

காஷ்மீர் பிரிவினைவாதி மஸரத் அலமை முஃப்தி முகம்மது சயீத் அரசு விடுவித்திருப்பது பாஜகவுக்கும் மஜகவுக்கும் (மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும்-பி.டி.பி.) இடையே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. 2010-ல் கல்லெறியும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் மஸரத் அலம். இந்தப் போராட்டம் 100-க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைவதற்குக் காரணமாக அமைந்தது. தனது கூட்டணிக் கட்சி அலமை விடுதலை செய்ததால் ஏற்பட்ட சங்கடத்தில் நெளியும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்த விடுதலையைத் தான் ஆதரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.
அலமை விடுதலை செய்வதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. ஆனால், தன் செயலுக்காக வருத்தம் எதுவும் தெரிவிக்காத ஹுரியத் பிரிவினைவாதி ஒருவரை விடுதலை செய்தது காஷ்மீருக்கு வெளியே உள்ள மக்களுக்குத் தவறான சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகளைச் சமன்செய்வதற்காகவும், காஷ்மீரில் இருக்கும் பிரிவினைவாதிகளிடையே தன் பிடியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும்தான் அலமை மஜக தலைமையிலான அரசு விடுதலை செய்திருக்கிறது என்று கருதத் தோன்றுகிறது. பாஜக இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுக்காத கட்சியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் மஜகவுக்கு உள்ளது. தனது ஆதாரமான பலத்தைத் தக்கவைத்துக்கொண்டால்தான் கூட்டணியில் வலுவான கூட்டாளியாக அது தன்னை முன்னிறுத்திக்கொள்ள முடியும் என்று அது நினைக்கிறது.
அலம் விடுதலையால் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அதிகம்தான். தேசபக்தி பற்றி எதிர்க் கட்சிகளிடமிருந்து பாடம் படிக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறார். இந்தச் சர்ச்சையின் சூடுதான் அவரை இப்படிப் பேசவைத்திருக்கிறது. பாஜகவின் பொறுமையை முடிந்தவரையிலும் சோதித்துப் பார்த்துவிடுவது என்னும் முடிவில் சயீத் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அலமின் விடுதலை ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க எந்த விதத்திலும் உதவாது என்பதே நிதர்சனம். அமைதி, சமாதானம் ஆகியவற்றுக்கான முயற்சிகளை இது மேலும் கடினமாக்கிவிடக்கூடும். தண்டிப்பதற்கான அதிகாரத்தைப் போலவே மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.
காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமானால் அனைத்துப் பிரிவு மக்களையும் உள்ளடக்கிய விவாதங்கள் நடைபெற வேண்டும். தீவிரப் போக்காளர்கள், பிரிவினை கோருபவர்கள் ஆகியோரையும் அதில் உள்ளடக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ‘நீ பெரியவனா, நான் பெரியவனா?’ என்று கூட்டணிக்குள் மல்லுக்கட்டுவதில் அர்த்தம் இல்லை.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் முக்கியம். பிரச்சினையின் வரலாறு, அங்குள்ள மக்களின் ஜனநாயகரீதியிலான அபிலாஷைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்வுக்கான விரிவான உரையாடல்கள் நடத்தப்படுவதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அரசியல்ரீதியான தீர்வு எட்டப்படுவதுதான் முக்கியம். அதற்குமுன், அலம் விடுதலை போன்ற நடவடிக்கைகளில் நிதானம் சிதறுவது காஷ்மீரின் அமைதியை மேலும் கேள்விக்குறியாக்கிவிடும்.