Published : 12 Mar 2015 08:27 AM
Last Updated : 12 Mar 2015 08:27 AM

மென்மையான கண்டிப்பு இனியும் வேண்டாம்!

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்துக்குப் பிறகு, இலங்கை செல்லவிருக்கும் முதல் பிரதமர் நரேந்திர மோடிதான். இந்த நிலையில், “கடல் எல்லையைத் தாண்டி, இலங்கைக் கடல் பகுதிக்கு வரும் இந்திய மீனவர்களைச் சுடுவது நியாயம்தான்” என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது சுருதிபேதமாக ஒலிக்கிறது.

வேறு நாட்டுக் கடல் எல்லைக்குள் புகுந்துவிடும் மீனவர்களைச் சுடக் கூடாது என்ற சர்வதேசச் சட்டங்களுக்கு முரணாகவும் நியாயமான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது அவருடைய பேச்சு. மீன்பாடு தேடிக் கடலில் பயணிக்கும் மீனவர்கள் வழி தவறிச் செல்வதும் கடலில் ஏற்படும் நீரோட்டங்களாலோ இதர இயற்கைக் காரணங்களாலோ திசை தெரியாமல் தடுமாறிச் செல்வதும் வழக்கம் தான். இதற்காகச் சுடுவோம் என்று ஒரு நாட்டின் பிரதமர் பேசலாமா?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவைச் சந்தித்தபோது தன்னுடைய எதிர்ப்பை நேரடியாகத் தெரிவித்திருக்கிறார். இத்தாலியக் கடற்படையினரை இந்தியக் கடற்படையினர் விரட்டிச் சென்று கைதுசெய்ததை இதற்கு உதாரணமாக ரணில் காட்டியிருக்கிறார். இரு சம்பவங்களின் பின்னணியுமே வேறு என்பதை சுஷ்மா உணர்த்திய பிறகே, தான் தவறாகப் புரிந்துகொண்டதை ரணில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த, ஆயுத மேதுமற்ற நிராயுதபாணிகளை முன்னறிவிப்பு ஏதும் தராமல், இத்தாலியர்கள் சுட்டுக்கொன்றது குற்றம் என்பதால்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்தச் சம்பவமும் இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது எல்லையைத் தாண்டுவதும் எப்படி ஒன்றாகிவிட முடியும்?

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை, இரட்டை மடி வலையுடன் கடலை அரித்து மீன்களை மட்டுமல்லாது மீன் குஞ்சுகளையும் சேர்த்துப் பிடித்து கடல் வளத்தையே வற்றச் செய்துவிடுகிறார்கள் என்று இந்திய மீனவர்கள் மீது, குறிப்பாகத் தமிழக மீனவர்கள் மீது இலங்கை குற்றம் சாட்டிவருகிறது. இதனாலேயே கடலில் இந்திய மீன்பிடிப் படகுகளைத் தங்கள் எல்லைக்குள் கண்டால், விரட்டிச் சென்று சுடுவது, வலைகளை அறுத்துக் கடலில் வீசுவது, மீனவர்களைக் கடுமையாகத் தாக்குவது, மீன்பாடுகளைக் கைப்பற்றுவது என்றெல்லாம் அத்துமீறுகிறது. பல வேளைகளில் மீனவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுடன் படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகிறது. சமரசப் பேச்சுகளுக்குப் பிறகு, கைதான மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்படுகின்றனர். படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. சில வேளைகளில் இலங்கைப் படையினர் தமிழக மீனவர்களைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

இலங்கை இந்த விஷயத்தில் தொடர்ந்து கடுமையான போக்கைக் கடைப்பிடித்தாலும் இந்திய அரசு அதையெல்லாம் பார்த்துக்கொண்டு மென்மையாகக் கண்டிப்பதுடன் நின்றுவிடுகிறது. இலங்கைதான் இதுபோன்று நடந்துகொள்கிறதே தவிர, இந்தியா அப்படியெல்லாம் நடந்துகொள்வதில்லை. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் பல சமயங்களில் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களை இந்தியா இப்படியா நடத்துகிறது? இப்போது, இந்தியா விடுக்கக்கூடிய எச்சரிக்கை வழக்கமானதாக இல்லாமல் இனிமேல் இதுபோன்றெல்லாம் அத்துமீறுவதற்கு இலங்கை அஞ்சக்கூடிய வகையில் இருப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x