ஏலம்-வெற்றியா, முட்டுக்கட்டையா?

ஏலம்-வெற்றியா, முட்டுக்கட்டையா?
Updated on
1 min read

‘ஸ்பெக்ட்ரம்’ அலைக்கற்றைக்கான பொது ஏலத் தொகை இதுவரை ரூ. 1,02,215 கோடியைத் தாண்டியிருக்கிறது. தொடக்கத்தில் இந்த ஏல இலக்கு ரூ. 82,000 கோடியாக இருந்ததால், இந்த ஏலம் வெற்றி என்பதை மறுக்கவியலாது. எனினும், நுகர்வோரின் நிலையிலிருந்து பார்த்தால், அவர்கள் இந்தச் சேவைகளைப் பெறக் கூடுதல் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அலைக்கற்றைகளைப் பெறுவதற்குத் தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்தால், லாபம் சம்பாதிப்பதற்காக சேவைக் கட்டணத்தை அவை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையென்றால், புதிய அடித்தளக் கட்டமைப்பில் செய்யும் முதலீடுகளை அந்த நிறுவனங்கள் தள்ளிவைக்க வேண்டும் அல்லது ஒரேயடியாகக் கைவிட வேண்டும். இந்தியாவை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் லட்சியத்துக்கு இது ஏற்புடையதாக இருக்காது.

2010-ல் அலைக்கற்றைகளுக்கான கட்டணம் அதிகமாக இருந்ததால் தான் 3-ஜி மற்றும் செல்பேசி அகலக் கற்றை சேவையின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது. அப்போதும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் கோரப்பட்டது. சேவை அளிப்பவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு ஏலத் தொகையை உயர்த்திக்கொண்டே போனார்கள். அப்படிப் பணம் செலவழித்து அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றவர்களால், அடித்தளக் கட்டமைப்பில் அதிகம் முதலீடு செய்ய முடியாமல் போனதால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் 3-ஜி பிரிவில் நுகர்வோரால் தரமான சேவையை இன்னமும் பெற முடியவில்லை. சராசரி இணைப்பு வேகம் 1.3 எம்.பி.பி.எஸ்-களாகவே (எம்.பி.பி.எஸ். = மெகாபைட் பெர் செகண்ட்) இருக்கிறது. ஆசிய நாடுகளில் இதுதான் மிகமிகக் குறைந்த திறன்!

நாடு முழுக்க 100 அதிநவீன நகரங்களை ஏற்படுத்தும் திட்டம், மின்-ஆளுமைத் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தக் குறைந்தபட்சம் 2 எம்.பி.பி.எஸ். வேகம், அதுவும் நுகர்வோரால் எளிதில் செலுத்தக்கூடிய விலையில் இருக்க வேண்டும். இதற்கு, தொலைத்தொடர்பு சேவை அளிப்பவர்களுக்குப் போதிய அளவு அலைக்கற்றைகள், நியாயமான விலையில் அளிக்கப்பட வேண்டும். முதலில் வந்தவருக்கே முன்னுரிமை, நுகர்வோரை மையமாகக் கொண்ட அணுகுமுறை போன்ற கடந்த கால விற்பனை வழிகளைவிட ஏலமுறை வெளிப்படையானது. ஆனால், அந்த ஏலத்தைப் பிசகான நடைமுறைகளுடன் கையாண்டதற்கான பழியை இப்போதைய மத்திய அரசுதான் ஏற்றாக வேண்டும். 2,100 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை பேண்டில் 5 மெகாஹெர்ட்ஸை மட்டும் ஏலம் விடுவது என்ற முடிவு அப்படிப்பட்டது. 5 மெகாஹெர்ட்ஸ் பிளாக் ஒரு சேவைதாரர் 3ஜி சேவை அளிக்கப் போதுமானது. களத்தில் 8 பேர் இருந்ததால் போட்டிபோட்டு ஏலத்தொகையை ஏற்றிவிட்டனர்.

இந்தியாவை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றால், வருவாயை மட்டும் பார்க்காமல் குறைந்த செலவில் அது அனைவரின் கைகளுக்கும் போய்ச்சேர்வதற்கான வழியைப் பார்க்க வேண்டும். அலைக்கற்றை ஏலம் மூலம் அதிக வருவாய் அரசுக்குக் கிடைக்கும் அதே வேளையில், டிஜிட்டல்மயம் என்ற கனவுக்கு முட்டுக்கட்டை விழுந்துவிடும் போலிருக்கிறது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in