Published : 06 Mar 2015 08:51 AM
Last Updated : 06 Mar 2015 08:51 AM

ஆம் ஆத்மி: மாற்றமா, ஏமாற்றமா?

அரசியல் கட்சிகளின் உட்பூசல்கள் ஜனநாயகத்தில் இயல்பானவை மட்டுமல்ல; ஒரு வகையில் ஆரோக்கியமானவையும்கூட. மேலிருந்து திணிக்கப்படும் உத்தரவுகளுக்கு மாறாக முரண்பாடுகளுக்கு இடையே முகிழ்க்கும் கருத்தொற்றுமைதான் ஆரோக்கியமானது. பூசல்களைப் பொறுத்தவரை இந்தியக் கட்சிகள் ஜனநாயகபூர்வமானவைதாம். ஆனால், இங்கே பூசல்கள் கொள்கை அடிப்படையிலோ, மக்கள் மீதான கரிசனத்தின் விளைவாகவோ ஏற்படுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள பூசல் கொள்கை அடிப்படையிலானது என்ற வகையிலும் அக்கட்சி தனித்து நிற்கிறது. ஆனால், அதைக் கையாளும் விதத்தில் பிற கட்சிகளின் போக்கையே பிரதிபலிக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் கேஜ்ரிவாலின் சர்வாதிகாரம் பற்றிக் கேள்வி எழுப்பியதால் எழுந்த பூசல், இந்த இருவரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்ட நிலையில் உச்சத்தை எட்டியிருக்கிறது.

பூஷணும் யாதவும் எழுப்பும் கேள்விகள் அவர்களது சொந்த நலன் சார்ந்த கேள்விகள் அல்ல. தனிப்பட்ட பிரச்சினைகளை மறைப்பதற்கான முகமூடிகளாகப் பொதுப் பிரச்சினைகள் சார்ந்த கோஷங்களை முன்வைக்கும் போலித்தனத்திலும் இவர்கள் ஈடுபடவில்லை. கட்சி தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் சிலரது பின்னணி முதலான சில பிரச்சினைகள் குறித்து இவர்கள் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை. எந்தக் காரணத்துக்காக ஆம் ஆத்மி வித்தியாசமான கட்சி என்று கருதப்படுகிறதோ அந்தக் காரணத்தைக் குறித்த கவலையை வெளிப்படுத்தும் கேள்விகள் இவை. இந்தக் கேள்விகளை நேரடியாக எதிர்கொள்வதன் மூலம் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பை அந்தக் கட்சி தவறவிட்டுவிட்டது. கட்சியின் அடித்தளமாகச் சொல்லப்பட்ட அறநெறிகள் இப்போது பல்லிளிக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

தலைவரின் ராஜினாமா நாடகம், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படுவது ஆகியவை இந்தியாவில் காலங்காலமாக உட்கட்சி ஜனநாயகத்தைப் பரிகசித்துவரும் உத்திகள். ஜனநாயக பாவனைகளின் மூலம் அரங்கேற்றப்படும் எதேச்சதிகாரத்தின் ஆயுதங்கள். ஆம் ஆத்மியும் இவற்றைக் கைக்கொள்வது அக்கட்சியின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.

புரையோடிப் போன கட்சி அரசியல் களத்தில் மாற்று சக்தியாகக் கருதப்படுவதுதான் ஆம் ஆத்மியின் மீதான நம்பிக்கைக்குக் காரணம். மாற்று சக்தி என்னும் வகையில் அக்கட்சி ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கை அதன் எதிர்ப்பாளர்களும் அங்கீகரிக்கும் அளவுக்கு வலுவானதாகவே உள்ளது. முதல் முறை ஆட்சியைப் பிடித்த விதம், அதைத் துறந்த சூழல், பிறகு தேர்தலைச் சந்தித்த விதம் ஆகிய அம்சங்கள் அந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கின்றன. அத்தகைய நம்பிக்கையைச் சிதைப்பது அந்த நம்பிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் அறநெறிகளைக் கைவிடுவதாகவே அமையும். அந்த நெறிகள் இல்லாமல் கட்சி மட்டும் இருக்கும் என்றால் அந்தக் கட்சியின் இருப்புக்கு எந்த அர்த்தமும் இருக்காது. பத்தோடு பதினொன்றாக அல்ல, மாற்றுச் சிந்தனை, மாற்று அணுகுமுறை என்பதாகத்தான் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தார்கள்.

இந்திய அரசியலின் நோய்க்கூறுகளைத் தவிர்க்கும் நம்பிக்கையைத் தரும் கட்சி பெறும் வெற்றி என்பது அரசியலில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும் என்னும் நம்பிக்கையின் வெற்றி. அந்தக் கட்சியின் செயல்பாடுகள் நம்பிக்கையை இழக்கும் வண்ணம் அமைவது என்பது ஆரோக்கியமான அரசியலுக்கான நம்பிக்கையைச் சிதைக்கக்கூடிய விபத்து. அந்த விபத்தைத் தவிர்ப்பது ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல; இந்திய அரசியலுக்கும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x