

மகாராஷ்டிர அரசு சமீபத்தில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறது. ஒன்று, முஸ்லிம்களுக்கான 5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இன்னொன்று, மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது.
2014, ஜூலையில் அப்போதைய மகாராஷ்டிர அரசு ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அது மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16% ஒதுக்கீடு வழங்கியது. முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டையும் வழங்கியது. அவசரச் சட்டத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மராத்தா சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்குவதற்கான திட்டத்தையும் நிறுத்திவைத்தது. ஆனால், கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதை நீதிமன்றம் ஏற்றது.
கடந்த டிசம்பரோடு அந்த அவசரச் சட்டம் காலாவதியானது. தற்போதைய அரசு, மராத்தாக்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கான கல்வி ஒதுக்கீட்டைத் தொடரவில்லை. அதாவது, நீதிமன்றம் அனுமதிக்காத ஒதுக்கீட்டை வழங்குகிறது; அனுமதித்த ஒதுக்கீட்டை மறுக்கிறது.
‘மத அடிப்படையில், எந்த பாரபட்சமும் காட்டப்படக் கூடாது’ என இந்திய அரசியல் சாசனம் திட்டவட்டமாகக் கூறுகிறது. ஆனால், சமூகம் மற்றும் கல்வித் துறைகளில் பின்தங்கியிருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, சமயப் பிரிவுக்குள் இருக்கும் சில உட்பிரிவுகளுக்கு ஒதுக்கீடு வழங்கலாம் என்று பல நீதிமன்றங்கள் கூறியுள்ளன. மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்களிடையே சமூக, கல்விரீதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் 50 உட்பிரிவுகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்திலும் இதுபோல 3.5% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவை மத அடிப்படையில் அல்லாமல் சமூக, கல்விரீதியிலான பின்தங்கிய நிலையின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.
சச்சார் குழு உள்ளிட்ட பல குழுக்களின் அறிக்கைகள் சமூக, கல்வி அளவில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதைப் பதிவுசெய்திருக்கின்றன. முஸ்லிம்கள் மைய நீரோட்டத்தின் மதச்சார்பற்ற கல்வியைப் பெற வேண்டுமென்றால், அதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கைகள் பரிந்துரைக்கின்றன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, மகாராஷ்டிர அரசின் முடிவு எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது என்பது புரியும்.
மாட்டிறைச்சியைப் பொறுத்தவரை சைவ, அசைவ உணவுப் பழக்கம் சார்ந்த விவாதமாக அதைப் பார்க்க இயலாது. பசுப் பாதுகாப்பு, பசுக்களைக் காப்பாற்றுவதால் வேளாண்மைக்கு ஏற்படக்கூடிய நலன்கள் ஆகியவை மாட்டிறைச்சித் தடைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. ஆனால், தடை செய்வதுதான் இதற்கான தீர்வா? பண்பாடு, வாழ்க்கைமுறை குறித்த அம்சங்களில் முறையான விவாதத்துக்குப் பிறகு சட்டம் இயற்றுவதே முறை அல்லவா?
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கே பல விதமான கோட்பாடுகளுக்கும் இடமுண்டு. இந்தியப் பொது வெளி காலந்தோறும் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறது. கோட்பாட்டுரீதியிலான மாற்றங்கள் விவாதங்களாக முன்வைக்கப்பட்டு, பிறகு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் வரவேற்கலாம். அசுர பலத்துடன் கூடிய தன்னிச்சையான முடிவுகளாக அவை அரங்கேறுவது ஆரோக்கியமானதல்ல.