Published : 30 Mar 2015 08:55 AM
Last Updated : 30 Mar 2015 08:55 AM

தாமதமாகியும் கிடைக்காத நீதி!

இருபத்தெட்டு ஆண்டுகள், 42 உயிர்கள். கடைசியில், வழக்கம் போல் அநீதிக்கே வெற்றி! இந்தியாவின் விசாரணை மற்றும் நீதித் துறை போன்றவற்றின்மீது அவநம்பிக்கை கொள்ளவைக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது!

1987-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் அது. மே 22, 1987 அன்று மீரட் நகரின் ஹஷிம்புரா பகுதியிலிருந்து ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை ‘மாநில ஆயுதக் காவல் படையினர்’ (பிஏசி) கூட்டிச் சென்றனர். அப்படிக் கூட்டிச் செல்லப்பட்ட இளைஞர்கள் சில நாட்களுக்குப் பிறகு, ஒரு கால்வாயில் பிணமாகத்தான் கிடைத் தார்கள். 42 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிஏசியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யவே 9 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதிலும் முக்கியக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதியப்படாமல் அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த 19 பேரில் 16 பேரைக் கைதுசெய்வதற்கு மேலும் 4 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதாவது, அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்குச் சிறு தண்டனைகூட இல்லாமல் தங்கள் பணிக்காலத்தைச் முற்றாக முடித்த பிறகு, 2000-ல் அவர்களாகவே சரண் அடைந்திருக்கிறார்கள். 2002-ல் அந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இறுதியில் குற்றம் நடந்து 28 ஆண்டுகள் கழித்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். போதுமான ஆதாரங்கள் இல்லாதது, சாட்சிகளால் குற்றவாளிகளைச் சரியாக இனங்காண முடியாதது போன்ற காரணங்களை வைத்து அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

தடயங்களும் ஆதாரங்களும் வேண்டுமென்றே நழுவ விடப்பட்டது தான் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாமல் போனதற்கான முக்கியக் காரணம் என்று கொலையுண்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முறையிடுகிறார்கள். கொலையுண்டவர்கள்மீது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள் குறித்த காவல் துறைப் பதிவேடுகள் எல்லாமே இடைப்பட்ட ஆண்டுகளில் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, செல்வாக்குள்ள குற்றத் தரப்பு எந்த அளவுக்கு இந்தியாவில் காப்பாற்றப்படுகிறது என்பது புலனாகிறது. கண்துடைப்பு விசாரணை, கேலிக்கூத்து நடத்தும் காவல்துறை, கண்டுகொள்ளாத அரசாங்கங்கள் என்று இந்த நெடிய காலத்தைத் தாண்டி இறுதியில் நீதி களைத்துப்போய்த் தூங்கிவிட்டது.

சிறுபான்மையினருக்கு எதிராகக் காவல்துறையும் அரசுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்தான் ஹஷிம்புரா சம்பவமும் வழக்கும். இந்தியச் சிறுபான்மையினர் உண்மையில் எந்தப் பாதுகாப்புமற்ற நிலையை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும், அரசுகளின் மீதல்ல பெரும்பான்மை மக்களின் மீதான நம்பிக்கையும், (விதிவிலக்குகளைத் தவிர்த்து) இரண்டு தரப்புகளுக்கும் இடையே காணப்படும் நட்புணர்வுமே இந்தியச் சிறுபான்மையினரைச் சற்றே சகஜமாக உணரவைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசுகளும் நீதித் துறையும் அவர்களைத் தொடர்ந்து கைவிடுவதை மனசாட்சியுள்ள எந்தப் பெரும்பான்மைச் சமூகமும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ‘இந்து பாகிஸ்தானாக இந்தியா ஆகிவிடக் கூடாது’ என்று காந்தி, படேல், நேரு போன்ற தலைவர்கள் எச்சரித்ததை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x