

மகத்தான எழுத்து ஆளுமை ஜெயகாந்தன் உடல் வடிவத்தில் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார்.
ஒரே நேரத்தில் வெகுஜன வாசகர்களாலும் தீவிர இலக்கிய வாசகர்களாலும் அதிகமாக நேசிக்கப்பட்டவர் அநேகமாக நம் காலத்தில் ஜெயகாந்தனாக மட்டுமே இருக்க முடியும். 50-களில் எழுத ஆரம்பித்த ஜெயகாந்தன், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் எழுத்துலகில் தீவிரமாகச் செயல்பட்டார். 80-களின் இறுதியில் எழுத்துப் பயணத்தைக் கிட்டத்தட்ட நிறுத்திக்கொண்டார். ஜெயகாந்தன் எழுத்தை விட்டுவிட்டபோதிலும் வாசகர்கள் ஜெயகாந்தனை விடாமல் படித்துக்கொண்டிருந்தார்கள்.
இன்னமும் அதிகம் விற்பனையாகும் தரமான எழுத்துகளில் ஜெயகாந்தனின் படைப்புகளுக்குத்தான் முதலிடம். அந்த அளவுக்குச் சமூகத்தைத் தனது எழுத்தாழத்தால் கட்டிப்போட்டவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனை இன்று வாசிக்க வரும் ஒரு புதிய வாசகருக்கு அவரது காலத்தில் அவர் எப்படிப்பட்ட புரட்சியை நிகழ்த்தினார் என்பதைப் புரிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கலாம். இலக்கியம், இசை, நாடகம் போன்ற எல்லாக் கலைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பொழுதுபோக்குத் திரைப்படங்களே சமூகத்தில் ஆக்கிரமிப்பு நிகழ்த்தத் தொடங்கியிருந்த காலம் அது. அப்போது இரண்டு வித எழுத்தாளர்கள்தான் இருந்தார்கள்.
ஆழமான படைப்புகளை எழுதிய, மாற்றுச் சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் முதல் வகையினர். இவர்களுடைய எழுத்துகளை மிகக் குறைந்த அளவிலான வாசகர்களே படித்தனர். ஒருவகையில் சமூகத்தின் பொழுதுபோக்கு எழுத்துக்கு எதிராகவும் மேலோட்டமான வாசிப்புக்கு எதிராகவும் சிறு தளத்தில் தொடர்ந்து போராட்டம் நிகழ்த்தியவர்கள் இவர்கள். இவர்களுக்கு எதிர்த் தளத்தில் பெரும் பத்திரிகைகளில் எழுதிய பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் விரிவான வாசகப் பரப்பைக் கொண்டிருந்தாலும், இவர்களுடைய படைப்புகளில் புரட்சிகரக் கருத்துகளையோ, மாற்றுச் சிந்தனையையோ, சமூகத்தின் மீது ஆழமான அக்கறையையோ குறைவாகத்தான் காண முடிந்தது. இந்தச் சூழலில்தான் ஜெயகாந்தன் உள்ளே நுழைகிறார்.
சிறுபத்திரிகைகள் என்ற சிறிய தளத்திலிருந்து பெரும் பத்திரிகைகளின் உலகத்தில் கால்வைக்கிறார். அவருடைய வருகை அமைதியான வருகையாக இல்லை. புயல்போன்ற ஆர்ப்பாட்டமான வருகை.
பழமைவாதத்தாலும் பிற்போக்குத்தனத்தாலும் மேலோட்டமான வாசிப்புகளாலும் இறுகிப்போன வாசக மனங்களை ஜெயகாந்தன் தனது புரட்சிகரமான, ஆவேசமான, உத்வேகமிக்க எழுத்துக்களால் தொடர்ச்சியாகத் தகர்க்க ஆரம்பித்தார். வாசகர்களுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், ஜெயகாந்தன் எழுத்தின் வசீகரம் அவர்களை மயக்கவும் செய்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெகுஜன இதழ்களில் அவர் நிகழ்த்தியதைத் தனிநபர் புரட்சி என்றே சொல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல ஜெயகாந்தனின் சாதனை. தன்னைப் படிக்க ஆரம்பித்த வாசகர்களை மேலும் மேலும் ஆழமான எழுத்துக்களை நோக்கி அவர் செலுத்தினார். ஜெயகாந்தனைப் படிக்க ஆரம்பித்த பிறகே பலரும் புதுமைப்பித்தன், மௌனி, தி. ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். இப்படியாக ஒரு எழுத்தியக்கமாகச் செயல்பட்டவர் ஜெயகாந்தன்.
தமிழ்ச் சமூகம் ஜெயகாந்தனைக் கொண்டாடியது உண்மைதான் எனினும் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளின் மகத்தான எழுத்தாளர்களை அவர்களின் சமூகம் கொண்டாடுவதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களுக்கு நாம் அவமரியாதை செய்துவருகிறோம் என்ற உண்மைதான் வெளிப்படும். சமீபத்தில் கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்தி மறைந்தபோது கர்நாடக அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்தது. ஆனால், நம் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் எந்தவொரு எழுத்தாளரும் அப்படியெல்லாம் கவுரவிக்கப்பட்டதில்லை என்ற உண்மை சுடுகிறது.
ஆங்கிலேயர்கள் தங்கள் தேசத்தைவிட ஷேக்ஸ்பியரை மிகவும் முக்கியமாகக் கருதுவது ஏன்? தங்கள் மொழிக்கும் நாட்டுக்கும் அவரால் மேன்மை ஏற்பட்டது என்பதால்தானே. ஆனால், மொழியை முன்னிறுத்தி எப்போதும் பெருமை பேசும் நாம் அந்தப் பெருமைக்குக் காரணமாக இருக்கும் மாபெரும் எழுத்தாளர்களை அவர்கள் வாழும் காலத்தில் கைவிடுவதும், இறந்த பிறகும் உரிய மரியாதை செலுத்தாமல் போவதும் நமது சமூகத்தின் சாபக்கேடு. இந்த சாபக்கேடு வரலாற்றுக்கு விடைகொடுக்கும் பணியை ஜெயகாந்தனிடமிருந்து தமிழர்கள் தொடங்கவேண்டும். அதுதான் ஜெயகாந்தனுக்கான மகத்தான அஞ்சலி!