

‘கிரீன்பீஸ்’ என்ற தன்னார்வத் தொண்டுநிறுவனத்தின் செயல் பாட்டாளர் பிரியா பிள்ளை விவகாரத்தில், அவரைத் ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தும் அளவுக்கு அரசு சென்றது செயல்பாட்டாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரியாவைத் ‘தேடிப் பிடிக்குமாறு’ அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் தலையிட்டு ரத்துசெய்து தீர்ப்பளித்திருக்கிறது.
கடந்த ஜனவரி 11-ம் தேதி பிரிட்டன் செல்ல பிரியா பிள்ளை திட்டமிட்டிருந்தார். அவரை புதுடெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தி வெளிநாடு செல்லாமல் தடுத்துவிட்டனர். அப்படித் தடுத்தது ஏன் என்பதற்கு விளக்கம் எதையும் அளிக்கவில்லை. பிரியாவிடம் ஏதும் விசாரிக்காமலேயே உளவுத்துறையின் புலனாய்வுப் பிரிவு (ஐ.பி.) மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கை இது. உளவாளிகள், பயங்கரவாதிகள், தேசவிரோத சக்திகள் போன்றோருக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய சட்டப் பிரிவை, ஐ.பி. அதிகாரிகள் தன்னிச்சையாக பிரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவை அவதூறு செய்யவும், இந்தியப் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கவும் திட்டமிட்டே அவர் பிரிட்டன் செல்ல முயன்றார் என்று அந்தத் துறையினர் கருதியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் தொல்குடியினரைப் பாதிக்கும் ‘மஹான்-கோல்’ என்ற கூட்டு செயல்திட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த எஸ்ஸார் எனர்ஜி நிறுவனம் சேர்ந்து செயல்படுவதால் அந்த நிறுவனத்தை அந்தத் திட்டத்திலிருந்து விலக்குமாறு கோர, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்திக்க பிரியா திட்டமிட்டிருந்தார் என்பதால் இந்தத் தடை நடவடிக்கையை உளவுப் பிரிவு போலீஸார் எடுத்துள்ளார்கள்.
இந்திய அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு அளிக்கும் உயிர் வாழும் உரிமை, விருப்பப்படி எதையும் செய்யும் உரிமை ஆகியவற்றைப் போன்றதே விரும்பியபடி பயணம் செய்வதும் என்று கருதி, அதைத் தடை செய்வது சரியல்ல என்று நீதிபதி ராஜீவ் ஷக்தர் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத் தக்கது. பிரியாவின் கொள்கைகளை அரசு ஏற்கவில்லை என்பதற்காக, வெளிநாடு சென்று அவர் அதைத் தெரிவிக்கக் கூடாது என்று பயணத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் நீதிபதி விளக்கியுள்ளார். இந்தக் காரணத்தைச் சொல்லி பிரியாவைத் தேச விரோதி என்று முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். தனது செயலுக்கு வலுசேர்க்க அரசு புதிய ஆதாரம் எதையும் அளிக்காததால், ‘கிரீன்பீஸ்’ இயக்கத்தின் வங்கிக் கணக்கை முடக்கியதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்க்கும் தன்னார்வத் தொண்டுநிறுவனங்களையும் அவற்றின் உறுப்பினர் களையும் பார்த்தால் அரசுக்கு இனம் புரியாத அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுவிடுகிறது. தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் எல்லாவற்றையும் நாம் நம்பிவிட முடியாதுதான்; அதே நேரத்தில் எல்லாவற்றையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும் தவறு. உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல், கல்வி போன்றவற்றில் தொண்டுநிறுவனங்கள் குறிப்பிடத் தக்க அளவு பணியாற்றியிருப்பது மறுக்க முடியாத உண்மை. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்ப்பவர்களை இப்படியெல்லாம் ஒடுக்குவது ஜனநாயகத்துக்கே விரோதமானது என்பதை அரசு ஒருபோதும் மறந்துவிடலாகாது.