

சட்டத்தை ஒரு கும்பல் கையில் எடுத்துக்கொண்டால் என்னவாகும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது திமாபூர் சம்பவம். நாகாலாந்தில் கல்லூரி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைதுசெய்யப்பட்டு, திமாபூர் நகர மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சையது ஃபரீத் கான் (35), வன்முறைக் கும்பலால் சிறையிலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். சிறு வியாபாரியான அவர் வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறியவர்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடந்த சம்பவத்தை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார் ஃபரீத் கான். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சிறைச்சாலைக்கு ஊர்வலமாகச் சென்ற கும்பல், சிறைக் காவலர்களை அடித்து நொறுக்கிவிட்டு, ஃபரீத் கானை வெளியே இழுத்துவந்திருக்கிறது. 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணிக்கூண்டு பகுதி வரைக்கும் அவரைத் தெருவில் இழுத்துச் சென்ற அந்தக் கும்பல், அவரை நிர்வாணப்படுத்திக் கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறது. படுகாயங்களால் அவர் மணிக்கூண்டு பகுதியிலேயே இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ளவர் முஸ்லிம் என்பதுடன் வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறியவர் என்பதும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இணைய உலகில் வெறுப்புப் பிரச்சாரம் வெகு வேகமாக நடந்துவருவதால் இணையம், குறுந்தகவல் போன்றவை நாகாலாந்தில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
குற்றம்சாட்டப்பட்டவர் மீதான வழக்கு விசாரணையில் இருக்கும் போதே மக்களுக்கு எப்படி இவ்வளவு ஆத்திரம் வந்தது, சிறைக் காவலர்களை அடித்து உதைக்கும் அளவுக்கு அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் யார் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இப்படி ஒரு கொடூரமான தீர்ப்பை மக்கள் கூட்டமே நிறைவேற்றும் என்றால் அரசு எதற்கு?
கும்பல் வன்முறை என்பது இந்தியச் சமூகத்தைப் புற்றுநோயாக அரிக்க ஆரம்பித்திருக்கிறது. எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் சட்டப்படி அவரை விசாரித்துவிட்டுத் தண்டிப்பதுதான் முறை. கும்பல்கள் நியாயம் வழங்க ஆரம்பித்தால் நாளடைவில் ஆளுக்கொரு நியாயம், ஆளுக்கொரு அநியாயம் என்று ஆகி, நம் சமூகம் பல நூற்றாண்டுகள் பின்செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியையும் பின்விளைவுகளையும் பார்க்கும்போது, பாலியல் சம்பவத்தால் ஏற்பட்ட கோபத்தைவிட இனரீதியான, மதரீதியான துவேஷங்களே பிரதான காரணமாக இருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது. இறந்தவருக்கு மட்டுமல்ல, அந்த மாநிலத்தில் இருக்கும் வங்கதேசிகளுக்கும் மறைமுக எச்சரிக்கையை இதன் மூலம் விடுத்துள்ளார்கள். இந்தச் செயல் நியாயம்தான் என்று சிவசேனை பத்திரிகையின் ‘சாம்னா’ தலையங்கம் தீட்டியிருப்பது தற்செயலானது அல்ல. இப்படி வெறுப்பை வளர்த்து மக்களை உசுப்பிவிடும் அரசியலைத்தான் இது போன்ற சக்திகள் தொடர்ந்து செய்துவருகின்றன.
கும்பல் எப்படிச் சேர்ந்தது, அவர்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் யார் என்றெல்லாம் விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டும். அதேபோல், பாலியல் வல்லுறவு வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், நியாயம் பிறழாமல் தண்டனை வழங்கவும் காவல் துறையும் நீதித் துறையும் முன்னுரிமை வழங்க வேண்டும். கும்பல்களின் கையில் எந்த நியாயத்தையும் காரணத்தையும் அரசே வழங்கிவிடக் கூடாது என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.