின்னதிர்வுகளும் ஏற்பட்டன. இதில் ரிக்டர் அலகில் 6.7 அளவிலான நிலநடுக்கமும் அடங்கும்.

1,400 மைல்கள் நீளமுள்ள இமயமலைத் தொடருக்குக் கீழே செல்லும் கண்டத்தட்டுக் கோடு (ஃபால்ட்லைன்) மிகவும் முக்கியமான புவியியல் பரப்பு. சரியாக அந்த கண்டத்தட்டுக் கோட்டுக்கு மேலாகத்தான் நேபாளம் அமைந்திருக்கிறது. அதனால் தொடர்ச்சியாக நிலநடுக்க அபாயப் பகுதியாகவே இந்தப் பகுதி இருந்துவருகிறது. கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பகுதியில் கடுமை யான நிலநடுக்கம் ஏற்படுவதாக 1255-லிருந்து கிடைத்த தரவுகள் தெரிவிக்கின்றன. 1934-ல் இங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளம், இந்தியாவில் பிஹார் ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர்.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் வீடு, கட்டிடங்கள் போன்றவை அமைக்கப்படும் விதத்தில் கவனம் செலுத்தியிருந்தால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பானைக் காட்டுகிறார்கள். ஜப்பானில் எவ்வளவு தீவிரமான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் மிகக் குறைவாகவே உயிரிழப்புகள் ஏற்படுவதை நாம் உற்றுநோக்க வேண்டும். கட்டிட அமைப்புகள், பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவற்றை அரசும் அமைப்புகளும் மட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் கடைப்பிடித்துவருவதால்தான் அங்கே உயிரிழப்புகளும் சேதங்களும் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன.

நிபுணர்கள் சுட்டிக்காட்டும் வேறு திசை இன்னும் அதிக அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதுபோன்ற நிலநடுக்கம் டெல்லியில் ஏற்பட்டால் கிட்டத்தட்ட பாதி நகரம் தரைமட்டமாகி, நேபாளத்தைவிட அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்திய நிலப்பரப்பில் 58.6% பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப் பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பூமிக்குக் கீழே நிரந்தரமாக ஆயிரக் கணக்கான அணுகுண்டுகளை வைத்திருப்பதுபோல் எப்போதும் நிலநடுக்க அபாய வளையத்தில் இந்தியாவின் பெரும் பாலான நிலப்பரப்பு இருக்கிறது. ஆனாலும், இதுபோன்ற பேரிடர்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது என்ற தொலைநோக்குப் பார்வை துளியும் இல்லாமல் நகரங்கள் கட்டமைக்கப்படுகின்றன, விரிவுபடுத்தப் படுகின்றன.

நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவை வந்தால் நம்மால் தடுக்கவும் முடியாது. ஆனால், முன்னெச்சரிக்கை உணர்வு இருந்தால் பெரும்பாலான சேதங்களைத் தவிர்க்கலாம். இதைத்தான் ஒவ்வொரு இயற்கைச் சீற்றமும் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம்தான் கற்றுக்கொள்வதில்லை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in