

நேதாஜி தொடர்பான ஆவணங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் எனும் குரல்களின் தொடர்ச்சியாக, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டத்தைத் திருத்துவதுகுறித்து ஆராயக் குழுவொன்றை நியமித்திருக்கிறது மத்திய அரசு. முக்கியமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கும் ரகசியங்கள் காப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கும் இடையே உள்ள முரண்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது.
அரசு ரகசியங்கள் காப்புச் சட்டத்துக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(2)-வது பிரிவு, ‘ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் வந்தாலும் அந்தத் தகவலை வெளியிடுவதால் அரசின் ரகசியத்துக்கு ஏற்படும் பாதிப்பைவிடப் பொது நலனுக்கு ஏற்படும் நன்மை அதிகம் என்றால், ரகசியத்தைக் காப்பதற்காகத் தகவலை வெளியிடாமல் மறைக்க வேண்டியதில்லை’ என்கிறது. ஆனால், ரகசியம் எது, பொதுநலன் எது என்பது தொடர்பாக ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு விதத்தில் விளக்கம் அளிக்கக் கூடும். எனினும், தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் என்பவை நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும்; வெளிப்படையாகவும், மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவையாகவும் இருக்க வேண்டும் என்பதே நல்ல ஜனநாயகத்துக்கு அடையாளமாக இருக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1923-ல் கொண்டுவரப்பட்ட காலனி யாதிக்கச் சட்டங்களில் ஒன்று, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம். ஆங்கிலேய அரசின் செயலை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, அது தொடர்பான தகவல்களைத் திரட்டக் கூடாது, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது எனும் நோக்கங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட சட்டம் இது. சுதந்திரத்துக்குப் பின் இச்சட்டம் திருத்தப் பட்டது. ஆனால், பொதுமக்களால் எதுவும் அலசப்பட முடியாதபடிக்கு அந்தத் திருத்தம் திரைபோட்டுவிட்டது. மேலும், சட்டத்தின் வாசகங்கள் பல மிகவும் விரிந்து, பலவிதமாகப் பொருள் கொள்ளும்படியும், தெளிவில்லாமலும் அமைந்துவிட்டன. ஓர் உதாரணம், ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என்று சில இடங்களை அச்சட்டத்தின் 2(8)(டி) பிரிவு தெரிவிக்கிறது. இப்படித் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அருகே சென்றால்கூட ‘உளவு பார்த்ததாக’ அவர்கள் மீது வழக்குத் தொடர அச்சட்டத்தின் பிரிவு-3 வகைசெய்கிறது. கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்: ஒரு ஊரின் ரயில் நிலையம், சாலை, வாய்க்கால், நிலம் வழியாகவும் நீர் வழியாகவும் தொடர்புகொள்ளக் கூடிய பாதை என எதையும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்கலாம். விளைவு, இந்தச் சட்டம் பல முறை அரசால் தவறாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. ஒருமுறை உளவு அமைப்பான ‘ரா’வில் நிலவும் ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும்பற்றிப் பேசிய போது, இப்போதைய வெளியுறவு இணை அமைச்சரும் முன்னாள் தளபதியுமான வி.கே.சிங் கூடப் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டின் வெளியுறவு, பாதுகாப்பு, அறிவியல்-தொழில்நுட்ப ஆராய்ச்சி, வியாபார உறவுகள் தொடர்பாக எந்த நாடும் சில ரகசியங் களைக் காப்பது அவசியமானது. அதேசமயம், எந்தச் சட்டம்/ நடவடிக்கையாக இருந்தாலும், அது தேச நன்மையையும் பொது நன்மையையும் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும். அரசு ரகசியக் காப்புச் சட்டங்களின் மோசமான அம்சங்களைக் கடந்த கால அனுபவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. குறைகளைக் களைந்து கொள்வதே ஆரோக்கியமான எந்த அமைப்புக்கும் நல்லது!