Published : 23 Feb 2015 09:09 AM
Last Updated : 23 Feb 2015 09:09 AM

இதயத்தைச் சுரண்டாதீர்!

இந்தியாவில் சாதாரண மக்கள் பெருநிறுவனங்களாலும் மருத்துவமனைகளாலும் சூறையாடப்படுகிறார்கள் என்பதற்கு மட்டுமல்ல, மக்கள் எப்படியெல்லாம் அரசால் கைவிடப்படுகிறார்கள் என்பதற்கும் ஓர் உதாரணம் ஆகியிருக்கிறது ‘ஸ்டென்ட்’ விலை சர்ச்சை.

ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பைப் போக்குவதற்கும் ரத்தக்குழாய்களை வலுப்படுத்துவதற்கும் ரத்தக்குழாய்களுக்குள் பொருத்தப்படும் சிறு பொருள்தான் ‘ஸ்டென்ட்’. இவற்றின் நீளம் 8 மி.மீ. முதல் 38 மி.மீ. வரை இருக்கும். கம்பிவலையால் ஆன சிறு குழாய்போல இருக்கும் இந்த ஸ்டென்ட்டுகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு வகைதான் மருந்து செலுத்தும் ‘ஸ்டென்ட்’ (டி.இ.எஸ்.). ரத்தக்குழாய்க்குள் வைக்கப்பட்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மருந்தைக் கரைய விடும் ‘ஸ்டென்ட்’ இது.

இந்தியாவில் கடந்த 2014-ல் மட்டும் சுமார் 4 லட்சம் பேருக்கு ‘ஸ்டென்ட்’டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 85% டி.இ.எஸ். வகை ‘ஸ்டென்ட்’டுகள். இப்போது இவற்றின் விலை ரூ. 65,000 முதல் ரூ. 1,00,000 வரை போய் நிற்கிறது. குறைந்தபட்சமாக ரூ. 65 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால்கூட, கடந்த ஆண்டு மட்டும் இதற்கென்று இந்திய நோயாளிகள் செலவிட்டிருக்கும் தொகை சுமார் ரூ. 2,300 கோடி. இதுவும் அந்தக் கருவிக்கான தொகை மட்டுமே. அதைப் பொருத்துவதற்கான மருத்துவரின் கட்டணம், மருத்துவமனை செலவு, பரிசோதனைகள், சிகிச்சைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் கணக்கு எங்கோ போய் நிற்கிறது.

கொடுமை என்னவென்றால், மத்திய சுகாதார அமைச்சகம் வெவ்வேறு மருத்துவத் திட்டங்களின் கீழ் இந்தக் கருவிக்கு நிர்ணயித்திருக்கும் விலை ரூ. 23,625. அதாவது, இந்த விலையில் ‘டி.இ.எஸ்.’ எல்லோருக்கும் கிடைக்கும் என்றால், வருடத்துக்குக் கிட்டத்தட்ட ரூ. 1,500 கோடி மிச்சமாகும். ஆனால், ஒட்டுமொத்த நோயாளிகளில் அரசின் மருத்துவத் திட்டங்களின் கீழ் வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30%தான்.

பெருகிவரும் இதய நோய்கள் காரணமாக ‘ஸ்டென்ட்’டுகளுக்கான சந்தை ஆண்டுதோறும் 15% அதிகரிக்கிறது. இது மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, குறைவதற்கான அறிகுறிகளே இல்லை. பெரும்பாலான மருத்துவமனைகள் மிகக் குறைந்த விலையில் ‘ஸ்டென்ட்’டுகளைப் பெற்றுக்கொண்டு, நோயாளிகளுக்குப் பொருத்தும்போது, சம்பந்தமில்லாத கூடுதல் செலவுகளையும் அவர்கள் தலையில் கட்டிவிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதைவிடக் கொடுமை, இந்திய நிறுவனங்கள் இதே சாதனத்தை ரூ. 12,000 முதல் ரூ. 30,000 வரையிலான விலையில் தருகின்றன. ஆனால், மூன்று அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பெருமருத்துவமனைகளை வைத்து நடத்தும் சூதாட்டம், நோயாளிகள் மீது பல மடங்கு சுமையைச் சுமத்தக் காரணமாக அமைகிறது. மருத்துவமனைகள் நோயாளிகளுக்கேற்ப / தங்கள் லாப நோக்கத்துக்கேற்ப விலை நிர்ணயித்துச் சுரண்டலை நடத்துகின்றன.

ஒரு மக்கள்நல அரசானது கல்வி - சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பைத் தம் கையில் வைத்திருக்க வேண்டும். அது இங்கே நடக்காத சூழலில்தான், தம் உழைப்பையும் சேமிப்பையும் தனியார் மருத்துவமனைகளின் மேஜைகளில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் இந்திய மக்கள். அங்கும் தன்னுடைய கண்காணிப்பின்மையாலும் பொறுப்பற்றதனத்தாலும் மக்களைத் தனியார் மருத்துவமனைகள் சுரண்ட அரசு அனுமதிக்கக் கூடாது. அரசு நினைத்தால், ஒரு ஆணையில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய விவகாரம் இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x