அதிமுக, திமுக... உங்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் மக்கள்!

அதிமுக, திமுக... உங்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் மக்கள்!
Updated on
2 min read

பொதுவாகப் பார்க்கும்போது சாதாரண நிகழ்வுதான். தமிழகச் சூழலோடு ஒப்பிடும்போது முக்கியமானதாக மாறிவிடுகிறது. அவ்வளவு எளிதாகக் கைகோக்காத அதிமுக, திமுக இரு கட்சிகளும் கைகோத்திருக்கின்றன, காவிரி விவகாரத்துக்காக.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணைகள் கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியிருக்கிறது. ஏற்கெனவே, தமிழகத்தின் காவிரிப் படுகை மாவட்டங்களுக்குப் போதிய நீர் கிடைக்காமல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிக்கொண்டிருக்கும் விவசாயிகள், மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், என்ன செய்வதென்று தெரியாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் விவசாயிகள் என்று காவிரிப் படுகையின் நிலை பேரவலமாக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில், புதிய அணை முயற்சிகள் கடுமையான விளைவுகளை உருவாக்கும். கர்நாடக அரசியல்வாதிகளுக்கு இது தெரியாததல்ல. ஆனாலும், உள்ளூர் அரசியலில் தங்கள் கையை உயர்த்த நினைக்கும்போதெல்லாம் தமிழகத்தைக் குத்திப் பார்ப்பது நம்முடைய அண்டை மாநிலங்களின் இயல்பு; அதைத் தட்டிக் கேட்காமல் அரசியல் உள்நோக்கங்களோடு வேடிக்கை பார்ப்பது மத்திய அரசின் வாடிக்கை; நம்முடைய சாபக்கேடு.

காவிரி விவசாயிகள் தொடர் போராட்டங்களின் விளைவாக, இந்த விவகாரத்தில் கர்நாடகத்தின் அணுகுமுறையைக் கண்டித்து தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனை வரும் ஒன்றாகச் சென்று இந்தத் தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் அளித்திருக்கிறார்கள்.

பொது நோக்கங்களுக்காகவும் தங்கள் மாநில நலன்களுக்காகவும் இப்படி ஒன்றாகக் கைகோப்பது கர்நாடக அரசியல்வாதிகளிடத்திலோ, கேரள அரசியல்வாதிகளிடத்திலோ மிகவும் இயல்பான ஒன்று. கேரளத்தில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து முன்னெடுப்பதும், கம்யூனிஸ்ட்டுகள் அரசு கொண்டு வரும் திட்டங்களை காங்கிரஸ் அரசு அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதும் எல்லோரும் அறிந்ததே. அதேபோல் சமீபத்தில் நீர்த்தாவா ஒன்று ஏற்பட்டபோது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் சந்தித்துப் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மத்தியிலும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. டெல்லி தேர்தலுக்குப் பிறகு, மோடி-கேஜ்ரிவால் சந்திப்பு மிகவும் பிரபலமான உதாரணம்.

தமிழகமும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் ஆக்கபூர்வமான அரசியலுக்கும் அரசியலைத் தாண்டிய உறவுகளுக்கும் முன்னுதாரணமாக இருந்த மாநிலம்தான். ஆனால், அதெல்லாம் இன்றைக்கு ‘அந்தக் காலம்’. குறிப்பாக, கடந்த கால் நூற்றாண்டில் எவ்வளவு மோசமான உதாரணம் ஆக முடியுமோ அவ்வளவு மோசமாகிவிட்டது. சட்டசபைக் கூட்டங்கள்கூட எப்படி ஆகிவிட்டன? சட்டசபை ஏதோ தனக்கு மட்டுமே உரித்தானது என்பதுபோல ஆளும்கட்சியும், வெளி நடப்பும் எதிர்க் குரலும் மட்டுமே சட்டசபைப் பணி என்பதுபோல எதிர்க் கட்சிகளும்... எல்லாவற்றையும் வேதனையோடும் விரக்தியோடும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இந்நிலையில், டெல்லி சந்திப்பு ஒரு ஆறுதல். ஆனால், இதை ‘அரிய நிகழ்வாக’ ஆக்கிவிடாமல் நல்ல தொடக்கமாக உருமாற்ற வேண்டும். அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே இந்தக் கடமை உண்டு. மக்கள் உங்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in