கருப்பு: தோலிலா, மனத்திலா?

கருப்பு: தோலிலா, மனத்திலா?
Updated on
2 min read

பாஜக அமைச்சர்கள், எம்பிக்களின் சர்ச்சைக்குரிய பேச்சு என்று இணையத்தில் தேடினால் ஏராளமாகக் கிடைக்கின்றன. பிற மதத்தினரை அவமதிக்கும் விதமான பேச்சுகள், அறிவியலுக்கு எதிரான பேச்சுகள், பிற கட்சித் தலைவர்கள் பற்றிய அவதூறுகள் என்று நீண்ட பட்டியல் இது. இந்த சர்ச்சைப் பேச்சுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றிருக்கும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் பேச்சு மிக மோசமான உதாரணம்.

ராஜீவ் காந்தி நைஜீரியப் பெண்ணை மணந்திருந்தால் அவரைக் கட்சியின் தலைவராக காங்கிரஸார் ஏற்றுக்கொண்டிருப்பார்களா என்று அவர் பேசியிருப்பது சகித்துக்கொள்ளவே முடியாத ஒன்று. ஒரு கட்சியின் தலைவராகப் பதவி வகிப்பதற்கு, வெள்ளை நிறத்தைத் தவிர, வேறு தகுதிகளே இல்லை என்ற விதத்தில் கிரிராஜ் சிங் கருத்துத் தெரிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது. அதேசமயம், அவரது பேச்சு இந்தியாவின் பெரும்பான்மையானவர்களின் மனப்பான்மையின் எதிரொலிதான். உண்மையில் இந்தியாவில் சிவப்பு நிறத்தின் மீதான பிரேமை அதிகம். கிரிராஜ் சிங், பிஹாரில் இவ்வாறு பேசினார் என்றால், பாஜக ஆளும் கோவா மாநில முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் செவிலியர்களிடம் பேசிய பேச்சும் அநாவசியமானது, பெண் களை இழிவுபடுத்துவது. “வெயிலில் அமர்ந்து போராடினால் உங்கள் நிறம் கருத்துவிடும். அப்புறம், உங்களைத் திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்கள்” என்று செவிலியப் பெண்களிடம் அவர் கூறியிருக்கிறார்.

இருவரின் பேச்சுகளும் இந்தியாவில் புதிதாக ஒலிக்கும் கருத்துகள் அல்ல. மணமக்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் திருமணத் தகவல் மைய இணையதளங்கள் ‘சிவப்பு நிற மணமகள்’ என்று விளம்பரம் செய்கின்றன; ‘ஐந்தே நாட்களில் சிவப்பு நிறத்தைப் பெறலாம்’ என்று அழகு சாதனப் பொருட்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன. வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், திருமணமாக வேண்டும் என்றாலும் அதற்கு சிவப்பு நிறம் தேவை என்ற கருத்து திணிக்கப்படுகிறது.

ஆனால், இந்தியப் புராணங்களிலும் கதைகளிலும் கருப்பு நிறப் பெண்கள், அவர்களின் நிறத்துக்காகவே கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரெளபதி, கருப்பு நிறத்திலான தனது தோல் மீது பெருமை கொண்டவளாக இருக்கிறாள். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘கிருஷ்ணகாளி’ கவிதையில் கவிதை நாயகியின் கருப்பு நிறத்தை அவர் கொண்டாடியிருக்கிறார்.

இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தின் மீது பற்றுக்கொண்டவர் களின் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியைச் சேர்ந்த கிரிராஜ் சிங்கும், லக்ஷ்மிகாந்த் பர்சேகரும் அவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இருவரும் மத்திய - மாநில அரசுகளில் உயர் பதவிகளை வகிப்பவர்கள். ஒருவர் மத்திய அமைச்சர். இன்னொருவர் மாநில முதல்வர். தாங்கள், முன்மாதிரியாக இருக்க வேண்டிய தலைவர்கள் என்பதை இருவரும் மறந்துவிட்டார்கள். கிரிராஜ் சிங் காங்கிரஸ் கட்சியை மட்டும் அவமதிக்கவில்லை; நமது நட்பு நாடுகளில் ஒன்றான நைஜீரியாவைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துத்தான் அவமதித்திருக்கிறார்.

இதுபோன்ற பேச்சுகள் நிறம் தொடர்பான மோசமான சிந்தனையை மட்டும் கொண்டிருக்கவில்லை. பெண்களின் பாதுகாப்பு, அரசியலில் பெண்களுக்கு உரிய பங்கை வழங்குவதுகுறித்த விவாதங்கள் நடந்துவரும் சூழலில் அவற்றைச் சிதைக்கும் விதமாகவே அமைந்திருக்கின்றன!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in